Wednesday 11 March 2020

ஒரு தோழமை

மயிலாடுதுறைக்கு மேற்கே, மேம்பாலத்தின் இறக்கத்தையொட்டி ஒரு சிறு கிராமத்துச் சாலை பிரிந்து செல்கிறது. அதற்கு மறையூர் சாலை என்று பெயர். இருபுறமும் நெல்வயல்கள் பரவிக் கிடக்க சிறு சிறு வளைவுகளுடன் சிறு அரவமென அச்சாலை கிடக்கும். அதில் சற்றே பெரிய களம் ஒன்றையொட்டி ஓர் அரசமரம் உள்ளது. நீர் நிரம்ப பாயும் பாய்ச்சல் கால் ஒன்றின் அருகில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஈரம் மிகுந்து கிடக்கும் பகுதியில் அம்மரம் நாற்பது வருடங்களாக நின்றிருக்கிறது என்கிறார்கள். 

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இம்மரத்தடியைக் கண்டடைந்தேன். எனக்கு மரத்தடிகள் மேல் எப்போதும் ஆர்வம் உண்டு. வட இந்தியாவில் மரத்தடிகளை ஒட்டி கிராமங்களில் எப்போதும் பதினைந்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக அமர்ந்திருப்பார்கள். இதனை ராஜஸ்தானில் அதிகம் காணலாம். முறுக்கு மீசை கொண்ட முதியவர்கள். மெல்லிய உடல் கொண்டவர்கள். மதிய நேரத்தில் வந்து அமர்ந்திருப்பார்கள். 

மறையூர் சாலை அரசமரத்தடிக்கு கல்லூரி நாட்களில் அடிக்கடி வருவேன். வார இறுதி நாட்களின் மாலைப் பொழுகளை அம்மரத்தடியில் அமர்ந்திருப்பேன். சென்றதும் என் இரு கைகளாலும் அம்மரத்தைத் தொடுவேன். அதில் செதுக்கி வைத்த இடம் போல ஒரு பரப்பு இருக்கும். அதில் வாகாக அமர்ந்து கொள்வேன். நானும் அந்த விருட்சமும் வேறல்ல என்பது போல மனம் ஒன்றியிருக்கும். 

கோடை காலத்தில் புதுத்துளிர்கள் துளிர்த்திருக்கும் போது ஒவ்வொரு இலையைச் சுற்றிலும் மின்மினிகள் வட்டமிடும். மின்மினிகள் மரத்தை தீபமென ஒளிரச் செய்யும். பல சூரிய அஸ்தமனங்களை அங்கிருந்து கண்டிருக்கிறேன். மனம் நம்பிக்கை கொள்ளும் இளமைப் பருவம் அழகானது. அதன் புனிதமான அறியாமைகளுடன் வாழ்க்கை குறித்து நம்பிக்கை மிகுந்திருக்கும் தளரா ஊக்கம் கொண்ட நாட்கள் அவை. நமது சமூக வாழ்க்கை நம்மை லௌகிகத்தையே வாழ்க்கை என நம்ப வைக்கிறது. லௌகிகம் எல்லைக்குட்பட்டது. 

பலரை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறேன். நண்பர்களை . உறவினர்களை. பரிச்சயமானவர்களை. அப்போதெல்லாம் வாரம் ஒருநாளாவது கடற்கரைக்குச் செல்வது என்பதும் வாரம் ஒருநாள் இந்த மரத்தடிக்கு வருவதும் என்பதும் தொடர்ந்து நடக்கும். பூம்புகார், கோணயாம்பட்டினம், வாணகிரி, சின்னங்குடி மற்றும் தரங்கம்பாடி என ஏதேனும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருப்பேன். 

மாறா செயலூக்கம் கொண்டிருந்த நாட்கள். வணிகம் சார்ந்த பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த நாட்களிலும் கூட இங்கே செல்வதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். இருப்பினும் வருடக்கணக்காக மேற்கொள்ளும் செயலில் ஏற்படும் தேக்கம் உருவானது. என் வாழ்நாள் முழுதும் நான் நினைவுகூரும் இந்தியப் பயணங்களை மேற்கொண்டேன். புதிய நிலம் புதிய மனிதர்கள் என்பது பேரார்வமாயானது.

இன்று மீண்டும் மறையூர் சாலை அரசமரத்திடம் சென்றேன். நிறைய மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் அங்கே செல்கிறேன். அரசமரத்தை என் இரு கைகளாலும் தொட்டேன். ஒரு பிரியமான தோழனுடன் இருப்பதைப் போல மனம் அமைதி கொண்டது. சிவப்பு சூரியன் மெல்ல அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான். செக்கச் சிவந்த வானம். வானம் முன் நின்றேன். முயற்சிகள். தடைகள். சொல்லாக்காத துக்கங்கள். உலகையே அணைக்கும் கைகளில் சில கணங்களுக்கு என்னை ஒப்படைத்தேன். நம்பிக்கைகளுடன் திரும்பினேன்.