Friday 21 August 2020

இருளும் ஒளியும்

 மனிதர்கள் அடிப்படையில் நல்லியல்பு கொண்டவர்கள் என்று நம்புபவன் நான். எல்லையும் தடைகளும் எல்லா உயிர்களுக்கும் உண்டு. அதைப் போலவே மனிதனுக்கும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. எல்லைகளையும் தடைகளையும் புரிந்து கொள்வதற்கு அதைப் பற்றிய கவனம் மிக முக்கியம். என்னால் சில செயல்களை இலகுவாகச் செய்ய முடியும். சில பணிகள் எனக்குக் கடினமானவை. என்னால் எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்பதை நான் தெரிவித்து விடுவேன். நெருங்கியவர்களிடம் மட்டுமல்ல; புதிதாகச் சந்திக்கும் ஒருவரிடமும் தயக்கம் இன்றி கூறி விடுவேன். அமெரிக்காவில் ஒரு அலுவலகத்துக்குச் சென்றால் அதன் வரவேற்புப் பிரிவில் இருப்பவர் முதலில் ‘’நான் உங்களுக்குச் செய்ய வேண்டிய விஷயம் என்ன?’’ என்று கேட்பார்களாம். நீங்கள் விஷயத்தைக் கூறினால் அந்த அலுவலகத்தால் செய்து தரக்கூடிய பணி என்றால் ‘’ஆம்! நீங்கள் எதிர்பார்ப்பதை நாங்கள் செய்து தருகிறோம்’’ என்று கூறுவார்கள். அவர்களால் அதனை செய்ய முடியாது என்றால், ‘’மன்னிக்கவும். எங்களால் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ முடியாது’’ என்று கூறுவார்களாம். லௌகிகத்தைத் திறந்த மனத்துடன் அணுகுவது உதவிகரமானது என்பது என் எண்ணம்.