Thursday 6 February 2020

நிர்மாணம் - உருவாதலின் வழி

2001ம் ஆண்டு நான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் மாணவனாக இருந்தேன். அப்போது குஜராத் மாநிலம் பூகம்பத்தால் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. சந்தைக் காய்கறிகள் போல கட்டிடங்கள் கான்கிரீட் குவியலாகக் கிடந்தன. அப்போது பத்திரிக்கைகள் இடிந்து போன கட்டிடங்களின் புகைப்படங்களையும் நிவாரணப் பணிகள் குறித்த செய்திகளையும் வெளியிடும். என் நினைவில் இருந்து பத்திரிகைகளில் வெளியான சிலவற்றைக் கூறுகிறேன். 

குஜராத் மாநகர் ஒன்றில் ஒரு பெரும் வணிக வளாகம். தரைமட்டமாக இடிந்து கிடக்கிறது. எங்கும் துர்நாற்றம். அப்பகுதியின் மக்கள் அனைவரும் திறந்த வெளி மைதானங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எழுபது வயதான முதியவர் ஒருவர் தினமும் பகலில் முன்னர் வணிக வளாகம் இருந்த இடத்தின் முன் நின்று அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சேவை அமைப்பினர் இதைக் கவனிக்கின்றனர்.

‘’பெரியவரே! ஏன் தினமும் இங்க வந்து நிக்கறீங்க?’’

‘’இது நான் என்னோட சின்ன வயசுலேந்து உழைச்சு உருவாக்கின காம்ப்ளக்ஸ். ‘’

சேவை அமைப்பினர் என்ன ஆறுதல் சொல்வது என அறியாமல் திகைக்கின்றனர்.

‘’இப்ப இந்த வெட்டவெளியைப் பார்த்து என்ன யோசிக்கிறீங்க?’’

‘’எப்போ இங்க இருந்ததை விடப் பெரிய காம்ப்ளக்ஸ் கட்டற வேலையை ஆரம்பிக்கலாம்னு யோசிச்சிட்டு இருக்கன்”

குஜராத் பூகம்ப நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட சகலவிதமான சேவை அமைப்பினரும் வியந்து சொன்ன சம்பவம் ஒன்று. ஒரு வயதான மூதாட்டி. தனியே அமர்ந்திருக்கிறார். 

அவரிடம் பிரிக்கப்பட்ட பிஸ்கட் பொட்டலம் ஒன்றை நீட்டுகின்றனர். அவர் இரண்டு பிஸ்கட்களை எடுத்துக் கொள்கிறார். சேவை அமைப்பினர் சொல்கின்றனர்.

‘’பாட்டி பிஸ்கட் நிறைய எடுத்து கையில வச்சுக்கங்க’’

‘’தம்பி! என்கிட்ட இருந்ததை மத்தவங்களுக்கு கொடுத்துத்தான் என் வாழ்க்கை முழுக்க பழகியிருக்கன். இன்னும் சில பேருக்கு பயன்படக் கூடியதை நான் மட்டும் வச்சுக்கக் கூடாது. அப்படி ஒரு விஷயத்தை என்னால நினைச்சுக் கூட பாக்க முடியாது’’

பாதிக்கப்பட மக்களே சேவை அமைப்பினரின் பணிகளில் உடனிருந்து உதவியதை அப்போது எல்லா பத்திரிகைகளும் பதிவு செய்தன. அதன் பின், வெறும் 13 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் இந்தியப் பிரதமரானார்.