Wednesday 17 June 2020

விருட்ச பூஜை - நாள் 1

இன்று காலை 4.30க்கு விழிப்பு வந்தது. எழுந்து தண்ணீர் குடித்தேன். காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதை நான் பல ஆண்டுகள் பழக்கமாக வைத்திருந்தேன். யோகா செய்ய வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதால் அதனை பின்னர் மாற்றியமைத்துக் கொண்டேன். இருப்பினும் அந்த பல வருடப் பழக்கத்தின் விளைவாக பகலில் எப்போது நீர் அருந்தினாலும் ஒரு லிட்டர் அளவுக்கு குடித்து விடுவேன். நிறைய நீர் குடிப்பது என்பது எனது உடல்நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். வாசலில் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் சிறு தொட்டி ஒன்று உள்ளது. அதில் நீர் நிரப்பினேன். வீட்டின் சுற்றுச்சுவர் மேல் பறவைகள் நீர் அருந்த சிறு கலன் ஒன்று உள்ளது. அதிலும் நீர் நிரப்பி வைத்தேன். பறவைகளுக்கான உணவை ஒரு கிண்ணத்தில் கொண்டு வைத்தேன். பொழுது விடிந்ததும் பட்சிகள் மொய்த்துக் கொள்ளும். காகம், வால் காகம், மைனா, தவிட்டுக் குருவி ஆகியவை தினமும் வரும். அம்மாவும் அப்பாவும் அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். பறவைகள் எனது அப்பா வாசலில் அமர்ந்திருந்தால் தடையில்லாமல் அவரைச் சுற்றி நெருங்கி வரும். தானியங்களிடத் தாமதமானால் வீட்டுக்குள் வந்து அப்பாவுக்காக குரலெழுப்பும். 

எனக்கு இரண்டு நண்பர்கள். அவர்கள் சகோதரர்கள். இருவருமே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் யோகப்பயிற்சிகள் செய்வார்கள். நான் அரைமணி நேரம் செய்வேன். சில நாட்கள் விடுபடும். தவிர்க்க இயலாது. அவர்கள் வாரத்தில் எல்லா நாளும் விடுபடல் இல்லாமல் செய்வார்கள். மூத்தவர் யோகப் பயிற்சிகளின் விளைவாக ஒவ்வொரு வேளையும் பாதி வயிறு மட்டுமே உண்ணத் துவங்கினார். அவரது உடல் தீவிரமாக இளைத்து விட்டது. பின்னர் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்பதாக முடிவெடுத்தார். தம்பி என்னிடம் அண்ணன் உணவை மிகவும் குறைக்கிறார் என வருத்தப்பட்டார். அண்ணனிடம் நான் பேசினேன்.

‘’அண்ணன்! நீங்க யோகா செய்யறது நல்ல விஷயம். ஆனா உணவைக் குறைக்காதீங்க. நீங்க பயிற்சி செய்யற நேரத்தை வேணும்னா அதிகப்படுத்திக்கங்க. நாம லௌகிக வாழ்க்கைல இருக்கோம். உணவு மேல இருக்கற விருப்பம் வாழ்க்கை மேல இருக்கற விருப்பமும் கூட’’

அவர் கேட்பதாய் இல்லை. 

நான் அவர் தம்பியிடம் சொன்னேன். ‘’ அண்ணன்ட்ட பேசினேன். அவர் ஒண்ணும் கேக்கறதா இல்லை. அவர் தன்னை ஒரு பெரிய யோகா டீச்சர்ன்னு நினைச்சிட்டிருக்காரோ?’’ நாங்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தோம். 

இப்போது அவர்களிடம் மரக்கன்றுகள் நடும் வரை நான் ஒரு வேளை உணவு மட்டுமே உண்ணப் போவதாக சொன்னவுடன் தம்பி என்னிடம் தனியாகக் கேட்டார். ‘’பிரபு! கொஞ்ச நாள் முன்னாடிதான் அண்ணனுக்கு அட்வைஸ் செஞ்சீங்க. இப்ப நீங்க உங்களைப் பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க?’’

