Wednesday 29 July 2020

மகாத்மாவின் அன்னை

நேற்று எனது நண்பர் ஒருவர் அழைத்திருந்தார். என் மீது மிகுந்த பிரியமும் அக்கறையும் கொண்டவர். கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து அவரிடம் விளக்கினேன். சமீபத்தில் வெளியான ‘’பிரிவு’’ சிறுகதை குறித்து அவருடைய அபிப்ராயங்களைத் தெரிவித்தார். 15 நாட்கள் முன்பு பேசிய போது என்ன புத்தகம் வாசிக்கிறீர்கள் என்று கேட்டார். மகாராஷ்ட்ராவின் வரலாறு குறித்த நூல் ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தேன். அதனைக் கூறினேன். இப்போதும் அந்த புத்தகத்தையே வாசித்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தேன். 

இன்று விடிகாலை விழிப்பு வந்து விட்டது. நேற்றைய உரையாடல் என் மனத்தில் இருந்தது. என் நூலகத்தைத் துழாவினேன். ஒரு சிறு நூல் கையில் கிடைத்தது. அதனை முழுமையாக வாசித்தேன். எனது இப்போதைய மனநிலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொண்ட நூலாக உணர்ந்தேன். அது எப்போதும் துணையிருக்கும் நூலும் ஆகும். 

மகாத்மா ஹரிஜன், யங் இந்தியா நூல்களில் பகவத்கீதை குறித்து எழுதிய கட்டுரைகளின் மொழிபெயர்ப்பு இச்சிறு நூல். நூலின் பெயர் : கீதை - என் அன்னை.

மகாத்மாவின் சொற்களை நாம் படிக்கும் போது உணரும் விஷயம் அவர் கூறுபவை அவரது அனுபவத்திலிருந்து எழுந்து வந்தவை என்பதே. அவர் எந்த விஷயத்தையும் முழுமையாக சிந்திக்கக் கூடியவரே. எனினும் அவரது எழுத்துக்களில் தனது சொந்த அனுபவத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அந்த அனுபவத்தை ஆதியோடு அந்தம் படிப்படியாக விளக்குகிறார். அதனால் ஓர் ஆரம்ப மாணவனிலிருந்து அறிஞர் வரை அனைவரின் வினாக்களுக்கும் அதில் விடை இருக்கிறது. 

மகாத்மா இந்தியர்கள் அனைவரும் பகவத்கீதையைப் பயில வேண்டும் என்று கூறுகிறார். அன்றாட வாழ்க்கையின் பல்வேறு செயல்பாடுகளுக்கு மனிதர்களின் வெவ்வேறு விதமான முயற்சிகளுக்கு அந்நூல் துணை செய்யும் என்பதில் உறுதியாக இருக்கிறார். நாடு முழுவதும் பகவத் கீதை முற்றோதல் செய்யப்பட வேண்டும் என்ற விருப்பம் காந்திக்கு இருக்கிறது. சிறுவர்களின் இளைஞர்களின் மனத்திற்குள் கீதையின் பிரதி நுழைந்து விட வேண்டும்; அது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் வழிகாட்டும் என்ற புரிதல் காந்திக்கு இருக்கிறது.

இந்தியாவில் வேத காலத்திலிருந்து தொடர்ந்து வரும் கல்விமுறைகளில் ஒன்று பிரதியை மனனம் செய்தல். வேதம் எழுதாக் கிளவி. ஒலி ஒழுங்காகவே தலைமுறை தலைமுறையாக கைமாற்றப்பட்டு வந்தது. இன்றளவும் அந்த முறை தொடர்கிறது. மறை ஓதப்படுதல் போல கீதையும் மனனம் செய்து ஓதப்பட வேண்டும் என காந்தி விரும்புகிறார். மனனம் செய்யும் போது பிரதி மனதினுள் ஒத்திசைவாகச் சென்று விடும். குறிப்பிட்ட வாழ்க்கைத் தருணங்களின் போது அப்பிரதியின் சில சொற்கள் அகத்தில் எழுந்து வழிகாட்டும். ஒரு பிரதியை புறவயமாக அணுகி விளக்கங்களுடன் புரிந்து கொள்வது என்பது முறை. அதை விடவும் சக்தி வாய்ந்த வழிமுறை மனனம் செய்தல். கீதையைப் பாராயணம் செய்வதுடன் நமது நெருக்கடியான வாழ்க்கைத் தருணங்களில் அதன் ஒளியில் பயணிக்க வேண்டும் என காந்தி விரும்புகிறார்.

நமது இன்றைய வாழ்க்கைமுறையில், முதலாளித்துவம் வாழ்க்கையை தனிநபர்வாதத்தை நோக்கி நகர்த்தியுள்ளது. தனிநபர்வாதம் பொருள் சார்ந்த வாழ்க்கையை நோக்கி அனைத்தையும் திருப்புகிறது. இந்த காலகட்டத்தில் கீதையின் செயல் யோகம் உலகம் உய்வு பெற சிறப்பான மார்க்கம். செயல் மூலம் கற்றல் நிகழும். கர்மயோகம் ஒருவனை ஞானியாகவும் ஆக்கும். செயல் மூலம் உன்னதமான உணர்வுகளை உண்டாக்க முடியும். கர்மயோகம் ஒருவனை பக்தனாகவும் ஆக்கும். கர்மம் - ஞானம் - பக்தி என்ற மூன்றும் செயல் மூலம் சாத்தியமாகும்.

பகவத் கீதையை மகாத்மா தன் அன்னை என்கிறார்.