Monday 16 March 2020

நவகாளி யாத்திரை

எழுத்தாளர் சாவியின் ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறு நூல். மகாத்மா வங்காளத்தில் இந்திய சுதந்திரத்தை ஒட்டி நிகழ்ந்த மத வன்முறைகளை தடுக்கும் பொருட்டு நவகாளி பகுதியில் பாத யாத்திரையாகச் செல்கிறார். அந்த யாத்திரையில் பங்கு பெறும் பொருட்டு சென்னையிலிருந்து சாவி செல்கிறார். சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் வழியே இன்னொரு ஊருக்குச் சென்று கங்கையின் துணை ஆறுகளான இரண்டு பெரும் நதிகளை மோட்டார் படகில் கடந்து ஒரு ஊரையடைந்து அங்கிருந்து இருபது மைல் கால்நடையாக நடந்து மகாத்மா இருக்கும் இடத்தைக் கண்டடைகிறார். சாவி மகாத்மா மீது பெரும் மதிப்பு கொண்டவர். ‘’கல்கி’’ இதழில் பணியாற்றியவர் ஆதலால் கல்கியுடனும் ராஜாஜியுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அவருக்கு மகாத்மா என்றுமே வழிகாட்டி. 

நவகாளியில் நடந்த வன்முறைகள் காந்தியை பெரும் சோர்வு கொள்ளச் செய்கின்றன. அவர் ஆழமான மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார். அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோல்வியடைந்து விட்டனவா என்ற ஐயம் அவருக்கு உண்டாகிறது. வாழ்நாள் முழுவதும் தான் மேற்கொண்ட ஆன்ம பயிற்சி முழுத் தோல்வியைச் சந்திக்கிறதா என்ற குழப்பம் அவருக்கு உண்டாகிறது. பின்னர் அறிவிக்கிறார்: அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோற்காது. எளிய மனிதனாகிய தான் தோல்வி அடையலாம். அவ்வாறாயின் அது தன் ஆத்ம பலத்தின் தோல்வியே தவிர அஹிம்சையின் தோல்வி அல்ல. 

நவகாளி பகுதியில் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களான ஒன்பது பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒருவர் கூட எஞ்சவில்லை. அந்த குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நாய் உயிருடனிருக்கிறது. மகாத்மா சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் உள்ளவர்கள் முற்றழிக்கப்பட்ட அந்த குடும்பத்தைக் குறித்து மகாத்மாவிடம் கூறுகிறார்கள். அந்த வீட்டுக்கு மகாத்மா செல்கிறார். அப்போது அந்த வீட்டின் நாய் வாலை ஆட்டியவாறு மகாத்மாவைச் சுற்றி வருகிறது. அவரை எங்கோ அழைக்கிறது. அவர் அந்த நாயின் பின்னால் செல்கிறார். ஒன்பது நபர்களின் உடலும் புதைக்கப்பட்டிருக்கும் இடுகாட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்று காட்டுகிறது. புதைமேட்டில் மோப்பம் பிடித்தவாறு இருக்கிறது. சில நிமிடங்கள் அங்கே இருந்து விட்டு மகாத்மா அங்கிருந்து புறப்படுகிறார். அப்போது மகாத்மாவுடன் அந்த நாயும் உடன் வருகிறது. மைல் கணக்காக  அவருடன் நடக்கிறது. நவகாளி யாத்திரை முழுதுமே உடனிருக்கிறது. சாவி இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

மகாத்மா அந்த பிராந்தியத்துக்கு முற்றிலும் புதியவர். தனக்கு உணவிட்டவர்களை இழந்த நாயின் துயரம் என்பது மிகக் கொடியது. அந்த துயரத்தை அது ஏன் மகாத்மாவிடம் பகிர்ந்து கொண்டது? தனது எஜமானர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு மகாத்மாவை ஏன் அழைத்துச் சென்றது? மகாத்மாவின் பயணத்தில் உடனிருக்க அது ஏன் முடிவு செய்தது? 

மகாத்மாவுடன் நவகாளி யாத்திரையில் இரண்டு நாட்கள் உடனிருந்த சாவி பதிவு செய்த நேரடி ஆவணமான இந்நூல் மிகவும் முக்கியமானது.