Monday 3 August 2020

யதார்த்தமும் பிரமைகளும்

நான்காண்டுகளுக்கு முன்னால் நான் ரிஷிகேஷ் வரை மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொண்ட போது பயணத்தில் பாதுகாப்பு குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு சிலர் கூறினர். நான் ஒரு அபாயமான செயல்பாட்டில் ஈடுபடுவதாக அபிப்ராயப்பட்டனர். என் உள்ளுணர்வு நான் தனித்து இருப்பதாகவோ சிக்கலான ஒன்றைச் செய்வதாகவோ அறிவிக்கவில்லை. உணர்வெழுச்சியும் உவகையும் நம்பிக்கையும் கொண்டதாகவே இருந்தது. அபிப்ராயம் சொன்ன எவரும் பைக்கை எடுத்துக் கொண்டு 100 கி.மீ சென்று ஓர் ஆலயத்தையோ ஓர் கடற்கரையையோ ஒரு வனப்பகுதியையோ பார்த்து அங்கே சில மணி நேரங்கள் இருந்து விட்டு மாலை வீடு திரும்பும் ஒரு நாளின் அனுபவம் கூட இல்லாதவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எப்படி அவர்கள் கற்பனையிலோ அனுபவத்திலோ இல்லாத ஒன்றைப் பற்றி எவ்வித தயக்கமும் இல்லாமல் அபிப்ராயம் சொல்ல முடியும்?

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஓர் ஆங்கில வார இதழ் இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு நிலம் மாவோயிஸ்டுகளின் ஆட்சியில் இருக்கிறது என்று நடுப்பக்க கட்டுரை எழுதினார்கள். உண்மை என்ன? இன்று மாவோயிஸ்டுகள் எங்கே? இந்தியா முழுமைக்கும் வினியோகமாகும் ஒரு வார இதழ் எந்த ஆதாரத்தில் இவ்வாறு செய்திக் கட்டுரை வெளியிடுகிறது? மாவோயிஸ்டுகள் சீனாவால் பராமரிக்கப்படுபவர்கள் என்ற உண்மையை அந்த வார இதழ் அறியாதா? அவர்கள் வெளியிடும் இவ்வாறான கட்டுரை மக்களை தவறாக வழிநடத்தும் என்ற பிரக்ஞை ஏன் அவர்களிடம் இல்லை? 

பொதுப் பிரக்ஞையில் உறைந்து போயிருக்கும் சில விஷயங்களுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையேயான வேறுபாட்டை சுட்டிக் காட்ட முற்படுகிறேன். 

உணவுப் பொருட்களுக்கு ஆதரவு விலை, இலவச மின்சாரம், நேரடி கொள்முதல் ஆகியவையே அரசாங்கம் விவசாயத்துக்கு வழங்கும் சலுகைகளாக இருந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கைகளும் இவற்றை ஒட்டியதாகவே இருக்கிறது.  இவை விவசாயத்துக்கு எவ்விதத்தில் உதவுகின்றன?

இந்திய விவசாயத்தை இன்ன விதமானது என்று பகுத்து விட முடியாது. உலகில் எத்தனை விதமான வேளாண் முறைகள், வேளாண் நிலங்கள் உண்டோ அத்தனையும் இந்தியாவில் உண்டு. எங்களுக்குப் பொறியியல் கல்லூரியில் ‘’நில அளவை’’ வகுப்பு எடுக்கும் போது Survey Chain குறித்து விளக்குவார்கள். அது 66 அடி நீளம் கொண்டது (20.11 மீ). அதனை Gunter என்பவர் உருவாக்கினார். அதனால் அதனை Gunter Chain என்றும் கூறுவார்கள். அது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ரெவின்யூ செயின் எனப்பட்டதாகக் கூறி அன்றைய ஆட்சி வருவாயில் கிட்டத்தட்ட 80 விழுக்காடு நிலவரியாகக் கிடைத்தது; இன்று வருமான வரி முக்கியமான வருவாய் ஆதாரமாக இருப்பதால் நிலவரி 6 விழுக்காட்டுக்கும் கீழே சென்று விட்டது என்று கூறுவார்கள். விவசாயமும் விவசாயிகளும் அரசாங்கத்துக்குப் பெரிய அளவில் உதவ முடியும் என்பதே யதார்த்தம். 

விவசாயம் சார்ந்த கல்வி என்பது இந்தியாவுக்கு மிகவும் அவசியமான ஒன்று. இந்தியாவின் வரலாற்றில் மன்னர்கள் அவர்கள் மேற்கொண்ட நீர்ப்பாசனத் திட்டங்களுக்காகவே நினைவுகூரப்படுகிறார்கள். இந்திய விவசாயம் கடந்து வந்த பாரம்பர்யமான பாதை என ஒன்று இருக்கிறது. அது உலகின் சிறந்த அறிவுக் களஞ்சியம். குறைந்தபட்சம் அவ்வாறேனும் அது தக்க வைக்கப்பட வேண்டும்.

ரசாயன உரங்கள் இன்றி விளைந்த பயிர்களுக்கு உலக அளவில் மிகப் பெரிய சந்தை இருக்கிறது. இந்தியாவால் சகல விதமான பயிர்களையும் உற்பத்தி செய்ய முடியும். நமது நாட்டின் மருத்துவச் சந்தையில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், யுனானி ஆகியவை முக்கியப் பங்காற்ற முடியும். ’’கதர்’’ இயக்கம் தற்பொழுது வேகம் எடுத்தால் கூட லட்சோப லட்சம் எளிய இந்திய விவசாயிகளுக்கு பயன் தரும். இந்திய நதிக்கரைகள், வாய்க்கால் கரைகள், நீர்நிலைகள் ஆகியவை பெரும் பரப்பு கொண்டவை. அவை விவசாயம் சார்ந்த பல்வேறு விஷயங்களுக்கு உதவ முடியும்.

வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன.