எனது
நண்பர் கிர், காங்கரேஜ், காங்கேயம் ஆகிய நாட்டு மாடுகளை வளர்க்கிறார். நாட்டு மாட்டுப்
பாலை காலையிலும் மாலையிலும் என் வீட்டிற்கு வழங்கி விடுவார்.
எனது
வீட்டைச் சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் எத்தனை மாடுகள் இருக்கின்றன எனக் கணக்கிட்டேன்.
பதினைந்து மாடுகள் இருக்கின்றன. எத்தனை வீடுகள் என்று தோராயமாகக் கணக்கிட்டேன். ஆயிரம்
வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டிலும் காலையிலும் மாலையிலும் அரை லிட்டர் பால் வாங்கினால்
கூட தினமும் 1000 லிட்டர் பால் தேவை. ஒரு மாடு அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு பத்து லிட்டர்
கறந்தால் கூட 150 லிட்டர் மட்டுமே கிடைக்கும்.
இந்த
150 லிட்டர் பாலிலும் கணிசமான அளவு பாக்கெட் பால் நிறுவனங்கள் கொள்முதல் செய்து விடுகின்றன.
100 லிட்டர் பால் எப்படி 1000 லிட்டர் பால் தேவையைப் பூர்த்தி செய்கிறது?
இந்த
பாலுக்குப் பின்னால் இருக்கும் சமூக உளவியல் என்ன?
சமீபத்தில்
ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவரது பாட்டனார் எங்கள் ஊரில் பெரிய நிலக்கிழாராக இருந்திருக்கிறார்.
ஐம்பது ஏக்கர் நிலம் அவர்கள் குடும்பத்துக்கு சொந்தமாக இருந்தது. 15 மாடுகள் வளர்த்திருக்கிறார்கள்.
மாடுகள் அனைத்தும் வயலில் தொழு உரத்துக்காகவே
வளர்க்கப்பட்டன என்று கூறினார். 15 மாடுகள் இருந்தும் அவர்கள் வீட்டில் தனது பாட்டனாருக்கோ
பாட்டிக்கோ தந்தைக்கோ பால், தேனீர், காஃபி அருந்தும் பழக்கம் இல்லை என்கிறார். பாலைத் தயிராக்கி அதிலிருந்து
வெண்ணெய் எடுத்து அதனை உருக்கி நெய் தயாரித்திருக்கிறார்கள்.
உணவில் அதிக அளவில் நெய் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பால் அருந்தும் பழக்கமே
இல்லை என்கிறார். வீட்டில் பலரும் வந்து மோர் வாங்கிச் செல்வார்கள் என்று கூறினார்.
ஆயுர்வேதத்தில்
பால் குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு மருந்தாகப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கடந்த
50 ஆண்டுகளில் நுழைந்த உணவுப்பழக்கம் பாலும், காஃபியும் தேனீரும். நாட்டின் ஒரு நாள்
பால் தேவையையும் நாட்டின் மாடுகளின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால் எப்படி குறைவான அளவு
பால் வேதிப் பொருட்களால் மிகையாக்கப்படுகிறது என்பதை அறிய முடியும்.
பால்
தவிர்க்க வேண்டிய ஒரு உணவுப்பொருள். பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம்.