எனைத்தானும் நல்லவை
கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
(கேள்வி)
ஜனநாயக
யுகம் தனிமனிதனுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகிறது. தனிமனித உரிமைகளுக்கு – தனிமனித
சம வாய்ப்புகளுக்கு தோதான சூழலை உருவாக்க முயல்கிறது. ’’தனிமனிதன்’’ என்ற கருதுகோள்
இந்த அளவு கவனம் பெற்ற சூழல் இதன் முன் இருந்ததில்லை. எனினும் இந்நிலைக்கு சில எல்லைகள்
உள்ளன. கட்டுப்பாடுகள் உள்ளன.
தனிமனிதன்
சமூகம் என்ற அமைப்பில் தவிர்க்கவே முடியாத உறுப்புமாவான். சமூக இயக்கத்துடன் மிகக்
குறைந்த தொடர்பைப் பேணிக் கொள்வதற்கான வாய்ப்பை ஜனநாயக யுகம் வழங்க முற்படும் போதும்
ஒரு தனிமனிதன் ஆற்ற வேண்டிய அடிப்படைக் கடமைகள் தவிர்க்கவே இயலாதவை. தவிர்க்கக் கூடாதவை.
இந்தியாவில்
எங்கும் உரிமைகளைப் பற்றிய குரல் எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. ஆனால் அடிப்படைக்
கடமைகள் குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. மேலைச் சமூகங்களில் குடிமக்களின் அடிப்படைக்
கடமைகள் என்னென்ன என்று தீவிரமாக வலியுறுத்தப்படுகின்றன. பொது இடங்களில் தூய்மையைப்
பேணுதல், அதிகாரிகள் பொது மக்களிடம் கனிவாகப் பேசும் முறைகள், சக மனிதர்களுக்கு அளிக்க
வேண்டிய குறைந்த பட்ச மரியாதை, பொது சொத்துக்களை பராமரித்தல் ஆகியவை அங்கே பள்ளி, கல்லூரிகளிலேயே
போதிக்கப்படுகிறது.
இந்தியாவில்
இந்த விஷயங்கள் குறித்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு பேச வேண்டும். பொது இடங்களில் தூய்மையை
பராமரிப்பது குறித்து எவ்வளவு அதிகம் பேசப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவும் அது நன்மையே.
ஏன் ரயில் நிலையத்தில் குப்பை போடக் கூடாது, ஏன் கியூவில் பலர் நிற்கும் போது முண்டியடித்துக்
கொண்டு முன்னே செல்லக் கூடாது, பொது கழிப்பறைகளை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது
போன்ற விஷயங்களை எவ்வளவு அதிகம் கூற முடியுமோ அவ்வளவு அதிகம் கூறுவது நல்லதே.
நல்லவற்றை
மிகச் சிறிய அளவில் சமூகம் கேட்டு பின்பற்றினால் கூட அது மிக்க பயனுள்ளதே.