Tuesday 24 March 2020

சத்யம் சிவம்

இன்று மாலை வீட்டிற்கு சோமேஸ்வர் வந்திருந்தான். ஈஷ் என்று கூப்பிடுவோம். அவனது தங்கை பத்மா. சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சென்னையில் விவேகானந்தா கல்விக் கழகம் நடத்தும் பள்ளியில் இருவரும் படிக்கிறார்கள். அவரது தந்தை இவர்கள் சிறு குழந்தையாயிருந்த போது வட இந்தியாவில் பணி புரிந்தார். ஆதலால் இருவரும் சரளமாக ஹிந்தி பேசுவார்கள். அவர்கள் வீடு எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளது. இருவரும் தினமும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள். அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பார்கள். ஈஷ் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு சமீபத்தில் எதிர்பாராத ஒரு அசௌகர்யம் வந்து விட்டது. இவனுடைய படிப்புப் பிரிவு கம்ப்யூட்டர் சயின்ஸ். இவன் பிரிவைத் தவிர மற்றவர்களுக்கு சி.பி.எஸ்.இ பொதுத் தேர்வு முடிந்து விட்டது. கோவிட்19 வைரஸ் முன்னேற்பாடுகள் காரணமாக இவனது பரீட்சையை தள்ளி வைத்து விட்டார்கள். 

‘’அங்கிள்! என் ஸ்கூல்ல வேற குரூப் படிச்ச என்னோட ஃபிரண்ட்ஸ் எல்லாம் டுவெல்த் முடிச்சுட்டாங்க அங்கிள். நான் மட்டும் இன்னும் டுவெல்த்தாவே இருக்கன்”

‘’என்ன எக்ஸாம் மீதி இருக்கு ஈஷ்?’’

‘’கம்ப்யூட்டர் சயின்ஸ்’’

‘’பரீட்சை ஈஸி தானே?’’

‘’ஈஸி தான். ஆனா முடிஞ்சுருந்தா நிம்மதியா இருக்கும்”

‘’பத்து நாள்ல எல்லாம் சரியாயிடும். டோண்ட் ஒர்ரி.’’

அவர்கள் சென்ற வாரமே இங்கு வந்து விட்டார்கள். சொந்தமாக கார் உள்ளது. அவனுடைய அப்பா டிரைவ் செய்து வந்து விட்டார். 

இங்கே அருகில் இருக்கும் அபார்ட்மெண்டில் சில குழந்தைகள் உள்ளன. பத்து வயதிலிருந்து பதினான்கு வயது வரை உள்ள குழந்தைகள். ஒரு வாரமாக ஒரே விளையாட்டு. ஹைட் அண்ட் சீக், பாட்மிட்டன். ரிங் பால். ஒரே கும்மாளம்.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஈஷ் தீவிரமான கிரிக்கெட் ரசிகன். கிரிக்கெட் பற்றிய புள்ளிவிபரங்களை அள்ளி வீசுவான். எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். பௌலிங்கில் நல்ல பயிற்சி உள்ளவன். கிரிக்கெட் தன் வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று விரும்பினான். பின்னர் சட்டென ஒரு தருணத்தில் , கிரிக்கெட் விளையாடுவதை விட்டு விட்டான். அப்போது வந்திருந்த போது அவன் ஒரு வார்த்தை கூட கிரிக்கெட் பற்றி பேசாமல் இருந்ததைப் பார்த்து அது குறித்து விசாரித்தேன். 

‘’அப்பாவுக்கு பிராமிஸ் பண்ணியிருக்கன் அங்கிள். இனிமே கிரிக்கெட் விளையாட மாட்டன்னு. அத பத்தி பேசுனா மனசுக்கு கஷ்டமா இருக்கும். அதனால பேசுறது இல்ல’’

‘’விளையாட மாட்டன். பிராக்டிஸுக்கு போக மாட்டேன்னு தான பிராமிஸ் பன்ன. பேசக் கூடவா கூடாது?’’

‘’பேசுனா ஞாபகம் வரும் அங்கிள். அதனால தான் பேசறது இல்ல”

ஈஷ் சிறு குழந்தையாயிருந்த போது - அவன் எல்.கே.ஜி படித்த போது அவனை நான் ஸ்கூலில் என்னுடைய பைக்கில் அழைத்துச் சென்று விட்டிருக்கிறேன். அவனுடைய தங்கை பிறந்து சில மாதங்களே ஆன கைக்குழந்தையாயிருந்த போது ஈஷ் அம்மாவையும் பாட்டியையும் என்னுடைய காரில் அழைத்துச் சென்று சிதம்பரத்தில் டிராப் செய்திருக்கிறேன். இன்று அவன் ஒரு டீன் ஏஜ் சிறுவன். இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இளைஞனாகி விடுவான்.

