Monday 15 June 2020

அஸ்வமேதமும் அனாயாசமும்

’’காவிரி போற்றுதும்’’ பணிகளுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமத்தில் சுற்றிக் கொண்டிருந்தேன். எனது நண்பரும் உடனிருந்தார். பொது காரியங்கள் செய்யும் போது உற்சாகமாக இருக்க வேண்டும். எவ்விதத்திலும் எவ்விதமான சோர்வும் அணுக வாய்ப்பளித்து விடக் கூடாது. எனக்குப் பல வருடப் பழக்கம் உண்டு. பொது காரியம் செய்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முதல் விஷயம் சமூகம் நாம் எண்ணுவது போல் இருக்காது; அதனால் செயலில் நுழையும் போது பெரிய எதிர்பார்ப்பு எதையும் உருவாக்கிக் கொள்ளக் கூடாது; அதே நேரம் மகத்தானவற்றையே திட்டமிட வேண்டும். ‘’Be Realistic; Plan for a Miracle'' என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  இந்திய மரபு ''சங்க ஸத்வம் ஸம்வதத்வம் ஸம்வோ மனாசி ஜானதாம்’’  ( ஒன்று கூடி சிந்தியுங்கள்; சேர்ந்து அமர்ந்து விவாதம் செய்யுங்கள்; உங்கள் மனம் ஒன்றாகட்டும்) என்கிறது.

’’அன்பர் பணி செய்ய எனை ஆளாக்கி விட்டு விட்டால்’’ எனத் தாயுமானவர் கூறுவது போல ஆனந்த நிலையில் இருப்பேன். 

ஒரு கட்டுமானப் பொறியாளராக எனக்கு ஒரு அனுபவம் உண்டு. வீடு கட்டிக் கொடுக்கும் போது கிரகப்பிரவேசத்துக்கு முன் வீட்டின் உரிமையாளர் அவருடைய குலதெய்வம் கோயிலுக்கு குடும்ப சகிதம் செல்வார். அப்போது என்னையும் அழைப்பார்கள். நானும் செல்வேன். குடும்ப உறுப்பினர்கள் குலதெய்வத்திடம் அர்ச்சனை செய்யும் போது என்னையும் பெயர் நட்சத்திரம் கூறச் சொல்வார்கள். எனக்குத் தயக்கமாக இருக்கும். அப்போது நீங்களும் எங்கள் குடும்ப உறுப்பினர்தான் குடும்ப உறுப்பினர்கள் பெயருடன் உங்கள் பெயரையும் சேர்த்தே அர்ச்சனை செய்ய வேண்டும் என்பார்கள். அர்ச்சகரிடம் அர்ச்சனைத் தட்டில் கை வைத்து ‘’லோக ஷேமம்’’ என்பேன். அர்ச்சகருக்கு மட்டும் நான் சொன்னது புரியும். சிலர் இது என்ன புதிய நட்சத்திரமாக இருக்கிறதே என எண்ணுவார்கள்.

மக்களைச் சந்தித்தல் என்பது பொது காரியங்களில் முக்கியமான ஒன்று. அவர்களுடன் உரையாடும் போது அவர்கள் அபிப்ராயங்களைத் தயக்கமின்றிக் கூறுவதற்கு ஏதுவான சூழ்நிலையை என் குறைவான பேச்சின் மூலமோ மௌனத்தின் மூலமோ உருவாக்குவேன். ஒருவருக்கு ஒருவர் தயக்கம் இல்லாமல் ஆகும் போது அங்கே நமது பணியின் 80% நிறைவு பெற்று விடும். இது பல வருட அனுபவத்தின் விளைவாக திரண்ட அனுபவம். அவர்கள் மனதில் இருப்பது அனைத்தையும் சொன்ன பின் ஒரு சிறு இடைவெளி கிடைக்கும். அதில் மிகச் சுருக்கமாக நான் சொல்ல வேண்டியதைச் சொல்வேன். அதிலும் அவர்களால் எதை சிரமமின்றிச் செயல்படுத்த முடியுமோ அதையே சொல்வேன். 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கிராமத்துக்கு மோட்டார்சைக்கிளில் நானும் நண்பரும் சென்று கொண்டிருந்தோம். நான் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தேன். 

‘’அண்ணன்! இன்னைக்கு எனக்கு ஒரு புது யோசனை காலைல தோணுச்சு’’

‘’அப்படியா! என்ன யோசனை?’’

‘’இப்ப நாம கிராமத்துல 25,000 மரக்கன்றுகளை நடப் போறோம். அதுல தமிழ்நாட்டுல உள்ள எல்லா மர வகையிலயும் ஒன்னு ஒன்னு அந்த கிராமத்துல இருக்கற மாதிரி செஞ்சுடுவோம்.’’

‘’தமிழ்நாட்டுல 500 வகை மரம் இருக்குமா?’’

