Thursday 13 February 2020

ஆள்வினையும் ஆன்ற அறிவும்

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி.
-திருக்குறள்

தமிழ்நாடு விவசாயத்தை அடிப்படையாய்க் கொண்ட மாநிலம். விவசாய உற்பத்தி சார்ந்த கல்வி தமிழ்நாட்டின் கல்வித்திட்டத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இடம்பெற்றிருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது. இஸ்ரேல் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக விவசாயத்தில் முன்னணியில் இருக்கும் தேசம். மிகச் சிறிய தேசம். கிட்டத்தட்ட பாலைவனம். ஆனாலும் எல்லா விதமான பயிர்களும் விளைவிக்கப்படும் தேசம். தமிழ்நாட்டின் கல்வித்திட்டத்தில் விவசாயம் குறித்து ஆக்கபூர்வமான விஷயங்கள் இடம் பெற்றனவா என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய விஷயம். தமிழ்நாட்டில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் அதிகம். குறு விவசாயி என்பவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை மட்டும் உரிமையாய்க் கொண்டவர். கடந்த ஐம்பது ஆண்டுகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ் , அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் விவசாயத்தில் மரப்பயிர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டிருக்குமென்றால் நான்கு தலைமுறை மாணவர்கள் மரப்பயிர் குறித்த அறிமுகம் பெற்றிருப்பார்கள். 

உலகெங்கும் மரப்பொருட்களுக்கான தேவை கடந்த முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாகவே பெருகிய வண்ணமே இருந்திருக்கிறது. ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்புள்ள பொருள் மரம். மானாவாரி நிலத்திலும் பாசன வசதியுள்ள இடத்திலும் சிறப்பாக வளரக்கூடியது மரப்பயிர். தேக்கு மரம் மட்டுமே போதும். இரண்டரை ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி அரை ஏக்கர் நிலத்தில் தேக்கு பயிர் செய்தாலே பதினைந்து ஆண்டுகளில் அவருக்கு மிக நல்ல வருமானம் அதிலிருந்து வரும். 

இன்று தமிழ்நாட்டில் ஆஃப்ரிக்காவின் நைஜீரியா தேசத்தில் வளரும் தேக்கு இறக்குமதி செய்யப்பட்டு தமிழ்நாட்டு கட்டுமானச் சந்தையில் முக்கிய இடம் பெறுகிறது. அன்னியச் செலாவணியை நாம் நைஜீரிய தேக்கு இறக்குமதிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

நம் தமிழ்நாட்டின் கல்வியில் சாமானியனின் வாழ்க்கையில் நேரடியான பொருளியல் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் சொல்லித் தரப்பட வேண்டும். ஒரு சிறு கணக்கைப் பார்ப்போம்:

தோராயமாக தமிழ்நாட்டின் ஒரு விவசாய கிராமத்தின் பரப்பு = 1000 ஏக்கர்
  
அதில் விவசாய நிலம் = 750 ஏக்கர்

குறு விவசாயியின் நில அளவு = 2.5 ஏக்கர்

குறு விவசாயிகள் எண்ணிக்கை = 250

ஒரு குறு விவசாயி தனது ஐந்தில் ஒரு பங்கில் (அரை ஏக்கர் நிலம்) மரப்பயிர் பயிரிட்டால்
மரப்பயிர் சாகுபடி பரப்பளவு = 125 ஏக்கர்

அரை ஏக்கரில் பயிரிட வேண்டிய தேக்கு மரத்தின் எண்ணிக்கை = 200

15 ஆண்டுகளில் ஒரு மரத்தின் விலை =  ரூ.20,000/-

அரை ஏக்கர் நிலத்தில் உள்ள தேக்கு மரத்தின் விலை = ரூ. 40,00,000/-

ஒரு கிராமத்தில் உள்ள 125 ஏக்கர் தேக்கு மரத்தின் விலை = ரூ. 100 கோடி

(தேக்கு மரம் 15 ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். அதன் பின்னரே விற்பனை செய்ய முடியும். ஆயினும் அந்த தொகையை பயிர் செய்யப்படும் 15 ஆண்டுகளுக்கும் ஒரு கணக்கீட்டுக்காகப் பிரித்துக் கொள்வோம்)

ஒரு வருடத்துக்கு என பிரித்தால் = ரூ. 6.66 கோடி

தமிழ்நாட்டில் உள்ள 10,000 கிராமங்களுக்கு கணக்கிடால் = ரூ.66,600 கோடி

தேக்கு மரம் லாபமான மரப்பயிர் என்பது அனைத்து விவசாயிகளும் அறிந்தது. அரை ஏக்கர் நிலத்தில் வளரும் தேக்கு ஆரம்பத்தில் ஓரளவு பராமரிப்பும் பின்னர் ஆண்டுதோறும் பொழியும் மழைப்பொழிவை மட்டும் கொண்டும் வளரக் கூடியது. தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் விவசாயப் பின்னணி கொண்ட குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். தமிழ்நாடு அரசின் கல்விமுறை தனது மக்களின் வாழ்க்கையில் நலத்தை உருவாக்குவதைக் குறித்து சிந்தித்திருக்குமேயானால் குறு விவசாயிகள் வாழ்வில் மேம்பாடு ஏற்படுத்த தங்கள் பாடப்புத்தகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முயன்றிருப்பார்கள். இருபத்து ஐந்து லட்சம் எளிய குறு விவசாயிகள் வாழ்வில் ஒளியைக் கொண்டு வர சாத்தியமுள்ள விஷயம் இது. 

இந்தியா விவசாய வருமானத்துக்கு முழு வரிவிலக்கு கொடுக்கும் நாடு. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு நேரடியாக குறு விவசாயிகள் கைக்கு ரூ.66,600 கோடியைக் கொண்டு சேர்க்கக் கூடிய செயலுக்கு தமிழ்நாட்டை 50 ஆண்டுகள் ஆண்ட திராவிடக் கட்சிகள் உதவியிருக்கலாமே? பொருளியல் விடுதலையே சமூக விடுதலைக்கான வழியாய் இருந்தது என்பதுதானே உலக வரலாறு?