Tuesday 11 February 2020

நாகரிகம் - ஒரு கடிதம்

அன்பின் பிரபு,

இன்றுதான் ’நாகரிகம்’ வாசித்தேன்.

முந்தைய காத்திருப்பு கதைக்கும் இதற்கும் சில ஒற்றுமைகள் புலப்பட்டன - அசாதாரணமான நாயகன் - 'காத்திருப்பு' லக்ஷ்மி நரசிம்மன் ஆபத்பாந்தவன், அநாத ரக்ஷகன் போலவே இதில் வரும் கார்த்தியும் வாசனைகளில் மன்னன்.
இருவருக்கும் நேர்ந்துவிடும் தனிப்பட்ட இடிபோன்ற துர்மரணங்கள்...
போலவே கதை நிகழ்வதையும் மாந்தர்களின் பண்புகளையும் சம்பவங்கள் வழியாக உணர்த்தும் விதம்...

கதை நெடுகவே கார்த்தியின் வாசனையுணரும் திறனும் அவனது விசேஷமான நுண்ணுர்வும் பூடகமாக ஆங்காங்கு சொல்லப்பட்டுள்ளது

(உதா. மேயும் ஆடுகளின் புளுக்கைகள் காய்ந்து கொண்டிருக்கும் மணம். கோரை மட்டும் மண்டியிருந்தது. ஆடுகள் காய்ந்த புல்லை முகர்ந்து கொண்டிருந்தன. தண்ணீர் பாய்ந்து பல ஆண்டுகள் ஆன வாய்க்கால் தடம் மண்பாதை போல கெட்டித்துக் கிடந்தது. அதில் டூ-வீலரும் காரும் வந்து செல்வதன் தடங்கள்.)

கார்த்தியின் வாசனையறியும் உணர்வே (அல்லது திறன்) சோற்றில் பறந்த ஆவியில் ஏதோ ஒன்று சரியில்லை என்பதை உணர்த்துகிறது.
வெங்கட்ரமணன் சொன்ன அந்த அறிமுக வகுப்பு விஷயம்தான் கார்த்திக்கு அவன் நண்பனின் 'சித்து' வேலைகளை இனங்காண உதவியிருக்கின்றன என்று யூகிக்கிறேன்.

ஆனாலும் அவனது அந்த நயத்தக்க நாகரிகம் வெளிப்படும் உச்சம் - அவன் வெறும் ஒரு காகிதத்தில் எழுதி வைத்துவிட்டு தன் வீட்டிற்கு திரும்பி வருவது!
பின்னர் வந்த அந்த சம்பவம் சுஜாதா கதைகளில் வரும் ஒரு 'ஆன்டி கிளைமேக்ஸ்'

என்னால் முதல் வாசிப்பில் இவ்வளவுதான் கிரகிக்க முடிந்தது! முடிந்தால் மற்றுமொரு வாசித்து பின் எழுதுகிறேன்.
(இன்றுதான் கவனித்தேன் சொல்வனத்தில் தங்களின் பல ஆக்கங்கள் வெளியாகியுள்ளன. https://solvanam.com/author/mylai_prabhu_r_prabu/ நிச்சயம் வாசிக்கிறேன்)

வாழ்த்துகள், நன்றி.

அன்புடன் 
வெங்கட்ரமணன்