அபார்ட்மெண்டில் இருக்கும் குழந்தைகளுடன் விளையாடி முடித்ததும் அவர்களை இன்னும் பக்குவம் பெறாத சிறுவர்கள் என்று தீவிரமாக ஒரு வாரத்துக்குப் பின் இன்று உணரத் துவங்கியதும் என்னைக் காண வந்தான்.

‘’ஹாய் அங்கிள்’’

”ஹாய் கண்ணா!”

‘’வீட்லயே இருக்கறது எப்படி இருக்கு அங்கிள்? இந்த டயத்துல என்ன செய்றீங்க?’’

’’புக்ஸ் படிக்கறது. சில பொயட்ரி எழுதுனன். சில கட்டுரை எழுதனன்”

ஈஷ் தன் மொபைலை எடுத்தான். ’’அங்கிள் உங்க பிளாக் அட்ரஸ் சொல்லுங்க”

”கூகுள்ல என்னோட பேர போட்டு ஒரு ஸ்பேஸ் விட்டு நம்ம ஊரை டைப் பண்ணு ஈஷ் ‘’

அவன் என்னுடைய தளத்திற்குள் சென்று விட்டான்.

’’ரெண்டு நாள் முன்னாடி அழகு ன்னு ஒரு பொயட்ரி எழுதியிருக்கன். வாசிச்சுட்டு இரு. நான் ஷர்ட் போட்டுட்டு வர்ரேன். நாம ஒரு சின்ன வாக் போய்ட்டு வருவோம். சரியா?’’

சோமேஸ்வருடன் நடக்கத் துவங்கினேன். உற்சாகம் ததும்பும் ஒருவர் உடனிருக்கும் போது மனம் தளர்வாக இருக்கிறது. சந்தோஷமும் நம்பிக்கையும் உண்டாகிறது. நான் ஊக்கம் நிரம்பிய மனிதர்கள் உடனிருப்பதை விரும்புபவன்.

‘’அங்கிள்! நீங்க எப்படி பொயட்ரி எழுதுவீங்க?’’

‘’அதை எப்படி சொல்றது ராஜா? ஒரு மொமண்ட் சட்டுன்னு ஒண்ணு தோணும். அது ஒரு காட்சியா இருக்கலாம். இல்ல ஒரு வார்த்தையா இருக்கலாம். இல்ல ஒரு ரிதமா இருக்கலாம். ஒரு ஓசையா இருக்கலாம். அது உண்டானதும் அதை எழுதணும்னு தோணும். அது ஒரு பொயட்ரியா இருக்கலாம்.’’

‘’நான் கூட இங்கிலீஷ்ல சில போயம் எழுதியிருக்கன் அங்கிள் ‘’

‘’எனக்கு காட்டறியா . நான் படிச்சு பாத்துட்டு எப்படியிருக்குன்னு சொல்றன். சரி, இப்ப வாசிச்சயே இந்த போயம் எப்படி இருந்தது?’’

‘’ரொம்ப நல்லா இருந்தது அங்கிள்”

சோமேஸ் முக தாட்சயண்யத்துக்காகச் சொல்கிறேனோ என்ற ஐயம் எனக்கு எழுந்தது.

‘’அந்த போயத்தை நீ எப்படி வாசிச்சன்னு சொல்லு பார்க்கலாம்’’

அவன் சொற்களுக்குத் திணறினான். இரண்டு மூன்று முறை எதையோ சொல்ல ஆரம்பிக்க முயன்றான். அவனுக்கு சரியான துவக்கம் அமையவில்லை. மௌனமாக நடந்தோம். சில அடிகள் நடைக்குப் பின், சட்டென்று பேசத் துவங்கினான்.

’’ யாரோ யார்ட்டயோ ஒரு ஃபீலை சொல்ல முயற்சி பண்றாங்க. அது ரொம்ப பியூரிடியோட இருக்கு. ஒரு சாதாரண ஃபீலை ஈஸியா சொல்லிடலாம். ஆனா ரொம்ப பியூரான ஃபீலை அந்த மாதிரி சொல்ல முடியாது. அதனாலயே சொல்ல முடியாம ஆகுது. அந்த ஃபீலோட காத்திருக்கறது பத்திய போயம் இது.’’

நான் கைக்குழந்தையாய் பார்த்த ஒருவன் என்னிடம் வாழ்வின் தீவிரமான நுட்பமான ஓர் உணர்வைக் குறித்து பேசுவது வியப்பைத் தந்தது. குழந்தைகள் தரும் மகிழ்ச்சி அகத்தைப் புனிதப்படுத்துகிறது.

