Monday, 6 January 2020

சென்னை புத்தகக் கண்காட்சி

சென்னை புத்தகக் கண்காட்சி இந்த மாதம் 9ம் தேதி துவங்குகிறது. 21ம் தேதி வரை நடைபெறுகிறது. 2003ம் ஆண்டு முதல் முறையாகச் சென்றேன். கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். நானும் எனது நண்பனும் மயிலாடுதுறையில் அதிகாலை கிளம்பி மதியப் பொழுதில் சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் சென்றோம். அப்போது காயிதே மில்லத் பெண்கள் கல்லூரியில் நடைபெறும். அதன் பின்னர் ஓரிரு ஆண்டுகள் தவிர பெரும்பாலான ஆண்டுகள் சென்றிருப்பேன். பின்னர் கண்காட்சி அரங்கு ஆங்கிலோ - இந்தியன் பள்ளிக்கு மாறியது. இப்போது ஒய்.எம்.சி.எ.

ஆயிரக்கணக்கானோர் குழுமக் கூடிய கண்காட்சி வெளி. ஏதோ ஒரு விதத்தில் எல்லாருடைய சிந்தனையும் புத்தகங்கள் குறித்து. எந்த பண்பாட்டு நிகழ்விலும் மக்களுக்கு ஆர்வம் இருக்கும் போது அது சமூகத்தில் ஆக்கபூர்வமான விளைவுகளை உருவாக்குகிறது. 

சிந்திக்கும் சமூகம் முன்னேறும். பேதங்களைத் தவிர்த்து இணைந்து செயல்படும். சிந்தனைக்கும் கூட்டுச் செயல்பாட்டுக்கும் வாசிப்பு வழி அமைத்துக் கொடுக்கும். 

தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே நம் நாடு கலையில், இலக்கியத்தில், நுண்கலையில், கட்டுமானத்தில், அறிவியலில், வானியலில் பெரும் உயரங்களைத் தொட்ட நாடு. நம் முன்னோர் நம் நாட்டை ஒவ்வொரு மானுடனின் ஆத்ம விடுதலையை அளிக்கும் நிலமாக உருவாக்கியுள்ளனர். அடுத்த தலைமுறைக்கு மேலான சமூகத்தை வழங்கக் கூடிய பொறுப்புணர்வு நம் அனைவருக்கும் உள்ளது. நமது வாசிப்பும் சிந்தனையும் அதனை உறுதி செய்யட்டும்.