Wednesday 26 August 2020

தீர்வுகள்

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தொழில் விவசாயம். அவரிடம் சொந்தமாக நிலம் உள்ளது. பல வருட நட்பு. அவரிடம் நான் விவசாயம் குறித்த விபரங்களைக் கேட்டு அறிவதுண்டு. 

நண்பருடனான உரையாடல்கள் சுவாரசியமானவை. 

விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தித் தர வேண்டும்; அதுவே விவசாயிகளின் பொருளியல் சிக்கல் தீர வழி என்று ஒருமுறை சொன்னார். 

நான் சில கேள்விகளை முன்வைத்தேன். 

1. இந்தியாவில் குறைந்தபட்சம் பத்தாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடக்கிறது. பண்டைய அரசுகளில் விவசாயிகள் தானியமாக அரசாங்கத்துக்கான வரிகளைச் செலுத்தியுள்ளனர். அந்த தானியம் அரசால் பெரிய அளவில் பல இடங்களில் சேகரித்து வைக்கப்படிருக்கிறது. ஆனால் பண்டைய அரசுகள் எவையும் விளைபொருட்களை கொள்முதல் செய்ததில்லை. சுதந்திர இந்தியாவில் அரசு தானியக் கொள்முதல் செய்யும் வழக்கம் உருவானது. தாமோதர் தர்மானந்த கோசாம்பி அரசுக்குக் குடிமக்களால் செலுத்தப்படும் வரியினங்கள் தானியமாகவும் செலுத்தப்படலாம் என வகுக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். 

லட்சக்கணக்கான மெட்ரிக் டன் தானியத்தை அரசே வாங்குவதைக் காட்டிலும் குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் வாங்குகிறார்களா என்பதைப் பெரிய அளவில் கண்காணிப்பதே விவசாயிகளுக்கு நெடுங்காலத்துக்கு உதவும் என்றேன். 

நண்பர் மௌனமாக இருந்தார்.

2. காந்திய அறிஞர் தரம்பால், பிரிட்டிஷ் ஆட்சியில், சென்னை மாகாணத்தில், செங்கல்பட்டு மாவட்டத்தில் வருவாய்த்துறை ஆவணங்களை ஆய்வு செய்து அப்போது ஒரு ஏக்கருக்கு 80 மூட்டை நெல் சராசரியாக அறுவடை செய்யப்பட்ட விபரத்தைத் தெரிவிக்கிறார். 

இப்போது ஏக்கருக்கு  சராசரியாக 20 மூட்டை நெல் விளைகிறது. 

பாரம்பர்யமான முறைகள் பின்பற்றப்படாமல் போனது விவசாயிகளுக்கு பெரும் பொருளியல் இழப்பு. 

3. இந்தியா பருப்பு வகைகளை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறது. பருப்பு வகைகள் உற்பத்தியை அதிகப்படுத்துவது விவசாயிகளுக்கு லாபம் தருவது. 

நண்பர் மௌனத்தை கலைக்கவே இல்லை.