Wednesday 12 February 2020

சில கேள்விகள் - என் பதில்கள்

இன்று காலை எனக்கு ஒரு நண்பர் ஃபோன் செய்தார். நான் ஏன் பயண சௌகர்யங்களுக்கு பெரும் முக்கியத்துவம் தருவதில்லை என்று கேட்டார். பயண சௌகர்யங்கள் என்றல்ல எந்த விதமான சௌகர்யத்தையும் கருத்தில் கொண்டு நான் எந்த பணியையும் செய்வதில்லை என்றேன். இதைப் புரிய வைப்பது கடினம். நான் சௌகர்யங்களுக்கு எதிரானவன் அல்ல. எந்த சௌகர்யத்தையும் பயன்படுத்தாமல் இருப்பவனும் அல்ல. நான் அவற்றுக்கு முழுக்க கட்டுப்பட்டவன் அல்ல. அவ்வளவு தான். இம்முறை அகமதாபாத் சென்ற போது ரயில் இருக்கை முன்பதிவு பெறமுடியவில்லை. சற்று தாமதமாகி விட்டது. ஒரு பெரும் இலக்கின் முதல் அடி என்பதால் சிறு தடுமாற்றம் ஆனது. நான் சமாளித்தேன். நவஜீவன் எக்ஸ்பிரஸ் ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் மிக அதிக நேரம் பயணிக்கிறது. மாநிலம் பிரிக்கப்பட்டதை ஆந்திராகாரர்களால் இன்றும் ஏற்க முடியவில்லை. மூன்று தலைநகர் என்பது அவர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்களுடன் உரையாடிய போது அதனை என்னால் நேரடியாக உணர முடிந்தது. பின்னர் வண்டி குஜராத்தில் சென்று கொண்டிருந்த போது ரயிலில் பாடும் மூன்று சகோதரிகள் குறித்த சித்திரம். இது மிக முக்கியமானது. அசௌகர்யத்தால் நான் இந்த மனப்பதிவுகளை அடைந்தேன் என்று சொல்ல வரவில்லை. ஆனால் என்னால் அந்த அசௌகர்யத்திலும் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். 

ஞாயிறன்று மாலை ரயிலில் பரங்கிப்பேட்டை சென்றிருந்தேன். அப்போது ஓர் ஆசிரியர் உடன் பயணித்தார். மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் ஆசிரியர். அவரிடம் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து கேட்டேன். அது நல்ல விஷயம் என்றார். ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை அதன் மூலம் மதிப்பிட முடியும். அது கண்டறியப்பட்டால் அதனை மேம்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றார். உலகிலேயே தேர்வுக்கு எதிராக போராட்டம் அநேகமாக தமிழ்நாட்டில்தான் நடக்கும் என்று நீட் தேர்வைக் குறித்து சொன்னார்.

நான் வசதிகளைப் பயன்படுத்தாதவன் அல்ல. ஆயினும் நான் மக்களோடு இருக்க விரும்புபவன். எந்நிலையிலும் பொதுமக்களோடு இருப்பதை தவிர்க்க முயலாதிருப்பவன். நான் பெரும்பாலும் எனது பகுதியில் மோட்டார்சைக்கிளில் பயணிப்பேன். சிதம்பரத்திலிருந்து நாகப்பட்டினம் வரை. பூம்புகாரிலிருந்து கும்பகோணம் வரை. இங்கே நான் பயணித்திராத கிராமச் சாலைகள் மிக சொற்பமாகவே இருக்க இயலும். இவ்வகையான பயணங்களும் அதில் நான் சந்தித்த மனிதர்களுமே எந்த விஷயம் குறித்தும் நான் கொண்டுள்ள அறிதலுக்குக் காரணமானவர்கள்.

ஒருமுறை தென் மாவட்டம் ஒன்றில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். என்னுடன் அருகில் அமர்ந்து பயணித்தவர் ஒரு பேருந்து ஓட்டுநர். அவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் சொன்னார் : ‘’தம்பி! மாநில அரசாங்கம் செய்யும் மிகப் பெரிய ஊழல் என்பது போக்குவரத்துத் துறையில் நடப்பது. பேருந்து வாங்குவது, பராமரிப்பது, ஊழியர் ஊதியம் என அனைத்திலும் கோடிக்கணக்காக ஊழல் நடக்கிறது. தினமும் பயன்படுத்துவது என்பதால் மக்கள் அதை ஊன்றி கவனிக்க மாட்டார்கள். இந்திய ரயில்வே தனக்குத் தேவையான ரயில் பெட்டிகளைத் தானே தயாரிக்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. மாநில அரசாங்கத்தால் தனக்குத் தேவையான பேருந்துகளை உற்பத்தி செய்ய முடியாதா? ஏன் உற்பத்தி செய்வதில்லை. வருடாவருடம் நூற்றுக் கணக்காக பேருந்துகளை வாங்குகிறார்கள். அதில் புரளும் கமிஷன் எவ்வளவு இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து பொதுப் போக்குவரத்தை தனியாருக்குக் கொடுத்தால் மக்களுக்கும் லாபம். நிறைய தொழில்முனைவோர் உருவாவார்கள். ஏன் செய்வதில்லை?’’. அவர் எழுப்பிய வினா முக்கியமானது.

பயணங்கள் மனிதர்களை இணைக்கின்றன. என்னிடம் எழுப்பப்பட்ட வினாவுக்கு இதுவே என் பதில்.