Wednesday 5 February 2020

காந்தியின் தேசம் - குஜராத்


நான் இந்தியப் பெருநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வழியே மோட்டார்சைக்கிளில் பயணித்தவன். இந்திய நிலத்தின் இந்திய மக்களின் விதவிதமான நிறங்களைக் காண வேண்டும் என்பதற்காகவே பயணம் மேற்கொண்டவன். ஒரு பயணியாக என்னால் ஒரு பிரதேசத்தைக் கண்டவுடன் அதன் அதனுடைய மக்களின் தன்மையை உள்ளுணர்வால் அறிய முடியும். நிலத்தைத் தொடர்ச்சியாக காண்பவனுக்கு உருவாகக் கூடிய உள்ளுணர்வு அது.

நான் பயணம் செய்யும் நிலத்தின் பண்டைய வரலாற்றை இலக்கியங்களை வாசித்து விட்டு அந்நிலத்தில் பயணம் செய்யத் துவங்குவேன். அவ்வாறு செய்யும் போது அந்நிலம் குறித்த கற்பனை என் மனதில் உண்டாகும். பயணத்தில் என் கற்பனையும் யதார்த்தமும் இணைந்து கொள்ளும். நான் எனக்கான புரிதலை அடைவேன்.

தமிழ்நாட்டின் மக்களுக்குப் பெரும்பாலும் பல புதிய பிரதேசங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற தீராத ஆர்வம் உள்ளது. ஆனால் அவர்களுக்கு அந்த பழக்கம் இல்லை. தமிழ்நாட்டில் நடுத்தர வர்க்க குடும்பங்கள் மிகுதி. அவர்களில் கணிசமானோர் பணி நிமித்தம் வேறு ஊர்களில் குடியேறியிருப்பார்கள். விடுமுறைகளில் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று வருவதே அவர்களுக்குப் பெரும் பயணமாக இருக்கும். தீபாவளி, பொங்கல் ஆகிய தினங்களை ஒட்டிய விடுமுறை நாட்களில் சென்னையில் வசிப்போர் பெரும்பாலானோர் மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குச் சென்று விடுவர்.

தமிழ்நாடு போன்ற பண்பாட்டு மேன்மை மிக்க மாநிலத்தில் தமிழ்நாட்டின் சிற்பங்களும் பேராலயங்களும் குறித்த கல்வி தமிழ்நாட்டின் பாடத்திட்டங்களில் இடம் பெற வேண்டும். ஒரு மாணவன் பன்னிரண்டு ஆண்டுகள் பள்ளியில் படித்து விட்டு வெளிவருகிறான் என்றால் அவன் தமிழ்நாட்டின் கலை மேன்மைகள் குறித்த குறைந்தபட்ச அறிமுகத்துடன் வெளிவரக் கூடியவனாக இருக்க வேண்டும். ஒரு ஜவுளிக்கடையில் புதிதாக வேலைக்குச் சேரும் ஒருவர் கூட அந்த கடையின் ஜவுளி வகைகளின் தனித்துவம் குறித்து வாடிக்கையாளருக்கு திருப்தியாக விளக்கும் விதத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறார். தமிழ்நாட்டுப் பாடத்திட்டத்தில் நம் பண்பாடு குறித்த எந்த அறிமுகமும் இல்லை.

தமிழ்நாடு கல்வித்துறை என்பது மிகப் பெரிய வலைப்பின்னல் கொண்டது. ஒவ்வொரு ஊராட்சியிலும் பள்ளியையையும் ஆசிரியர்களையும் கொண்டிருப்பது. கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுவது. பள்ளிக்கல்வியில் பண்பாடு குறித்தும் சுற்றுலா குறித்தும் அறிமுகம் அளிக்கப்படும் எனில் சுற்றுலா நல்ல வருவாய் அளிக்கக்கூடிய சேவையாக மாறும். லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். தமிழ்நாடு உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக் கூடியதாக இருக்கும். இன்றைய நிலை என்பது தமிழ்நாட்டின் ஏதாவது ஒரு பேராலயத்துக்குச் சென்று அங்கே வந்திருக்கும் வெளிநாட்டவர்களிடம் அந்த ஆலயம் குறித்து கேட்டால் அவர்களால் வழிகாட்டி நூல்களில் படித்த விபரங்களை ஐந்து நிமிடங்களுக்காகவாவது கூற முடியும். பெரும்பாலான தமிழ் மக்களால் ஏதும் கூற முடியாது என்ற நிலை. இதனை யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று சோதித்துப் பார்க்கலாம்.

