Tuesday 16 June 2020

விருட்ச பூஜை

மொழியை அம்மாவிடமிருந்து முதலில் அறிந்தேன். மரக்கிளையமர்ந்த கா கா எனக் கரையும் காகத்தைக் காட்டியே அன்னையின் மூலம் மொழி அறிமுகம் நடந்தது. பால பிராயம் தொட்டு பறவைகள் மீதும் அவை அமரும் மரங்கள் மீதும் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது.  காகங்களைப் பித்ருக்களாகக் காண்கிறது இந்திய மரபு.  பின்னர் கதைகளின் நாட்கள் தொடங்கின. இந்த உலகில் இருக்கும் எல்லாக் கதைகளையும் கேட்டு அறிந்திட வேண்டும் என்ற தவிப்பு. சங்கீதக் காக்கையின் கதை. மரத்தடியில் படுத்துறங்கிய தொப்பி வியாபாரியின் கதை. மரா மரத்தில் நுழைந்து ‘’ராம ராம’’ என உச்சரித்து ரத்னாகர் வால்மீகியான கதை. வாழ்வு குறித்த உண்மை அறிய அரசமரத்தின் அடியில் அமர்ந்த பெரும் கருணையாளனின் கதை. வேடனின் பசி தீர்க்க மரத்தில் வசித்த பறவைகள் குடும்பத்துடன் மனமுவந்து தீயில் விழுந்து உணவான கதை. ஞானாசிரியன் யாதவனாக யமுனை தீரத்தில் மரத்தடியில் புல்லாங்குழல் இசைத்த கதை. 

கதை கேட்பவன் ஏதோ ஒரு கணத்தில் கதை சொல்லத் துவங்குகிறான். 

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் ஆடிப் பதினெட்டு அன்று மரக்கன்றுகளை வழங்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம். மக்கள் காவிரிப் பெருக்கை அன்னையாக வழிபடும் நாள். புது வெள்ளம் வாழ்வின் மீதான புதிய நம்பிக்கைகளை உருவாக்கும் நாள். 

இன்னும் 48 நாட்கள் உள்ளன. எல்லாம் சரியாக இருக்கிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடக்கின்றன. பலர் துணையிருக்கின்றனர். இருப்பினும் செயல்பாடுகளுக்கு இறைமையின் ஆசி நாடி மரக்கன்றுகள் வழங்கப்பட்டு முழுமையாக நடப்படும் வரை ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு நாளின் பெரும் பொழுதை பணிகளுக்கு அளித்து செயலாற்ற முடிவு செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் நிகழும் பணிகளை தளத்தில் பதிவிடுகிறேன். 

அம்மாவிடம் இதற்கு ’’விருட்ச தவம்’’ எனப் பெயரிடலாம் என இருக்கிறேன் என்று சொன்னேன். அம்மா ‘’விருட்ச பூஜை’’ என்று சொன்னார். அது மேலும் பொருத்தமாக இருக்கும் என்று பட்டது.