Sunday 9 August 2020

எனது நிலம்

 கடந்த ஐந்து மாதங்களாக, பெரிதாக எங்கும் வெளியில் செல்லவில்லை. கிராமம் சார்ந்த பணிகள் இருப்பதால் சராசரியாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது அங்கே சென்று விடுகிறேன். 

ஒரு சில முறை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். மரத்தடிகளை நாடி சில முறை சென்றேன். 

பெரும் இந்திய நிலம் என்னை எப்போதும் அழைப்பதாகவே எப்போதும் எண்ணுவேன். 

தேசிய நெடுஞ்சாலைகள் கல்கத்தாவின் தூரத்தைக் காட்டும் போதோ ஹைதராபாத் அல்லது நாகபுரியின் தொலைவை அறிவிக்கும் போதோ ரயில்வே லெவல் கிராஸிங்கில் வாரணாசி விரைவு ரயில் கடந்து செல்லும் போதோ அந்த ஊர்கள் என்னைக் கூப்பிடுவதாக எண்ணுவேன். 

கடந்த ஐந்து மாதங்களில், சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் நாடு முழுவதும் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டைத் தாண்டி விட்டால் பெரும்பாலான சாலைகளில் சரக்கு வாகனங்களே சாதாரண காலத்திலும் சென்றவாறிருக்கும். புனிதத் தலங்களுக்கு சுமோ போன்ற வாகனங்களில் சிறு சிறு குழுக்களாக மக்கள் பயணிப்பர். மற்றபடி பெரும்பாலானோரின் பயணங்கள் ரயில் பயணங்களே. இந்திய ரயில்கள் ஓயாமல் பயணிகளைச் சுமந்து கொண்டு திரியும். இந்திய மையநிலத்தின் சாலைப் போக்குவரத்தில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. இந்தியா முழுதும் பல்வேறு உணவுப் பொருட்களை பண்டங்களை சரக்குந்துகளே கொண்டு சேர்க்கின்றன. 

கார்வார் இப்போது எப்படி இருக்கிறது? நர்சிங்பூரில் குளிர் ஆரம்பித்திருக்குமா? மீரட்டில் மோட்டார்சைக்கிள் பயணத்தின் மேல் பேரார்வம் காட்டிய இளைஞர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்தூர் எவ்விதம் இயங்குகிறது? ஜெய்ப்பூர் சந்தைகளில் எப்போது மக்கள் கூடுவார்கள்? 

இந்திய நிலமெங்கும் எத்தனையோ கிராமங்களில் அலைந்தவன் என்ற முறையில் இந்தியா என்பது கிராமங்களே என உணர்ந்திருக்கிறேன். 

ஒரு கிராமத்தில் ஆற்றும் பணி என்பது அந்த அளவில் நிறைவைத் தருகிறது.