Saturday 1 August 2020

தேவையும் திணிப்பும்

இந்திய கிராமங்கள் உருவாக்கப்பட்டவை. இந்த உருவாக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளது. துறவிகளும் அரசர்களும் இந்திய கிராமங்களை உருவாக்கியுள்ளனர். நம் கவனத்தில் அவை இல்லை. சற்று சிந்தித்துப் பார்த்தால் இந்த உண்மையை உணர முடியும். இந்தியாவின் அரசர்கள் தங்கள் குடிமக்களைத் தொகுத்து வேளாண்மை செய்யப்படாத நிலத்தை அளித்து ஒரு கிராமத்தை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பு அளித்துள்ளனர். நிலம் அளித்ததுடன் அவர்களுடைய பணி நிறைவு பெற்று விடவில்லை. விவசாயப் பணிகளுக்கு அடிப்படையான மழை மற்றும் பருவநிலை குறித்த தகவல்களால் ஆன பஞ்சாங்கங்களை நாடு முழுதும் உள்ள கிராமங்களுக்கு அளித்தனர். பஞ்சாங்கம் ஒரு கணித ஆவணம். துறவிகள் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று மக்களை ஒற்றுமைப்படுத்தினர். மக்களை ஒற்றுமைப்படுத்தும் எல்லா சமயங்களையும் அரசர்கள் ஆதரித்தனர். இந்திய விவசாயமும் இந்திய விவசாயிகளின் பிரச்சனைகளும் புரிந்து கொள்ளப்பட இந்த அடிப்படையை உணர்வது அவசியம். மேலைக் கல்வி நம் மண்ணிற்குத் தொடர்பில்லாதது. அதன் எல்லைக்குள் நம் நாட்டின் கல்வியும் விவசாயிகளும் கொண்டு வரப்பட்டது ஒரு கொடுந்துயர்.

நமது நாட்டின் மன்னராட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் பல்வேறு குடிகள் இருந்துள்ளார்கள். வேளாண் குடிகள், ஆயர் குடிகள், வணிகக் குடிகள், தொழிற் குடிகள், தொழில்நுட்பக் குடிகள், தொழிலாளர் குடிகள், கைவினைஞர்கள் என பல்வேறு குடிகள் ஒரே கிராமத்தில் இருந்துள்ளனர். அதன் அர்த்தம் என்னவெனில் அத்தனை குடிகளும் ஒரு கிராமத்தில் குடியேற்றப்பட்டு கிராமத்துக்கான வருவாய் உருவாக்கப்பட்டது என்பதே. 

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உருவாகி நிலைபெற்ற ஒரு மரபை முற்றிலும் புறந்தள்ளுவது என்பதைப் போன்ற அறிவீனம் வேறேதும் இல்லை. 

பாரம்பர்யமான எத்தனையோ முறைகள் இந்தியர்களின் பழக்கத்திலேயே இருந்துள்ளது. இன்றும் அது தொடர்கிறது. அவை நடைமுறை சார்ந்தவை. மேலாண்மை விதிகள் சார்ந்தவை. காலமாற்றம் என்பது உலகின் எல்லா சமூகங்களையும் பாதிக்கும். அவ்வாறான பாதிப்பையே இந்தியாவும் எதிர்கொண்டது. நமது நாட்டின் சிக்கல்களுக்கு ஐரோப்பாவிடம் பதில் எதிர்பார்ப்பது எவ்வளவு உசிதமானது என்பதை நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். 

ஐரோப்பாவின் வரலாறும் வாழ்க்கையும் ஆசியாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. அங்கே மண் வளம் குறைவு. குறைவான பரப்புக்குள் விவசாயம் செய்து கொள்ள வேண்டும். கடல் உணவும் மாமிசமும் அங்கே முக்கிய உணவு. தொழிற்புரட்சிக்குப் பின் அங்கே பெரும் சுரண்டல் நிகழ்ந்தது. மனித உழைப்பு மிக மோசமாகச் சுரண்டப்பட்டது. அக்காலகட்டத்தில் ஐரோப்பா தனது சொந்த மக்களையே சுரண்டிக் கொழுத்தது. பின்னர் தொழிற்புரட்சியின் விளைவாக உருப்பெற்ற ஏகாதிபத்யமும் முதலாளித்துவமும் ஆசிய, ஆஃப்ரிக்க, அமெரிக்க நாடுகளைச் சுரண்டின. 

அவர்கள் சொந்த பழக்கத்தின் காரணமாக உலகின் எல்லா சமூகங்களும் சுரண்டலை அடிப்படையாய்க் கொண்டவை என்றே எண்ணினார்கள். அது உண்மையல்ல. 

நான் பணி புரியும் கிராமத்தில் எதைப் பேசத் துவங்கும் முன்னும் நான் விவசாயி அல்ல என்று அறிவித்து விட்டே எதையும் கூறுவேன். எனது நண்பர் ஒருவர் சொன்னார். விவசாயத்தில் ‘’தோட்டக்கலை’’ என்ற பிரிவு உண்டு. அதன் அடிப்படையான பாடப்புத்தகங்கள் விவசாயம் பயின்றவர்களால் உருவானது அல்ல; பொழுதுபோக்காக புதிதாக சில விஷயங்களை முயன்று பார்த்த விவசாயம் அறியாதவர்களால் எழுதப்பட்டவையே என்று. 

இரண்டு நாட்களாக எனக்கு ஒரு எண்ணம் உருவானது. அங்கே 400 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் பூசணிக்காய், பீர்க்கங்காய், பரங்கிக்காய், வெண்டை ஆகிய நான்கு விதைகளை அவர்கள் தோட்டத்தில் இட கொடுக்க வேண்டும் என நினைத்தேன். ஒரு வீட்டுக்கு ஒரு ரூபாய் கூட செலவாகாது. வீட்டுத் தோட்டத்தில் இடுவதற்கு பெரிய உடல் உழைப்போ பெரிய பராமரிப்போ தேவையில்லை. கிராமம் முழுதும் உற்பத்தியானால் புதிய வழிகள் திறக்கும். 

விவசாயிகள் இந்த விதையை வாங்க பல கிலோமீட்டர் பயணித்து வர வேண்டும். கிராமத்தில் பாக்கெட் பால் கிடைக்கிறது. பாக்கெட்டில் இருக்கும் சன் ஃபிளவர் ஆயில் கிடைக்கிறது. பிரிட்டானியா பிஸ்கட் கிடைக்கிறது. ஆனால் நாட்டுக் காய்கறிகளின் விதை கிடைப்பதில்லை. 

நாம் பல விஷயங்களைக் குறித்து ஆழமாகப் பரிசீலிக்க வேண்டியிருக்கிறது.