Friday 20 March 2020

ஹிந்த் ஸ்வராஜ்

நான் என்னுடைய கல்லூரி நாட்களில் ‘’சத்திய சோதனை’’ வாசித்தேன். தமிழில் பரவலாக அறியப்பட்ட நூல். அவர் தனது ஆரம்பகட்டங்களில் எழுதிய நூல். ஓர் ஆன்ம சாதகனின் துவக்க காலக் குறிப்புகள் என எண்ணினேன். பின்னர் பொறியியல் இறுதி ஆண்டில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தனது ‘’வாக்கியங்களின் சாலை’’ நூலில் லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ என்ற நூல் குறித்து எழுதியிருந்த கட்டுரை அந்நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியது. பாரதீய வித்யா பவனின் வெளியீடாகக் கிடைத்த அந்நூலை வாசித்தேன். காந்தியை மிகச் சரியாக அறிமுகப்படுத்தும் நூல் என்று எண்ணினேன். பல பிரதிகள் வாங்கி நண்பர்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறேன். ஒவ்வொரு இந்தியனும் வாசிக்க வேண்டிய நூல் என்று கூறுவேன். பின்னாட்களில் அந்நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதினேன். அது ஓர் இலக்கிய இதழில் வெளியானது. அக்கட்டுரையில் தமிழில் காந்தி குறித்த முக்கியமான நூல்களாக மூன்று நூல்களைக் குறிப்பிட்டேன். அவை 1. காந்தி வாழ்க்கை (லூயி ஃபிஷர்) (தமிழ் மொழிபெயர்ப்பு) 2. தென்னாப்ரிக்க சத்யாக்ரகம் (மகாத்மா காந்தி) (தமிழ் மொழிபெயர்ப்பு) 3. இன்றைய காந்தி (ஜெயமோகன்) ஆகிய மூன்று நூல்களைக் குறிப்பிட்டிருந்தேன். சமீபத்தில் சாவி எழுதிய ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை வாசித்தேன். முக்கியமான நூல். நேற்றும் இன்றும் மகாத்மா காந்தியின் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’ நூலை வாசித்தேன். காந்தி நூல்களில் மிகவும் முக்கியமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஒரு வாசகரும் ஆசிரியரும் உரையாடிக் கொள்ளும் பாணியில் இந்நூலை வினா - விடை பாணியில் மகாத்மா அமைத்திருக்கிறார். உரையாடிக் கொள்ளும் வாசகரும் ஆசிரியரும் மகாத்மாவே. தேசம் குறித்தும் தேசப்பணி குறித்தும் தான் சிந்தித்தவற்றை தான் பரிசீலித்தவற்றை கேள்வி பதிலாக அளித்துள்ளார். 

இந்த தேசத்துக்கென ஒரு ஆன்மா உள்ளது என்று காந்தி உறுதியாக நம்புகிறார். எழுதப்பட்டுள்ள அல்லது தொகுக்கப்பட்டுள்ள மன்னர்களின் சரித்திரம் மட்டுமல்ல இந்திய வரலாறு என்று ஐயமின்றி முன்வைக்கிறார். இந்நாட்டின் விவசாயிகளை எந்த மன்னரின் அரசாட்சியும் எதுவும் செய்ய முடியாது என்கிறார். அவர்களை அச்சமின்றி தயக்கமின்றித் தங்கள் கடமையைச் செய்யும் வீரர்கள் என்கிறார். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர்கள் தங்கள் கடமையைச் செய்திருக்கிறார்கள். அதற்கு எவ்விதமான புறத் தூண்டலும் காரணமல்ல என்பதை பதிவு செய்கிறார். இந்த கோணம் எனக்கு ஆச்சர்யமளித்தது. உறுதியான சொற்களில் மகாத்மா இதனை நிறுவுவது மேலும் வியப்பைத் தந்தது. ‘’ஜெய் ஜவான் ஜெய் கிசான்’’ என்ற கோஷம் உருவானதின் பின்னணி புலப்படத் துவங்கியது. 

இந்திய தேசிய காங்கிரஸ் ஆற்றிய செயல்கள் குறித்தும் அதன் எல்லைகள் குறித்தும் காந்தி விவாதிக்கிறார். 

இந்தியா ஒரே தேசம் என்பதை காந்தி விளக்குகிறார். இந்திய மக்கள் ஒரே பண்பாடு கொண்டவர்கள். அவர்களது நம்பிக்கைகளில் எண்ணத்தில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் இந்தியா ஒரே தேசமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. ஒரு மிகப் பெரிய நிலப்பரப்பை ஒன்றுபடுத்தும் மேன்மையான அப்பண்பாடு சமகாலத்தில் அக்கறையுடன் காத்து முன்னெடுப்பது இந்நாட்டு மக்கள் ஆற்ற வேண்டிய கடமை என்கிறார்.

இந்தியாவின் கைத்தொழில்கள் காக்கப்படுவதே இந்தியாவைக் காப்பதற்கான வழி என்று உறுதியாகக் கூறுகிறார். இயந்திரமயமாக்கல் பலன்களை விட அழிவை அதிகமாகத் தரக்கூடியது என்று அவதானிக்கிறார்.

வழக்கறிஞர்களையும் மருத்துவர்களையும் மகாத்மா கடுமையாக சாடுகிறார். நீதிமன்றங்களே நீதி சொல்ல வேண்டும் என்பது வழிக்கறிஞர்கள் சம்பாத்தியத்துக்கான வழியாகவே அமையும் என்கிறார். அவரே ஒரு வழக்கறிஞர் என்பதோடு யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம் இது. இந்திய கிராமங்களின் பாரம்பர்யமான பஞ்சாயத்து போன்ற முறைகளே ஆதரிக்கப்பட வேண்டும் என்கிறார்.

நவீன மருத்துவம் மருத்துவத்தின் அறத்தைச் சிதைக்கிறது எனக் குற்றம் சாட்டுகிறார் மகாத்மா. ஒரு மருத்துவர் நோயாளிக்கு அறிவுறுத்தும் இடத்தில் இருக்க வேண்டியவர். மருந்து தருவது மட்டும் தனது வேலை என்று அவர் நினைப்பாராயின் அதை விடப் பெரிய சமூகத் தீமை வேறொன்றில்லை என்கிறார். நோயின் காரணத்தை நோயாளியின் வாழ்விலிருந்து நீக்குவதும் மருத்துவரின் பணியே என்கிறார் மகாத்மா.

அரசாங்கம் எண்ணிக்கையில் மிகவும் குறைவான ஆட்களைக் கொண்டு இயங்க வேண்டும் என்பதே மகாத்மாவின் எண்ண ஓட்டமாக இருக்கிறது. விவசாயம் மதிக்கப்படும் நெசவு போற்றப்படும் கைத்தொழில்கள் முக்கியத்துவம் பெறும் மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கைக்கொள்ளும் சமூகம் குறித்த கனவை மகாத்மா உருவாக்குகிறார். இந்நூலை வாசிக்கும் போது அது சாத்தியமானதே என்ற நம்பிக்கையை நாமும் அடைகிறோம்.

சிறு நூலாயினும் மிக முக்கியமான நூல் ‘’ஹிந்த் ஸ்வராஜ்’’.