Sunday, 13 September 2020

ஆசான் சொல் - 1

 

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்

உடையான் அரசருள் ஏறு. (இறைமாட்சி)

 

பொருட்பாலில் முதல் குறள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறள். பொருட்பாலில் முதல் அதிகாரமாக ஆட்சி அதிகாரத்தின் முக்கியத்துவத்தைக் கூறும் ‘இறைமாட்சி”யை வைக்கிறார். ஒரு நாட்டின் பொருளியல் வளம் பெற வேண்டும் எனில் அங்கே திறன் மிக்க அரசு செயல்பட வேண்டும். திறன் மிக்க அரசு தம் குடிகளின் வாழ்வை பலவிதத்திலும் மேம்படுத்த முயற்சி செய்யும்.

அரசின் முதல் அங்கமாக திருவள்ளுவர் குறிப்பிடுவது ராணுவத்தை. ராணுவ வீரர்கள் அப்பணிக்கு வரும் போதே உயிரைப் பணயம் வைக்கின்றனர். அவர்களுடைய அர்ப்பணிப்பும் தீரமும் எந்நிலையிலும் போற்றப்பட வேண்டும் என்பதாலேயே திருவள்ளுவர் ஆட்சியின் முக்கிய அங்கமாக படையைக் குறிப்பிடுகிறார்.

அடுத்ததாக அவர் குறிப்பிடுவது பல்வேறு குடிகளை. வேளாண் குடிகள், ஆயர் குடிகள், வணிகக் குடிகள், தொழிலாளர் குடிகள் என ஒரு நாட்டில் வெவ்வேறு தன்மை கொண்ட குடிகள் பொலிவார்கள். சோளம் பயிரிடும் விவசாயி ஒரு விதமானவன். மஞ்சள் பயிரிடுபவன் வேறு விதமானவன். கடலை பயிரிடுபவனின் வாழ்க்கை வித்யாசமானது. வேளாண் குடிகள் வான்மழையைக் கணித்து மண்ணில் தங்கள் உழைப்பை நல்கும் இயல்பு கொண்டவர்கள். அவர்களுடைய தொழில் சிறக்க தேவைப்படும் உதவிகளை ஓர் அரசு அளிக்க வேண்டும். அத்தனை குடிகளும் இணைந்திருக்கும் வெளியை உருவாக்குவதும் அரசின் பணி. அவ்வாறு ஒரு பொது வெளியை உருவாக்கி தம் குடிகளின் பண்பு நலன்களை உயர்த்துவதும் அரசின் பணியே. நெடுநோக்கில் ஓர் அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

மூன்றாவதாக வள்ளுவர் குறிப்பிடுவது கூழ். மக்கள் உண்ணும் உணவை அவர்களுடைய உணவுப் பழக்கத்தைக் குறிப்பிடுகிறார். சோளம், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை போன்று நீர் குறைந்த அளவு தேவைப்படும் பயிர்களும் உண்டு. நெல், கோதுமை போன்று மிக அதிக அளவிலான நீர் தேவைப்படும் பயிர்களும் உண்டு. ஒரு நாட்டில் நீர்வளம் குறைவான பகுதிகளில் விளையும் உணவு தானியம் மக்கள் நுகர்வில் அதிகம் புழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வள்ளுவர் விரும்புகிறார். மகாத்மா ‘கதர்’ துணியை ஆதரித்ததற்கு காரணம் அது லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் என்பதாலேயே.

அமைச்சர்கள் குடிமக்களின் எண்ணம், விருப்பம், செயல் திறன் ஆகியவற்றைக் கணித்து அவர்களுக்கு உதவக் கூடிய விஷயங்கள் குறித்து அரசுக்கு எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும்.

ஓர் அரசு மேற்கொள்ளும் எச்செயலும் குறியீட்டு ரீதியிலானதே. ஒரு நாட்டின் ஒரு ஆட்சியின் இயல்பு எவ்வாறானது என்பது அவர்கள் நட்பு நாடுகளை எப்படி நடத்துகிறார்கள் என்பதிலிருந்தே அறிய முடியும். ‘’பூடான்’’ மிகச் சிறிய நாடு. சொந்தமாக ‘’கரன்சி’’ கூட அந்நாட்டிடம் இல்லை. இந்தியாவின் ‘’கரன்சி’’யைப் பயன்படுத்துகிறது. அந்நாட்டை இந்தியா மிகவும் மரியாதையுடன் மிக்க முக்கியத்துவம் கொடுத்து நடத்துகிறது. ஜி.டி.பி அளவுகோல் படி பூடான் உலக நாடுகளில் மிகவும் பின்னால் இருக்கலாம். ஆனால் ‘’Happiness Index’’ என்ற குறியீடு ஒன்று உள்ளது. ஒரு நாட்டு மக்கள் எத்தனை மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதை அக்குறியீடு குறிக்கும். அதில் முதல் இடத்தில் இருக்கும் நாடு பூடான். பூடானுடன் மிக நல்ல நட்பை இந்தியா 70 ஆண்டுகளுக்கும் மேலாக பேணுகிறது.

Geo-Political நலன்களை ‘அரண்’ என்ற பிரிவில் குறிப்பிடலாம்.

ஓர் அரசாட்சி இந்த ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தினால் வலிமை வாய்ந்த அரசாக இருக்கும் என்று வள்ளுவர் கூறுகிறார்.