ஒரு சமூகத்தின் மனோபாவம் என்பது அச்சமூகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கக் கூடியது. நேரடியாகச் சொன்னால் ஒரு சமூகத்தின் மனோபாவம் அச்சமூகத்தின் எதிர்கால சந்ததியினரின் பொருளியலைத் தீர்மானிக்கக் கூடியது. சூம்பிப் போன சமூகம் தனது நிகழ்காலத்தை மட்டுமல்ல தனது வருங்காலத் தலைமுறையின் எதிர்காலத்தையும் அழிக்கிறது.

தமிழ்நாட்டில் மக்களிடம் சமூகம் பற்றிய புரிதல் இல்லை. சமூக ஒற்றுமை என்பது இல்லவே இல்லை. பிறர் குறித்த ஐயத்துடனும் விலக்கத்துடனுமே எப்போதும் இருக்கின்றனர். எனவே கூட்டுச் செயல்பாடு என்பது உருவாவதே இல்லை. தமிழ்நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மக்களை எந்நிலையிலும் இணைந்திருக்காமல் பார்த்துக் கொள்கிறார்கள். மக்களை இணையாமல் பார்த்துக் கொள்வதே இங்கே அரசியல் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.

இங்கே திறன் மிக்க அரசு ஒன்று இருக்குமெனில் கால மாற்றத்தின் எல்லா அம்சங்களையும் புரிந்து கொண்டு அதனை மக்கள் நலனுக்கு ஏற்றவாறு எவ்வாறு பயன்படுத்துவது என யோசிக்கும். ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன? மது கடந்த இருபதாண்டுகளில் தமிழ்நாட்டில் சர்வசாதாரணமாக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியம் அழிக்கப்பட்டு அடித்தட்டு உழைக்கும் பெண்களின் வருவாய் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மூலம் சாராயத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. கீழ் நடுத்தர அடித்தட்டு மக்களின் ஆரோக்கியக் கேட்டுக்கும் நோய்களுக்கும் மதுவே காரணம். அது அரசாங்கத்தால் பேணி காக்கப்படுகிறது.

ஒட்டுமொத்த மானுடமும் மேலான வாழ்வை அடைவதற்கான கருவிகளும் வழிமுறைகளும் மனித குலத்துக்குக் கிடைத்திருக்கும் இந்த கால சந்தியில் நம் சமூகம் வளர்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

*

பொதுவாக நான் ஒரு விஷயத்தைக் கவனித்ததுண்டு. தமிழ்நாட்டில் மக்களின் பொது உரையாடலில் மிக அதிகமாக அரசியலும் சினிமாவும் இருக்கும். தேனீர்க்கடைகளில், கடைத்தெருவில், ரயிலில், திருமண வீடுகளில், சாவு வீடுகளில் என எங்கும் அரசியலைப் பேசிய வண்ணம் இருப்பார்கள். நான் இப்படியான பழக்கத்தை வேறு எந்த மாநிலத்திலும் கண்டதில்லை. அதற்கு வரலாற்றுக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் பல மாநிலங்கள் நிலப்பிரபுத்துவ சூழல் கொண்ட விவசாய மாநிலங்கள். வட இந்தியா ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தொடர் படையெடுப்புகளுக்கு உட்பட்டது. வட இந்தியா என்பது சுற்றிலும் நிலத்தால் சூழப்பட்டது. தென் இந்திய மாநிலங்களின் ஒருபுறத்தில் கடல் உள்ளது. ஆதலால் இங்கே கடல் சார்ந்த வணிகம் கடல் சார்ந்த போக்குவரத்து உண்டு. ஆனால் வட இந்தியா அவ்வாறானது அல்ல. அவர்களுடைய இயற்கைச் சூழல் அவர்களிடம் கடுமையான உழைப்பைக் கோருவது. மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா, பஞ்சாப், உ.பி, ம.பி, பீஹார் என பல மாநிலங்கள் இவ்வாறானவை. எனவே அவர்களிடம் நிலப்பிரபுத்துவ தன்மைகள் மிகுந்திருக்கும். அங்கே சர்க்கார் உத்யோகம் என்பது பெரிய விஷயம் அல்ல. மாநில சர்க்கார் அங்கிருக்கும் ஜாதி அமைப்புகளிடம் ஒரு குறைந்தபட்ச அமைதியை உருவாக்கி ஆட்சியை தொந்தரவு இல்லாமல் நடத்திக் கொள்வார்கள். அரசியல் கட்சிகள் அவர்களுக்குப் பணிந்தே நடக்கும். எந்த ஒரு ஜாதி அமைப்பாலும் ஓரிரு நாட்களில் லட்சக்கணக்கானோரைத் திரட்டிட முடியும். குஜ்ஜார்கள், யாதவ்கள், படேல்கள் ஆகியோர் நடத்தும் போராட்டங்கள் இதற்கு உதாரணம். ஆனால் அங்கே அனைவரும் தங்கள் விவசாயப் பணிகளில் மட்டுமே மூழ்கியிருப்பார்கள். அவர்களை கல்விக்குள் கொண்டு வருவதே கடந்த இருபது ஆண்டுகளில் மட்டுமே ஓரளவு சாத்தியமாகியிருக்கிறது.

