Thursday, 2 July 2020

சாம்

மர்ஃபி வீட்டில் இருக்கிறான். அவனுடைய அம்மாவிடமும் அப்பாவிடமும் மன்றாடி ஒரு குட்டி நாய்க்குட்டியை வீட்டுக்கு எடுத்து வந்து விட்டான். அதற்குப் பெயரிட வேண்டும். ஒரு வாரம் பல பெயர்களைப் பரிசீலித்தான். இந்த உலகில் அது அவனுக்கு முற்றும் சொந்தமானது. அதன் எல்லா பொறுப்புகளும் அவனையே சாரும். வானின் கடவுள் சாம் எவ்வாறு மர்ஃபியால் கவனித்துக் கொள்ளப்படுகிறான் என்பதை தினமும் கண்காணிக்கிறார். கடவுளிடம் நன்மதிப்பைப் பெற வேண்டுமே! மர்ஃபி அயராமல் அதன் பின் சுற்றினான். காலையில் பசும்பால் காய்ச்சி உணவிடுவது. பிஸ்கட் போடுவது. சோறூட்டுவது. எல்லாருக்கும் சாமை அறிமுகம் செய்து வைப்பது. மர்ஃபியின் உலகம் சாமால் நிறைந்திருக்கிறது. 

சாமின் அம்மாவும் சகோதரர்களும் சாமிடம் வர முயல்வதுண்டு. மர்ஃபி அவர்களை அனுமதிப்பதில்லை. சாம் மனித வாசனையால் நிரம்பத் துவங்கியதும் அவன் குடும்பத்தினர் அவனிடமிருந்து விலகினர். வேறு என எண்ணத் துவங்கினர். 

‘’மாமா! இப்பல்லாம் ஏன் மாமா அதெல்லாம் வந்து சாமை பாக்கறதில்ல?’’

‘’மர்ஃபி! நீ எப்போதும் தூக்கிட்டு அலையறதால சாமோட உடம்புல உன் வாசனை அதிகமா இருக்கு. அதனால சாமை அது வேறன்னு நினைக்கும்.’’

‘’மாமா! அப்ப என் ஒடம்புல சாம் வாசனை இருக்குமே? அப்புறம் ஏன் என்னைப் பார்த்தாலும் ஓடுது?’’

‘’நல்ல கேள்வி மர்ஃபி!’’

சாம் இப்போது எனக்கும் நண்பனாகி விட்டது. நீளமான வாலை விதவிதமாக ஆட்டிக் கொண்டேயிருக்கிறது. வாஞ்சையாக எப்போதும் பார்க்கிறது. எங்கே கிளம்பினாலும் தன்னையும் உடன் அழைத்துச் சென்றால் என்ன என்பது போல் பார்க்கிறது. அடிக்கடி வெளியே போகிறானே என்ன செய்து கொண்டிருக்கிறான் என கண்காணிக்கிறது. அவ்வப்போது குழந்தை போல் படுத்து உறங்குகிறது. என்னை விட என் தந்தையிடம் மேலும் நெருக்கம். பிஸ்கட் போட்டால் வான் நோக்கி எம்பி விளையாடும். 

காலையில் கார் துடைத்துக் கொண்டிருந்தேன். நான் செய்வதைப் பார்த்துக் கொண்டு உடனிருந்தது. 

அம்மாவிடம் கேட்டேன்.

‘’அம்மா! சாம் நம்ம வீட்ல இருக்கட்டும்மா’’

‘’மர்ஃபி ஊருக்குப் போனதும் இங்க தான இருக்கப் போகுது?’’

‘’அப்ப இருக்கறது இப்பவே இருக்கலாம்ல’’

‘’மர்ஃபி ஒத்துக்க மாட்டான்’’

சில நாட்களுக்கு முன்னால் ரூமியின் கவிதை ஒன்றை எனது நண்பன் எனக்கு அனுப்பியிருந்தான். 

காதல் நாய்கள்
---------------------------

நடுநிசியில் ஒருவன்
இறைஞ்சிய வண்ணமிருந்தான்
‘’இறைவா! இறைவா!’’
அப்போற்றுதலில்
அவனது உதடுகள்
கனிந்து போயின

அவநம்பிக்கைவாதி ஒருவன்
அப்போது கேட்டான்
‘நீ இறைஞ்சுவதைக்
கேட்க நேரிட்டது.
அதற்கு எப்போதேனும்
பதில் கிடைத்ததா உனக்கு?’’

இதைக் கேட்டவுடன்
அவனால் விடையளிக்க முடியவில்லை
வழிபடுவதை விடுத்து
குழம்பியவாறு துயிலில் ஆழ்ந்தான்

ஆன்மாக்களின் வழிகாட்டி
ஒருவனை
அடர்ந்த பசும்காட்டில்
தான் காண்பது போல்
கனவு கண்டான்

‘போற்றுவதை ஏன்
நிறுத்தி விட்டாய் நீ?’

‘ஏனெனில் பதிலேதும் கிடைக்கவில்லை எனக்கு’

‘நீ வெளிப்படுத்தும் இவ்வேட்கையே
உனக்குக் கிடைத்த பதில்’

உன்னை மன்றாடச் செய்த துக்கமே
உன்னை இட்டுச்செல்லும்
சங்கமத்திற்கு.

உதவி கோரும்
மாசற்ற உனது துயரமே
அந்த ரகசியக் கோப்பை.

தன்னைப் பேணிக்காப்பவனுக்காக
தவித்து முனகும்
நாயைக் கவனித்துள்ளாயா?
அந்த முனகலே
உயிர்ப்புள்ள இணைப்பாகும்.

எவரும் பெயரறியா
காதல் நாய்கள்
இருந்து வருகின்றன
இவ்வுலகில்

அப்படியொன்றாக மாற
அர்ப்பணித்து விடு
உனது வாழ்வை.