‘’500க்கும் கொஞ்சம் கூட இருக்கும்”

‘’நல்ல ஐடியா தான். பாட்டனி படிக்கிற ஸ்டூடண்ட்ஸுக்கு ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும். இந்த வருஷம் சுற்றுச்சூழல் செயல்பாடுகளோட தீம் ‘’பயோ - டைவர்ஸிட்டி’’. தமிழ்நாட்டோட மரங்களின் பயோ டைவர்ஸிட்டி நாம ஒர்க் பண்ர ஒரு கிராமத்துல மட்டுமே உருவாக்குறோம்ங்றது நல்ல ஐடியாதான்!’’

நண்பர் வணிகர். நல்முயற்சிகளை மனதாரப் பாராட்டுபவர். 

‘’அண்ணன் இன்னொரு ஐடியா’’

‘’சொல்லுங்க’’

‘’இப்ப நம்ம நாட்டுல ஒவ்வொரு மாநிலத்துக்கு ஒரு மரம் மாநில மரமா இருக்கு. கிராமத்துல ஒரு பொது இடத்துல பெருசா இந்திய வரைபடம் மாதிரி உருவாக்கி அதுல ஒவ்வொரு மாநில பகுதியிலும் அந்த மாநிலத்தோட மரத்தை நடலாம் அண்ணன்’’

நண்பருக்கு முழுமையாகப் புரியவில்லை. நான் விளக்கினேன். 

‘’அண்ணன்! இப்ப நாம ஏ-4 பேப்பர் சைஸில இந்தியாவோட மேப்பைப் பாக்கறோம் இல்லையா?’’

''ஆமாம்’’

‘’அதை அறுநூறு மடங்கு பெருசாக்குனா ஒன்றரை கிரவுண்டு ஏரியா வரும். அதுல இந்திய வரைபடத்தை அதோட எல்லைகளை குத்துக்கல்லால உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளயும் அதோட மாநில மரத்தை நடலாம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் மினிமம் பத்து அடி தூரம் இடைவெளி இருக்கும்.’’

அவர் மனதில் ஒரு சித்திரத்தை உருவாக்கிக் கொண்டார். 

‘’இப்ப தமிழ்நாட்டோட மாநில மரம் பனை. கேரளாவுக்குத் தென்னை. கர்நாடகாவுக்குச் சந்தனம். மகாராஷ்ட்ராவுக்கு மாமரம். குஜராத்துக்கு ஆலமரம். ராஜஸ்தானுக்கு வன்னி. ஹிமாச்சலுக்குத் தேவதாரு. பீகாருக்கு அரசமரம் இப்படி’’

‘’இந்த ஒன்னரை கிரவுண்டு இடத்தைச் சுத்தி வந்தா இந்தியாவையே சுத்தி வந்த மாதிரி இல்லையா’’

‘’ஆமாம் அண்ணன். அம்மையப்பரைச் சுற்றி வந்து விநாயகர் உலகையே சுற்றி வந்ததாக விளக்கம் சொன்ன மாதிரி’’

‘’பிரபு! எனக்கு ஒரு டவுட்?’’

‘’உங்க சந்தேகம் என்னன்னு எனக்குத் தெரியும். இந்த ஐடியால்லாம்  யோசிச்சு உருவாக்கறதா இல்ல தானா உருவாகிறதாங்கறது தானே?’’

‘’அதே தான்!’’

’’சினிமால ஓப்பன் எண்டிங்னு ஒன்னு உண்டு. கதையோட முடிவை பார்வையாளனே முடிவு செஞ்சுக்கலாம். எப்படி வேணாலும். அது போல நீங்களே முடிவு பண்ணிக்கிங்க’’

கிராமத்துக்கு சென்று இளைஞர்களை - இளைஞர் குழுக்களை - பரிச்சயமானவர்களை எல்லாம் சந்தித்து பணியின் முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தேன். ஆடிப்பெருக்கை ஒட்டி மரம் நடுதலை வைத்துக் கொள்ளலாம் என்று முன்பே கூறியிருந்தேன். ஆடி ஆவணியில் அந்தி மழை பெய்யும். மரங்களின் வளர்ச்சிக்கு அது உகந்தது. மக்களும் அதனை ஆமோதித்தார்கள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் அங்கே இருந்திருப்போம். அவ்வூரில் இருக்கும் எல்லா சீமைக்கருவேல் மரங்களையும் அகற்றி விடுவது என முடிவெடுத்தோம். வீதிகளில் சாலைகளில் எங்கும் பூமரங்கள் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். உழவர்களுக்கு இயற்கை வேளாண்மை பயிற்சி தருவது குறித்து பரிசீலித்தோம். கிளம்பும் நேரம் வந்தது. இன்னும் இரண்டு பேரை பார்க்க வேண்டும். ஒருவரை மட்டுமே சிறிது நேரம் பார்க்கலாம். அங்கே சென்றோம்.