உணவைத் தவிர்க்கும் போது மனம் ஓய்வாக உணர்கிறது. நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் எப்படி கிடைக்கும் என்றால் உதாரணத்துக்கு காலையில் தேனீர் அருந்துகிறோம் என்றால் அருந்த ஐந்து நிமிடம் ஆகும். அதற்கான எதிர்பார்ப்பை நாம் வழக்கமாக அருந்தும் நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே உடல் உருவாக்கி விடும். தேனீருக்குப் பதினைந்து நிமிடம் ஆகும். காலை, மாலை, மதியம் என மூன்று வேளையில் 45 நிமிடம். உணவு அருந்துவதற்கு முன் பத்து நிமிடம். உணவு உண்ண 15 நிமிடம். உண்ட பின் 15 நிமிடம். மூன்று வேளைக்கு 2 மணி நேரம். உணவுக்கும் தேனீருக்கும் நாம் நம்மை அறியாமல் செலவழிக்கும் நேரமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். ஒரு வேளை உணவு உண்ணும் ஒருவருக்கு இந்த மூன்று மணி நேரம் பரிசாகக் கிடைக்கும். 

நடைப்பயிற்சி முடித்து விட்டு வந்து சூர்ய நமஸ்கார் செய்தேன். யோகாசனங்களில் சூர்ய நமஸ்கார் பல ஆசனங்களின் தொகுப்பு. எலும்புகள் உறுதிப்படவும் இலகுவான தசை இயக்கத்துக்கும் இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கவும் உதவுவது. இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளில் சூரிய வழிபாடு ஒன்று.

முன்நிற்கும் பணிகளைத் தொகுத்துக் கொள்கிறேன். 

1. கிராம மக்கள் கேட்டிருக்கும் மரக்கன்றுகள் 18,000. பொது இடங்களுக்கு 7,000. மொத்தம் 25,000. சூழ்நிலையைப் பொறுத்து மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்த தடையும் இல்லை. 

2. பொது இடங்கள் : 1. கோயில்கள் 2. குளங்கள் 3. பள்ளிக்கூடம் 4. கால்வாய்க் கரை 5. சாலையின் இரு மருங்கு 6. சுடுகாடு 7. அறுவடைக் களங்கள்

3. கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதலில் ஏழு மரக்கன்றுகளை வழங்குதல் . ’’சப்த விருட்சம்’’ - முருங்கை, எலுமிச்சை, கருவேப்பிலை, வேம்பு, மருதாணி, செம்பருத்தி, சந்தனம்.

முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு. இரத்தத்தைத் தூய்மையாக்குவதில் முன்னணியில் உள்ளது. எலுமிச்சை விட்டமின் சி அதிகம் உள்ள உணவு. கருவேப்பிலையில் இரும்புச்சத்தும் துத்தநாகச் சத்தும் அதிகம். உணவில் மிக அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு. வேப்பந்தளிர் உடலின் நச்சுக்களை நீக்குவதில் முதன்மையானது. மருதாணி மங்கலப் பொருள். அலங்காரப் பொருள். செம்பருத்தி மலர் பூசனைகளுக்கு உகந்தது. சந்தனம் மங்கலத்தின் குறியீடு. 

சப்த விருட்சங்கள் ஊரின் எல்லாக் குடும்பத்திலும் இருப்பதைப் போல ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

4. கிராமத்தில் எட்டு தெருக்கள் உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் கேட்டுள்ள மரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு தெருவின் தேவை என்ன என்பதை கணக்கிட வேண்டும். கன்றுகளை வினியோகிக்க அது உதவியாக இருக்கும்.

5. கிராமத்தின் வரைபடம் ஒன்று தயாரிக்க வேண்டும். அதில் பொது இடங்கள் , அவற்றின் நீளம் மற்றும் பரப்பு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

6. தமிழ்நாட்டில் இருக்கும் மர வகைகளின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். 

7. இந்திய மாநிலங்களின் மாநில மரங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும்.

8. ’’காவிரி போற்றுதும்’’ உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். 

9. கிராமத்தில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து மக்களுடன் விவாதிக்க வேண்டும். 

இன்று காலை வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆலமரம் வரை நடைப்பயிற்சிக்குச் சென்றேன். பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு பிரும்மாண்டமான ஆலமரம். அதன் அடியில் சூலம் ஒன்று நடப்பட்டிருக்கும். காலை 5.40 மணி இருக்கும். நின்று வணங்கினேன். மரம் நடும் பணியில் உடனிருக்குமாறு வேண்டிக் கொண்டேன். திரும்ப நினைத்த போது யாரோ ஆலயத்தை நோக்கி வருவது போல காலடியோசை கேட்டது. ஒரு பெண் வந்தார். மரத்தடியில் தீபம் ஏற்றினார்.  சுடரும் தீபத்தையும் வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.