Saturday, 4 July 2020

உலகின் ஆசிரியன்

கிராமத்தில் பணி புரியும் தோறும் நாளும் தேசம் பற்றிய சித்திரம் இன்னும் நுட்பமானதாகக் காணக் கிடைக்கிறது. இந்தியாவை மேலும் ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பணி எனக்கு உதவியிருக்கிறது. இருபத்து ஓராம் நூற்றாண்டில், போக்குவரத்து வசதிகள் மேம்பட்ட நிலையில் இருக்கும் ஒரு காலகட்டத்தில் நான் ஒரு கிராமத்தில் பணி புரிகிறேன். அங்கே செல்லும் போது எனக்கு அங்கே யாரையும் முன் அறிமுகம் கிடையாது. அந்த கிராமத்துக்குச் செல்வது அதுவே முதல் முறை. என் முன்னெடுப்பில் அவர்கள் பங்கெடுப்பார்கள் என்ற திடமான நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கை எப்படி உருவானது? ‘’அதிதி தேவோ பவ’’ என்பது இந்தியர்களின் அகத்தில் ஆழமாகப் பதிந்த ஒன்று. அந்த மதிப்பீடு ஐயாயிரம் ஆண்டுகளாக இந்தியர்களின் அகத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. தமிழ்நாட்டில், தெலங்கானாவில், குஜராத்தில், ஹரியாணாவில், உத்தரகண்டில் என எங்கு சென்றாலும் விருந்தினனுக்கு எளிய மக்கள் வரவேற்பையே அளிப்பார்கள். எனக்கு அளித்தார்கள். அது என் அனுபவம். 

இந்தியர்கள் ஒரே கடவுளை வணங்குபவர்கள் அல்ல. ஐந்து பேர் இருக்கும் ஒரு வீட்டில் தந்தை சிவனை வணங்குவார். அன்னை ராமனை வணங்குவார். மூத்த பிள்ளை முருகனை வணங்குவான். இளைய பிள்ளை விநாயகரைத் தினமும் கும்பிடுவான். அந்த வீட்டின் பெண் தினமும் திருப்பாவை பாடி திருமாலைத் துதிப்பாள். வருடத்துக்கு ஒருமுறை அந்த வீட்டில் உள்ள அனைவருமே குடும்பமாக திருமலை சென்று வருவார்கள். உலகம் அடைய வேண்டிய இந்த லட்சிய நிலையை பல நூற்றாண்டுகளாக ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் இயல்பான பழக்கமாகவே கொண்டுள்ளது. 

குடும்ப அமைப்பு என்பதும் அதன் உறுப்பினர்கள் மீது குடும்பம் எடுத்துக் கொள்ளும் பொறுப்பும் அக்கறையும் என்பதும் இந்தியாவுக்கே உரிய தனிச்சிறப்பு. உலகின் பெரும்பாலான நாடுகள் தனது பிரஜைகளின் மருத்துவச் செலவை பராமரிப்புச் செலவை அரசாங்கங்களே பார்க்க வேண்டிய நிலையில் உள்ளன. இங்கே உள்ள  குடும்ப முறையை மற்ற நாடுகள் பரிசோதித்துப் பார்க்க வேண்டிய காலகட்டம் உலகிற்கு இப்போது உருவாகியுள்ளது. 

ஒவ்வொரு இந்திய கிராமத்திற்கும் மானுடத்துக்கான மேலான மதிப்பீடுகளை அறுவுறுத்தியவர்களின் சொற்கள் சென்றடைந்த வண்ணமே உள்ளன. பகவத்கீதையை அருளியவனின் சொற்கள். அருள் பொங்கிய பகவான் புத்தரின் சொற்கள். அஹிம்சையை விரதமாகக் கொண்டனே மாவீரன் என்ற உண்மையை உரைத்த பகவான் மகாவீரரின் சொற்கள். ‘நீயும் இறையும் இரண்டல்ல’ என்ற ஆதி சங்கரின் சொற்கள். மானுட சமத்துவத்தைக் கனவு கண்ட ராமானுஜரின் சொற்கள். ‘’இந்தியாவை மட்டுமல்ல; ஒட்டு மொத்த உலகையுமே நாம் எழுப்பியாக வேண்டியிருக்கிறது’’ என அறைகூவிய சுவாமி விவேகானந்தரின் சொற்கள். ’’நம் கண்ணியமான செயல்கள் மூலம் இந்த உலகத்தை அதிரச் செய்ய முடியும்’’ என்ற மகாத்மாவின் சொற்கள். 

எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்கு அளிக்கும்!
ஆம்! இந்தியா உலகிற்கு அளிக்கும்!
-பாரதி