அவருக்கு எண்பது வயது. அவரைக் காண்பவர்கள் அவருக்கு அறுபது வயது என்றே நினைப்பார்கள். 

‘’பிரபு! சர்வே எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? மரக்கன்னு எப்ப வருது?’’

‘’ஆடிப் பெருக்கை ஒட்டி பிளான் பண்ணியிருக்கோம் சார்”

‘’அது கரெக்டான டைம் தான்”

‘’சார்! பொது இடங்கள்ல மேக்ஸிமமா மரக்கன்றுகள் வைக்கற மாதிரி யூஸ்ஃபுல்லான ஐடியாஸ் யோசிங்க சார். இப்ப அதை முடிவு பண்றத்துக்கான நேரம். மரக்கன்னு கொண்டு வர்ரது கொஞ்சம் பெரிய ஒர்க். அதுல நான் பிஸியா இருப்பன். அதே நேரத்துல ஒரு சின்ன விஷயம் கூட மிஸ் ஆகக் கூடாது. லோக்கல் சப்போர்ட் முழுமையா வேணும் சார். ரிஸப்ஷன் ரொம்ப நல்லா இருக்கு. இருந்தாலும் இன்னும் பல பேரை வேலைல சேத்துக்கணும்னு நான் நினைக்கறன்.’’

‘’மாயூரத்துக்கும் கிராமத்துக்கும் ஒரு மாசமா போய்ட்டு போய்ட்டு வர்ரீங்களே. ரொம்ப சிரமம் எடுத்துக்கிறீங்க. பாத்துட்டுத்தான் இருக்கன்’’

‘’சிரமம் ஒன்னும் இல்ல சார். சந்தோஷமாத்தான் செய்யறன்.’’

‘’எல்லாம் நல்லபடியா நடக்கும் பிரபு”

‘’தேங்க் யூ சார்’’

எங்களுக்கு மோர் கொடுக்கச் சொன்னார். 

‘’பிரபு! நீங்க எப்ப வேணாலும் இங்க வாங்க. நான் இல்லன்னாலும் மாமி இருப்பாங்க. காஃபி வேணும்னா காஃபி சாப்பிடுங்க. மதிய நேரத்துல சாப்பாடு எப்போதும் இருக்கும். மோர் குடிங்க. உங்க அகம் மாதிரி நினைச்சுக்கங்க’’

‘’உங்கள மாதிரி பெரியவங்க என் மேல காட்டுற அன்பே போதும் சார்’’

பெரியவர் ஒரு கதை சொன்னார்.

‘’எனக்கு ஒரு பெரியப்பா இருந்தார். அவர் எங்கிட்ட சொல்வார். எவனொருவன் மா, பலா, வாழை, ஆல், அரசு, தென்னை, பலா, நெல்லி, வேம்பு, புளி, மூங்கில், சந்தனம், பனை, நாவல், வன்னி, வில்வம், நல்லத்தி முதலான மரங்களை நட்டு வளர்த்து தானும் பலன் பெற்று பிறருக்கும் பயன் பெறத் தருகிறானோ அவன் அஸ்வமேத யாகம் செய்தவன் அடையும் பேறை அடைவான். அவன் மரணத்தை அனாயாசமாகக் கையாளுவான். கடந்து செல்வான்’’

நான் என்னுடைய குறிப்பேட்டில் அவர் சொன்ன மரங்களைக் குறித்துக் கொண்டேன். 

‘’நான் சொன்ன அத்தனை மரத்தையும் அவர் தோட்டத்துல வளர்த்தாரு. எல்லாருக்கும் கொடுத்து சந்தோஷப்பட்டாரு. தானே வளர்த்த நெல்லி மரத்தோட கட்டையையும் சந்தன மரக் கட்டையையும் பரண் மேல அடுக்கி வச்சிருந்தாரு. தன்னோட மரணத்துக்குப் பிறகு தன்னை அந்த மரக்கட்டைகளால் ஆன சிதையில ஏத்தணும்னு சொன்னாரு. அதே போல ஒருநாள் தோட்டத்துல நெல்லி மர நிழல்ல சேர் போட்டு ஒக்காந்திருந்தாரு. நான் வயலுக்குக் கிளம்பறேன்னு அவர்ட்ட சொன்னேன். சாப்டிட்டு போ ; வெறும் வயிறா போகாதேன்னார். சாப்டுட்டு  ஒரு விபரம் கேக்க வந்து பெரியப்பான்னு கூப்படறேன்; உயிர் நின்னுருக்கு. அவர் சொன்ன மாதிரியே மரணத்தை ரொம்ப அனாயாசமாக கையாண்டுட்டுத்தான் போனார், அவர் இறந்த மூணு மணி நேரத்துல அவர் சொன்ன மாதிரியே சிதை ஏத்துனோம்’’

மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்த போது நண்பர் அஸ்வமேத யாகம் என்றால் என்ன என்றார்.