‘’சோமேஷ்! உன்னை சின்னப் பையன்னு நினைச்சன். நீ ரொம்ப கிரியேட்டிவ்வா இருக்க ராஜா.’’

‘’நான் சொன்னது கரெக்டா?’’

’’பொயட்ரி-ல கரெக்ட் தப்புன்னு எதுவும் கிடையாது. அது பொயட்ரியா இருக்கா இல்லையாங்கறதுதான் கேள்வி. நாம எப்படி வாசிக்கிறோம் என்பது தான் முக்கியம்”

நான் சில கணங்கள் மௌனமாக நடந்தேன்.

‘’இந்தியாவுல காத்திருப்பு குறித்து மூவாயிரம் வருஷத்துக்கு மேல கவிதை எழுதப்படுது. சகுந்தலை துஷ்யந்தனுக்காகக் காத்திருக்கா. ராதை கிருஷ்ணனுக்காகக் காத்திருக்கா. பரதன் வனவாசம் முடிஞ்சு ராமர் எப்ப வருவார்னு காத்திருக்கார். சீதை ராமன் வருவார்னு அசோகவனத்துல காத்திருக்கா. சங்க இலக்கியத்துல காத்திருப்போட சித்திரங்கள் இருக்கு. கண்ணகி காத்திருப்பது. மாதவி காத்திருப்பது. இந்திய மரபுல காத்திருப்பு ரொம்ப ஆழமான படிமம். ஒவ்வொரு காலத்திலயும் அத பத்தி கவிதை எழுதப்படுது ‘’ எனக்கு சோமேஸ் நான் சொல்வதைப் புரிந்து கொள்வானா என்ற ஐயம் இப்போது இருக்கவில்லை.

‘’உனக்கு கிரிக்கெட்ல யாரை ரொம்ப பிடிக்கும்?’’

‘’எம்.எஸ். தோனி. உங்களுக்கு?’’

‘’ராகுல் திராவிட்’’

‘’ரொம்ப பொறுமையானவர் அங்கிள் திராவிட்.’’

‘’இந்தியாவுக்கு நிறைய வெற்றியைத் தந்தவர். தோனிக்கு அடித்தளமா இருந்தவர்’’

‘’உண்மைதான் அங்கிள். எனக்கு தோனி அளவுக்கே பிடிச்ச இன்னொரு பர்சனாலிட்டி ரஜினி அங்கிள்’’

நான் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தேன்.

‘’ரெண்டு பேருக்குமே ஒரு ஒற்றுமை இருக்கு அங்கிள். அவங்க ரெண்டு பேரையும் அவங்க ஆப்போசிட் ஆளுங்களால அவ்வளவு ஈஸியா பிரவோக் பண்ண முடியாது. தோனியை சீண்டுவாங்க. ஆனா தோனியோட கவனம் ஆட்டத்தின் மேலேயே இருக்கும். எதிர் டீமுக்கான பதிலை அடுத்த பந்துலயே தருவார். ஒரு ஹெலிகாப்டர் ஷாட். ரஜினியும் அப்படித்தான். தான் என்ன செய்யறோம்ங்றதல தெளிவா இருக்கார். இப்ப மக்கள்ட்ட சொல்லியிருக்கார். தூத் கி தூத்; பானி கி பானி. எல்லாருக்கும் தெரியும் அங்கிள். எது பால் எது தண்ணின்னு. மக்களே முடிவு செய்யட்டும்னு நினைக்கறார். மக்கள் ரஜினி சொல்றதைக் கேட்டுறுவாங்கன்னு அவரோட எதிரிகளுக்குத் தெரியும் அங்கிள். அதனாலதான் அவர் சாதாரணமா சொல்றதைக் கூட விதவிதமா வேற மாதிரி சொல்றாங்க”

‘’சோமு கண்ணா! எப்படிடா உனக்கு இந்த மாதிரில்லாம் யோசிக்கத் தெரியுது.’’

’’சிஸ்டத்தை சரி பண்ணனும் அங்கிள். நேரோ மைண்டடான ஆளுங்க இந்த உலகத்தை வாழத் தகுதியில்லாம ஆக்குறாங்க. இந்த பூமியை சூப்பரா மாத்தணும் அங்கிள்’’

வாக்கிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பத்மாவை அழைத்து வரச் சொன்னேன். உத்தராயணை ஒட்டி அகமதாபாத் சென்ற போது சபர்மதி ஆசிரமம் சென்றிருந்தேன். அங்கே வாங்கிய மகாத்மா காந்தி படம் பொறித்த கீ-செயின்களை அவர்களுக்குப் பரிசளித்தேன். மனம் இனிமையை உணர்ந்தது.