Thursday 9 July 2020

கிழக்கும் மேற்கும்

நாம் ஐரோப்பாவைக் குறித்து நன்மதிப்பு வைத்துள்ளோம். அவர்களுடைய தொழில்நுட்பம், எந்திரங்கள், மருத்துவம், சமூக நியதிகள், திட்டமிடல் ஆகியவை குறித்து நாம் வியக்கிறோம். உண்மையில் உலகமே வியக்கும் வண்ணம் அவர்கள் செயல்பாடுகள் இருந்ததா அல்லது இருக்கிறதா என்பதை பரிசீலித்துப் பார்ப்போம்.

நமது பாடப்புத்தகங்கள் நிரூபணவாத அறிவியலைப் போதிக்கின்றன. அறிவியல் என்ற அறிவுத்துறையில் அது ஒரு சிறு பகுதியே. குவாண்டம் இயற்பியல் நியூட்டன் இயற்பியல் அடிப்படைகளின் ஒரு பகுதியை மறுத்த வண்ணமே முன்னால் செல்கிறது. அறிவியல் என்பது தொடர் விவாதம். அதில் உலகின் எல்லா நாடுகளும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன. நாடுகள் உருவாவதற்கு முன்னர் சமூகங்கள் உருவாவதற்கு முன்னர் ஆதி மனிதர்கள் காலத்தில் வரையப்பட்ட குகை ஓவியங்களில் வானியல் குறித்த வியப்பூட்டும் பல பதிவுகள் உள்ளன. உலகில் கீழை நாடுகளில் பலவிதமான எந்திரங்கள் புழக்கத்தில் இருந்தன. பிரிட்டிஷ் இந்தியா வந்ததற்கு பல காலம் பின்னரும் இன்று கூட சாத்தியப்படுத்த முடியாத நெசவு எந்திரங்களும் நெசவுத் தொழில்நுட்பமும் இந்தியாவில் இருந்தது.

உலகின் தொன்மையான மருத்துவ முறைகள் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவை. மருத்துவ சேவையை ஆன்மீகத்தின் ஒரு பகுதியாக எண்ணும் மனப்பான்மை கொண்டவை இந்திய சமயங்கள். சமணமும் பௌத்தமும் நோய் அகற்றுதலை தங்கள் துறவிகளின் கடமைகளில் ஒன்றாகவே வலியுறுத்தின. இந்தியர்களின் வாழ்க்கைமுறையை உருவாக்கியதில் ஆயுர்வேத மருத்துவம் முக்கிய பங்கு வகித்தது. இன்றும் சாமானிய இந்தியர்களின் உணவுப்பழக்கத்தில் ஆயுர்வேதம் உடல்நலன் குறித்து பரிந்துரைக்கும் உணவுப்பொருட்கள் இருக்கின்றன.

இந்தியாவின் பாரம்பர்யமான அறிவை அடுத்த தலைமுறைகளுக்குச் செல்லாமல் தடுக்க வேண்டும் என்ற நோக்கம் அரசியல் காரணங்களுக்காக பிரிட்டிஷ் ஆட்சிக்கு இருந்திருக்கிறது. அதை பல பிரிட்டிஷ் ஆவணங்கள் எடுத்துரைக்கின்றன. அவர்கள் உருவாக்கிய பாடத்திட்டம் பல வகைகளிலும் நமது தேசம் குறித்து எதிர்மறையான சித்திரத்தை உருவாக்கியவாறே இருந்தது. ஐரோப்பாவைப் போல சொந்த மக்களையும் உலகையும் சுரண்டிய இன்னொரு கண்டம் இல்லை. ஐரோப்பிய அரசுகள் தங்கள் சொந்த பிரஜைகளின் உழைப்பை ஈவிரக்கமில்லாமல் சுரண்டினார்கள். அதற்கு மதத்தையும் மதத் தலைமையையும் பயன்படுத்தினார்கள். அவர்களுடைய வரலாற்றின் முக்கியமான பகுதியே அந்த சுரண்டலுக்கு எதிராக நிகழ்ந்த மக்கள் எழுச்சிகளே.

ஐரோப்பாவால் ஆசிய நாடுகள் மிக மோசமான சுரண்டலுக்கும் பொருளாதார ஒடுக்குமுறைக்கும் ஆளாயின. இருபதாம் நூற்றாண்டில் அவை அரசியல் விடுதலை பெற்ற பின்னரும் ஐரோப்பியர்கள் விட்டுச் சென்ற அரசமைப்பு முறைகளே இருந்தன. முற்றிலும் மாற்றியமைக்க முடியாத அவை நிர்வாகத்தை அந்த நாடுகளில் இன்று வரை மேலும் சிக்கலாக்குகின்றன.

மானுட வரலாறு என்பது மிக நீண்டது. நாம் முற்றும் அறிய முடியாத ஒரு பெரும் பயணம் அது. இந்தியா பல்லாயிரம் ஆண்டுகளாக மானுட ஞானத்துக்கு சாரமான பல பகுதிகளை வழங்கியுள்ளது. இந்திய மண்ணில் வாழ்பவர்கள் உணர வேண்டிய உண்மை அது.