தமிழ்நாடு கடந்த ஒரு நூற்றாண்டு காலமாகவே கல்விக்கான வாய்ப்புகள் நிறைந்திருக்கும் மாநிலமாக இருந்திருக்கிறது. பெரும் படையெடுப்புகள் இல்லாமல் இருந்தது ஒரு முக்கிய காரணம். சுதந்திரத்துக்குப் பின் ராஜாஜியும் காமராஜரும் பள்ளிக்கல்விக்கு முக்கியத்துவம் தந்தது இன்னொரு காரணம். இங்கே ஆற்றுப் பாசனத்துக்கு வாய்ப்பில்லாத மானாவாரி நிலங்களே அதிகம். ஆகவே மிகக் குறைவான ஊதியமாயிருப்பினும் அரசாங்க வேலைக்குச் செல்ல மக்கள் ஆர்வம் காட்டுவர். அரசாங்கத்தை சர்வ சக்தி வாய்ந்த அமைப்பாக எண்ணுவார்கள்
.
வட இந்திய மாநகரங்கள் பெரியவை. எல்லா வசதிகளும் கொண்டவை. எல்லா வாய்ப்புகளும் நிரம்பியவை. அவை 2500 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வசித்த உயிரோட்டத்துடன் இயங்கிய வரலாறு கொண்டவை. ஆனால் தமிழ்நாட்டின் மாநகரங்கள் அவ்வாறானவை அல்ல. தமிழ்நாட்டில் மூவேந்தர் தலைநகரங்களில் மதுரை மட்டுமே பல நூற்றாண்டுகள் தொடர்ச்சியாக மாநகராக நீடித்திருந்தது. பத்தாம் நூற்றாண்டிலிருந்து இன்று வரை பூம்புகார் ஒரு கிராமமே. தஞ்சாவூர் ஒரு சிறிய நகரமே. சென்னை மிகப் பிற்பாடு உருவாக்கப்பட்ட நகரமே.

*
இந்தியப் பிரதமர்களாக 15 பேர் இருந்துள்ளனர். அதில் ஒன்பது பேர் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்கள். இருவர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் ஆந்திராவைச் சேர்ந்தவர். ஒருவர் கர்நாடகாவைச் சார்ந்தவர். அதிகபட்ச பிரதமர்களை வழங்கியதில் முதலிடம் உத்திரப் பிரதேசத்துக்கு. இரண்டாமிடம் பஞ்சாப்புக்கும் குஜராத்துக்கும். அதன் பின் கர்நாடகாவும் ஆந்திராவும். 

