எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் வயதால் சற்று முதியவர். முதுமை காரணமாக உடல் உழைப்பை வழங்க இயலாமல் இருப்பவர். பல ஆண்டுகளுக்கு முன்னால் அவருடைய குரல் நாண் பெருமளவில் பாதிக்கப்பட்டதால் அவருக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்திருக்கிறது. ஆகையால் சரளமாகப் பேச முடியாதவர். மிகக் குறைவாக ஓரிரு வார்த்தைகள் பேசுவார். அவருடைய வீட்டில் தனியாக இருக்கிறார்.நான் வாரம் ஒருமுறையாவது சென்று அவரைப் பார்த்து வருவேன். அவர் உடல்நலம் எவ்வாறு உள்ளது என்று விசாரிப்பேன். காலையும் மாலையும் பூசனை செய்து திருநீறு அணிவார். வீட்டுத் தோட்டத்தில் பூச்செடிகளும் காய்கறிகளும் கீரையும் வைத்து பராமரிக்கிறார். அந்த தோட்டப்பணியை மேற்கொள்வார். பின்னர் வீட்டில் அமைதியாக அமர்ந்திருப்பார்.
சில வாரங்களுக்கு முன்னால் அவருக்குச் சர்க்கரை நோய் இருப்பது இரத்தப் பரிசோதனை மூலம் தெரியவந்தது. மருத்துவரின் பரிந்துரைப்படி சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் வாங்கித் தந்தேன். அவர் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம் அவர் முறையாக மாத்திரை எடுத்துக் கொள்கிறாரா என்பதை மாத்திரையின் எண்ணிக்கையைக் கொண்டு அறிந்து கொள்வேன். காலையும் மாலையும் சிறிது தூரம் காலாற நடக்கச் சொல்வேன். கொஞ்ச தூரம் நடந்தாலே தலை சுற்றி வருகிறது என்பார்.
அவருக்குத் தேவையான மாத்திரைகளை ஃபார்மஸியில் வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்திய அரசாங்கத்தின் பாரதீய ஜன் ஔஷதி கேந்திரா என்ற மருந்துக் கடைகளைக் குறித்து அறிந்தேன். மத்திய அரசாங்கத்தின் இரசாயனத் துறை, தரமான மருந்துகள் சகாயமான விலையில் எளிய மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாடு முழுதும் துவங்கி நடத்தி வரும் கடைகள் தான் ஜன் ஔஷதி மருந்துக் கடைகள். மற்ற மருந்து கடைகளில் கிடைக்கும் மருந்துகள் இங்கே நாலில் ஒரு பங்கு விலையில் கிடைக்கின்றன. பரவலாகக் காணப்படும் நோய்களுக்கு மருந்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகள் அனைத்துமே இந்த மருந்துக்கடையில் கிடைக்கிறது. வழக்கமாக நண்பருக்கு மாதத்திற்கு ரூ.300 என்ற அளவில் மாத்திரைகளுக்குச் செலவாகும். இப்போது ரூ.75 மட்டுமே ஆகிறது. இது விலை தொடர்பானது மட்டுமல்ல; விலை குறைவாய் உள்ள மாத்திரை என்பது அவருக்கு அவர் நோய் குறித்த பயத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது.
நாடு முழுதும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அதிக அளவில் இயங்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது. அதன் மூலம் குடிமக்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையை அளிக்க முற்படும் தன் கடமையைச் செய்ய முற்படுகிறது. மக்கள் இந்த கடைகளை அதிகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவில் பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்து தயாரிப்பில் பல ஆண்டுகளாக கொள்ளை லாபம் பார்த்துப் பழகியவை. மருந்து கம்பெனிகள் - ஃபார்மஸிகள் - மருத்துவர்கள் என்னும் வலைப்பின்னல் தத்தம் வணிக நோக்கங்களுக்கான ஒத்துழைப்பில் பல்லாண்டு பழக்கம் கொண்டது. ஒரு செயல்பாட்டை உதாரணமாகச் சொல்கிறேன். எங்கள் ஊரில் ஒரு மருத்துவர் மருந்து சீட்டில் மருந்தின் பெயரை எழுதும் போது அவர் அந்த மாத்திரைக்காக அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே புரியக் கூடிய நான்கெழுத்து குறிப் பெயரை எழுதுவார். அதில் உள்ள அட்சரங்களில் எதுவும் மருந்தின் பெயரில் இருக்காது. அவர் ஒவ்வொரு மருந்துக்கும் ஒரு குறிப்பெயர் வைத்திருப்பார். அவர் எழுதும் குறிப்பெயருக்கான மருந்து எது என்பது அவருடைய ஃபார்மஸிஸ்டுக்கு மட்டுமே தெரியும். அந்த மருந்து சீட்டை எடுத்துக் கொண்டு வேறு ஃபார்மஸிக்கு சென்றால் இதில் எழுதப்பட்டிருக்கும் எதுவும் மருந்தின் பெயர் அல்ல என்பார்கள். அந்த மருத்துவரின் மருந்துக்கடைக்கே வந்தாக வேண்டும். அங்கும் அந்த மாத்திரையை முழு மாத்திரை அட்டையுடன் தர மாட்டார்கள். கத்தரிக்கோலால் ஒவ்வொரு மாத்திரையாக கத்தரித்து வைத்திருப்பதையே தருவார்கள். முழு மாத்திரை அட்டையில் மருந்தின் பெயரும் இரசாயனமும் இருந்தால் அடுத்த முறை வேறு கடைகளில் வாங்குவதற்கான வாய்ப்பைத் தடுப்பதற்காக இந்த ஏற்பாடு. இவ்வாறு நடந்து கொள்வது தார்மீகப்படி மிகப் பெரிய அநீதி. சட்டபூர்வமாகவும் மிகக் கடுமையான குற்றம்.
மருத்துவ சேவைக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட- நோயாளிகளின் வாழ்க்கைச் சூழலையும் பொருளாதார நிலையையும் கவனத்தில் கொண்டு - பொருத்தமான - தக்க - சிகிச்சை அளிக்கும் எத்தனையோ மருத்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதையும் சேர்த்தே இந்த விஷயத்தில் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களின் சேவைக்கு நாடு என்றும் கடன்பட்டுள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை எல்லா மாநிலங்களிலும் ஜன் ஔஷதி கேந்திராக்கள் அமைந்து எளிய மக்கள் பயன்பட வேண்டும் என்பது அரசின் எண்ணம். படித்தவர்கள், விபரம் தெரிந்தவர்கள் எளிய மக்களுக்கு இதனைக் குறித்து எடுத்துச் சொல்ல வேண்டும்.
மக்களாட்சியில் அரசாங்கம் என்பது மக்கள்தான். இன்று அது இந்தியர்களின் நினைவில் இருக்கிறதா என்ற ஐயம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எந்த நியதிகளுக்கும் ஒழுங்குமுறைகளுக்கும் உட்பட மறுப்பது என்பது இந்தியப் பொதுப் பண்பாக உருவாகி வருகிறது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மக்கள் நலத்துக்கான திட்டங்கள் மக்களைப் பெருமளவில் சென்றடைய வேண்டும் என்பதில் குடிமக்கள் இருவேறு எண்ணம் இன்றி இருக்க வேண்டும்.