Wednesday 19 August 2020

பரிசு

நேற்று ஒரு நண்பரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் ஒரு பார்சல் சர்வீஸ் நடத்தி வந்தார். அப்போது லாரியில் வரும் பார்சல்களைப் பெற்றுக் கொள்வதற்காகச் செல்வேன். எலெக்ட்ரிகல் பொருட்கள், பிளம்பிங் உபகரணங்கள் ஆகியவை வெளியூரிலிருந்து வரும். மாருதி ஆம்னியில் சென்று எடுத்து வருவேன். அப்போது பழக்கமாகி நண்பரானார். பின்னர் பால் டீலராகி பால் விற்பனை செய்து வந்தார். பால் விற்பனைக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு என்று தற்செயலாக ரயில் நிலையத்தில் சந்தித்த போது சொன்னார். நேற்று அவருடைய பார்சல் அலுவலகத்துக்கு பக்கத்தில் இருந்த மரவாடிக்குச் சென்றிருந்தேன். அப்போது பார்சல் அலுவலக வாசலில் ஜெனரேட்டர், இரும்புப் பொருட்கள் ஆகியவை கிடந்தன. என்ன என்று சென்று பார்த்தேன். நண்பர் உள்ளே ஒரு பட்டறையை வைத்திருந்தார். காக்கிச் சட்டை காக்கி பேண்ட் சீருடையில் பணி புரிந்து கொண்டிருந்தார். பால் வியாபாரம் என்ன ஆயிற்று என்று கேட்டேன். பணியாளர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்; காலையும் மாலையும் தான் பால் வினியோகம். இடைப்பட்ட பொழுதில் பட்டறையைப் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அங்கே ஒரு ஃபோட்டா மாட்டியிருந்தது. நெற்றி முழுக்க நீறு அணிந்திருந்த ஒரு பெரியவரின் ஃபோட்டோ. நண்பர் வைணவர். மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் அவர்கள் குடும்பம் பராமரிக்கும் பஜனை மடம் இருக்கிறது. அதற்கு என்னை மார்கழி மாதத்தில் அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் தந்தை ஒவ்வொரு ஆண்டும் திருப்பதிக்கு நடந்து சென்று சுவாமியை சேவித்து விட்டு நடந்தே திரும்பி வருவார். அதனை நான் அறிவேன். பின்னர் இந்த சைவர் யார் என்று எனக்கோர் ஐயம். இவர் உங்கள் உறவினரா என்று கேட்டேன். உறவினர் இல்லை; எனது முதலாளி என்றார். 

இவர் பட்டறைத் தொழிலை கும்பகோணத்தில் கற்றிருக்கிறார். இவர் தொழில் பயின்ற பட்டறையில் எண்பது பேர் வேலை பார்த்திருக்கின்றனர். உரிமையாளர் தொழில் செய்நேர்த்தியிலும் தொழிலாளரின் பண்பு வெளிப்பாடுகளிலும் மிக்க கவனத்துடன் இருப்பார் என்றும் தொழிலாளர் நலனில் மிக்க அக்கறை காட்டுவார் என்றும் கூறினார். பல சம்பவங்களை எடுத்துச் சொன்னார். 

தவிர்க்க இயலாத காரணங்களால் குடந்தைப் பட்டறையை விட்டு மயிலாடுதுறை வர வேண்டிய நிலை. முதலாளி விடை கொடுக்கிறார். அப்போது உனக்கு ஏதாவது தர விரும்புகிறேன்; என்ன வேண்டும் கேள் என்கிறார் முதலாளி. உங்கள் புகைப்படத்தைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி வந்து தன் பட்டறையில் மாட்டி வைத்திருக்கிறார் நண்பர். 

சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்ற ஔவையை நினைத்துக் கொண்டேன்.