உத்திரப் பிரதேசம் 85 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம். இன்றும் இந்தியாவின் அதிக மக்களவைத் தொகுதிகளைக் கொண்டிருப்பது. அங்கிருந்து இந்தியப் பிரதமர் உருவாகி வருவது இயல்பானது. காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர் குஜராத் மாநிலத்திலிருந்து வருவதும் ஐந்து முழு ஆண்டுகளை பூர்த்தி செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் குஜராத் மாநிலத்திலிருந்து வருவதும் கவனிக்கத் தக்கது. குஜராத்தின் மொத்த மக்களவைத் தொகுதிகள் 26. இந்திய நாடாளுமன்றத்தில் வெறும் ஐந்து சதவீத இடம் மட்டுமே கொண்ட மாநிலம் குஜராத். 

குஜராத்திகளின் இயல்பைப் புரிந்து கொண்டோமெனில் அவர்கள் செயல் வேகத்தைப் புரிந்து கொள்ள முடியும். இம்முறை குஜராத் சென்றிருந்த போது, நான் அம்மாநிலத்தின் சிறு நகரங்களைக் கவனித்தேன். 150 மீட்டர் நீளம் கொண்ட ஒரு தெரு ஒரு நகரில் இருக்கிறது எனில் அத்தெருவில் 20 அபார்ட்மெண்ட்கள் இருக்கின்றன. மற்ற மாநிலங்கள் எனில் அத்தெருவில் 15-17 வீடுகள் இருக்கும். மூன்று அபார்ட்மெண்ட்கள் இருக்கும். ஆனால் குஜராத்தில் தெரு முழுக்க அபார்ட்மெண்ட்களாக இருக்கின்றன. அது மக்கள் கூடி வாழ்கிறார்கள் என்பதை முதற் பார்வைக்கே காட்டுகின்றன. அதிக மக்கள் தொகையை குறைந்த பரப்பளவிற்குள் வசிக்க வைக்க இயலும். ஐந்து மாடி ஆறு மாடி அபார்ட்மெண்ட்கள் நான் பார்த்த இடங்களிலெல்லாம் இருந்தது. சிறு நகரங்கள் தூய்மையாக இருந்தன.

அகமதாபாத்தில் சர்வதேச பட்டம் திருவிழா நடைபெறும் சபர்மதி ஆற்றங்கரையில் 12 வயதான ஒரு பெண் குழந்தையைச் சந்தித்தேன். தனது தந்தையுடனும் தாயுடனும் தனது தம்பியுடனும் வந்திருந்தாள். நான் தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறேன் என்பதில் அவளுக்கு மிகவும் மகிழ்ச்சி. குஜராத் எப்படி இருக்கிறது என என்னிடம் கேட்டாள். நான் அகமதாபாத் தூய்மையாக இருப்பது குறித்து எனது மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். ‘’நீங்கள் காந்தி நகருக்கு வாருங்கள் அங்கிள். இன்னும் தூய்மையாக இருக்கும்’’ என்றாள். அவள் முகத்தில் அவ்வளவு பெருமிதம்.

தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளுக்கு ஒரு பழக்கம் உண்டு. நாம் ஏதேனும் ஒரு அவதானத்தைச் சொன்னால் அவர்கள் தமிழ்நாடு குறித்து ஏதேனும் ஒரு புள்ளிவிவரத்தைக் காட்டுவார்கள். அது தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதைக் காட்டும். உதாரணத்துக்கு பொதுப் போக்குவரத்து குறித்து நாம் ஒரு விபரம் சொன்னால் இந்தியாவிலேயே பொதுப் போக்குவரத்தில் தமிழ்நாடு பல வருடங்களாக முதல் இடம் என்பார்கள். பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறையால் அரசுக்கு கிடைக்கும் லாபம் எவ்வளவு என்று கேட்டால் அனைத்தும் நஷ்டத்தில் இயங்குகிறது என்பார்கள். ஏன் நஷ்டம் என்றால் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட இங்கே கட்டணம் குறைவு என்பார்கள். இவர்களின் நிர்வாகம் தவறையும் பிழையையும் அடிப்படையாய்க் கொண்டது. ஊழலுக்காகவே உருவாக்கப்பட்டது.

பிழையாக தவறாக வழிநடத்தப்படும் மாநிலம் தான் இயல்பாக அடைய வேண்டிய வளர்ச்சியை அடையாமலேயே போய் விடுகிறது. தமிழ் மக்களுக்கு அவர்கள் அடைய சாத்தியமான உச்சபட்சமான உயரம் எது என்பது தெரியாமலேயே ஆகிறது.

1996ம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான திரு. ஜி.கே. மூப்பனார் அவர்கள் இந்தியப் பிரதமராகக் கூடிய ஒரு வாய்ப்பு உருவானது. அது நிகழ்ந்து விடாமல் இருக்க செய்ய வேண்டிய அனைத்தையும் அவருடன் கூட்டணியில் இருந்த  தமிழ்நாட்டின் அரசியல் கட்சி ஒன்று செய்தது. 

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம் 
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம். 

என்கிறாள் தமிழ் மூதாட்டி ஔவை.


*


தமிழ்நாட்டில் இணைந்து செயல்படும் சமூகப் பழக்கம் என்பது மக்களுக்கு மிக அரிதாக இருக்கக்கூடியதாக மட்டுமே இருக்கிறது. கூட்டுச் செயல்பாடு என்பது அதில் இணைந்திருக்கும் அனைவருக்கும் பலன் தருவதாக அமையும். இங்கே அனைவரும் தனித்தே இருப்பார்கள். ஒருவரோடொருவர் பூசலிட்ட வண்ணமே இருப்பார்கள். ஒருவரை ஒருவர் ஐயுற்றவாறு இருப்பார்கள். இங்கே அரசியல் கட்சிகளும் ஜாதி அமைப்புகளும் மட்டுமே மக்களுக்கு இணையக் கூடிய இடங்களாக இருப்பதைக் காணலாம். எனவே எல்லா சமூக அமைப்புகளிலும் அரசியல் மற்றும் சாதியின் குறுக்கீடு இருக்கும். அரசு அலுவலகங்களில் ஒரே சாதியைச் சார்ந்தவர்கள் குழுக்களாக இயங்குவதை சர்வ சாதாரணமாகக் காணலாம். இப்போது பள்ளி ஆசிரியர்களிடமும் இப்போக்கு அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தங்கள் சாதியினர் அல்லாத பிறரை நோக்கி வன்மங்களைப் பரப்புவதை தங்கள் அன்றாட செயல்பாடாகக் கொண்டிருக்கின்றனர் தமிழ் மக்கள். இவர்களை ஒரு பொதுத் தளத்தில் தனித்தனியாக இருக்க வைக்கவே அரசியல்வாதிகள் தேவை என்ற நிலை. கல்வி சார்ந்த பண்பாடு சார்ந்த எந்த விழுமியமும் மதிப்பீடும் இவர்களை அணுகிடவே முடியாது என்ற நிலை. எதையுமே அரசியலாகப் பார்ப்பது – ஒரு சாதாரண நிகழ்வைக் கூட சதித்திட்டமாகப் பார்ப்பது – ஒட்டுமொத்த உலகமும் தங்களுக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற எண்ணம் கொண்டிருப்பது என்பதாக தமிழ் மக்களின் மனநிலை இருக்கிறது.

குஜராத் வணிகத்தின் மண். பல ஆயிரம் ஆண்டுகளாக அவர்கள் வணிகத்தைப் பழகியிருக்கிறார்கள். அவர்களின் பெரும்பகுதி நிலம் பாலை. பாலை நிலத்து மனிதர்கள் சிறந்த வணிகர்களாக இருப்பார்கள். விவசாயம் அவர்களுக்கான வாழ்வாதாரமாக விளங்க முடியாது என்ற நிலையில் செல்வத்தை உருவாக்குதலை அவர்கள் எப்போதும் சிறிது சிறிதாக செய்த வண்ணம் இருப்பார்கள். ஒரு வணிகம் சீராக நடக்க அந்த வணிக அமைப்பு நேர்த்தியாக நிர்வாகம் செய்யப்பட வேண்டும். குஜராத்தி வணிகர்கள் சிறந்த நிர்வாகிகளாகவும் இருப்பார்கள்.

ஒரு சமூகம் எவ்விதம் இயங்குகிறது என்பதை அச்சமூகத்தில் புழங்கும் செல்வத்தின் அளவைக் கொண்டு ஓரளவு புரிந்து கொள்ள முடியும். குஜராத் வணிகத்துக்கும் வணிகப் பண்புகளுக்கும் பேர் போன மாநிலம்.

***