Friday 26 June 2020

முதல் கொடை

திருச்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வராணி எனது நண்பர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் திருச்சியிலிருந்து லடாக் வரை தனது வெஸ்பா ஸ்கூட்டரில் தனியாகப் பயணித்தார். அவர் திருச்சியிலிருந்து கிளம்பி லடாக் சென்று பின்னர் மீண்டும் திருச்சி திரும்பி வர ஒரு மாதத்துக்கும் மேலானது. இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு மிக நல்ல முறையில் இருக்கிறது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கையில் பதிவு செய்தார். அவர் பல வெளிநாடுகளிலும் பயணம் செய்திருக்கிறார். எந்த நாட்டை விடவும் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை தனது அனுபவத்திலிருந்து பதிவு செய்திருக்கிறார். இலக்கிய வாசகர். சிற்பவியலில் ஆர்வம் உடையவர். எப்போதும் சிறிதும் பெரிதுமாக ஏதேனும் ஒரு பயணத்தில் இருப்பவர். 

நேற்று அவரிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த போது, ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து கூறினேன். அவர் மிகவும் உற்சாகமடைந்தார். ஏன் தன்னிடம் பணி துவங்கிய போதே கூறவில்லை என்று வருத்தப்பட்டார். கள ஆய்வின் போது தானும் பங்கேற்க ஏன் வாய்ப்பு தரவில்லை என்றார். அவர் பெரும் மனோதிடம் கொண்டவர். வழக்கறிஞர் என்பதால் எதையுமே மிகக் கறாராக துல்லியமாகவே மதிப்பிடும் மனப்பான்மையை இயல்பாகக் கொண்டிருப்பவர். எனினும் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் அவரை மிகவும் உணர்ச்சி கொள்ளச் செய்தன.

இன்று காலை என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்காகத் தான் ரூ.1000 நிதியளிக்க விரும்புவதாகக் கூறினார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. விஷயத்தை சற்று தள்ளி வைப்போம் என்பதற்காக , ‘’இன்னும் 15 நாளில் மரக்கன்றுகள் நடுதல் நிகழும்; அப்போது பார்த்துக் கொள்ளலாம்’’ என்றேன். தான் செய்ய நினைக்கும் ஒரு நல்ல செயலைத் தன்னால் அத்தனை நாள் தள்ளி வைக்க முடியாது. இப்பொழுதே அனுப்பி வைக்கிறேன் என்றார். அவருடைய அம்மாவும் என்னிடம் பேசினார். எங்கள் முயற்சிகளுக்கு ஆசியளித்தார். 

எங்கள் அணி அளவில் மிகச் சிறியது. ஒற்றை இலக்க உறுப்பினர்களை மட்டுமே கொண்டது. ஒரு பொதுப் புரிதலில் இணைந்திருப்பது. எங்கள் செயல்பாடுகள் இப்போதுதான் துவங்கியுள்ளன. எங்கள் முதல் செயலில் பெரும்பாலான பணிகள் இனிதான் நடைபெற உள்ளன. எங்கள் வேலைத்திட்டம் குறித்து நான் என் தளத்தில் பதிவு செய்வது கூட இந்த விதமான வேலைமுறையை எளிதாக கைக்கொள்ளக் கூடியவர்கள் அதிக அளவில் அதிக கிராமங்களில் முழுமையாக மரம் நடுதலை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். கிராமத்தில் எங்கள் பணி ஒருங்கிணைப்பே. கிராமங்களின் மாற்றத்துக்காக வேலை செய்ய விருப்பம் உள்ளவர்களையும் ஒரு கிராமத்தையும் நாங்கள் ஒன்றாகக் கொண்டு வருகிறோம். அவர்களுக்கிடையே நாங்கள் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. பொது இடத்தில் நடப்படும் மரக்கன்றுகள் வளர்ந்து விருட்சமாகும் வரை பராமரிப்பதாய் உறுதி எடுத்துள்ளோம். எங்கள் பணி இனிதான் துவங்குகிறது. 

நண்பர் செல்வராணி எதிலும் விடாப்பிடியானவர். எனது கணக்கு எண்ணை அனுப்பியே தீர வேண்டும் என்றார். குழுவின் மூத்த உறுப்பினர் ஒருவரைக் கலந்தாலோசித்தேன். அவரும் தயங்கினார். பின்னர், ‘’பிரபு! செல்வராணி ஒரு யாத்ரிகர். இந்திய நிலமெங்கும் பயணித்தவர். இந்தியர்களுக்கும் விருட்சங்களுக்குமான உணர்ச்சிகரமான உணர்வை அறிந்தவர். அவர் நமக்கு அளிக்கும் கொடையை நாம் ஏற்போம்.’’ என்றார். 

நான் கணக்கு எண்ணை அனுப்பினேன். சில நிமிடங்களில் ரூ.1000 அனுப்பப்பட்ட தகவல் வந்தது.

இந்திய நிலத்தின் மோட்டார்சைக்கிள் பயணியான செல்வராணிக்கு எங்கள் நன்றி!