Tuesday 30 June 2020

எலெக்ட்ரானிக்ஸ்

எனக்கு ஜப்பான் மீது சிறு வயதிலிருந்தே ஆர்வம் உண்டு. அவர்கள் பணிப் பண்பாடு மிக்கவர்கள். எதையுமே மிக நேர்த்தியாகச் செய்வதில் வல்லவர்கள். எதையுமே மிக நேர்த்தியாக வெளிப்படுத்தக் கூடியவர்கள். இவை நான் சிறுவனாயிருந்த போது இதழ்களில் இடம் பெறும் செய்திகளிலும் கட்டுரைகளிலும் வெளியாகும். ஜப்பான் மலைத்தொடர்கள் எரிமலைகளின் அழகிய புகைப்படங்கள் வெளியாகும். எலெக்ட்ரானிக்ஸ் அன்று முழுமையாக ஜப்பானியர்கள் கையில் இருந்தது. எதையுமே கையடக்கமாக விதை போல வெளிப்படுத்துவது ஜப்பானிய பாணி. 

நுட்பமான அச்சமூகம் உலகின் மீது பெரும் போரைத் திணித்த சக்திகளில் ஒன்றாகவும் ஆனதும் அதனால் பெரும் பாதிப்புக்கு ஆளானதும் மானுடத் துயரங்கள். 

தி.ஜானகிராமன் ஜப்பானின் பின்புலத்தில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ’’யாதும் ஊரே’’ என்று நினைவு. 

நான் விரும்பிய எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களாக எவை இருந்திருக்கின்றன என்று யோசித்துப் பார்க்கிறேன். 

1. ரேடியோ

சிறு வயதிலிருந்தே ரேடியோ மீது ஆர்வம் உண்டு. அதன் சிறிய உருவம். அதில் அசரீரி போல குரல் கேட்பது ஆகியவை இப்போதும் ஆச்சர்யத்தை உருவாக்குகிறது. நான் தொலைக்காட்சி பார்ப்பதே இல்லை. பார்த்து பல வருடங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். 

அப்பா இப்போதும் ரேடியோ கேட்கிறார். காலை 6.45 மாநிலச் செய்திகள். இரவு 9 மணி ஆகாசவாணி ஆங்கிலச் செய்திகள். என் காதிலும் விழும். 

2. சயிண்டிஃபிக் கால்குலேட்டர்

பொறியியல் கல்லூரியில் படித்த போது சயிண்டிஃபிக் கால்குலேட்டர் பயன்படுத்துவோம். இப்போதும் என்னிடம் இருக்கிறது. கால்குலேட்டர் என்றால் அது சயிண்டிஃபிக் கால்குலேட்டர்தான். 

3. கிண்டில்

கிண்டில் ஓர் அற்புதம். இப்போது பல புத்தகங்களைக் கிண்டிலில் வாசிக்கிறேன். 

4. மடிக்கணிணி

டெஸ்க் டாப் கணிணிகள் அதிகமாகப் புழக்கத்திலிருந்த காலத்திலேயே நான் வாங்கியது மடிக்கணிணி. பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன். கீ போர்டு வேலை செய்யாமல் போனது. எக்ஸ்டெர்னல் கீ போர்டு வாங்கினேன். அதுவும் சில வருடங்களுக்குப் பின்னால் பழுதானது. அதை மாற்றி விட்டு இன்னொரு விசைப்பலகையைப் பயன்படுத்தி வருகிறேன். 

ஸ்மார்ட்ஃபோன் உலகுக்குள் நான் வரவில்லை.