Thursday, 17 September 2020

ஆனைக்கனவு

சில நாட்கள் முன்னால்
கனவில்
ஒரு குட்டி யானை வந்தது
சின்ன யானை
அழகான யானை
துறுதுறுப்பான யானை
நானும் அதுவும்
பள்ளிக்கூடம் சென்றோம்
கனவில்
நான் சிறுவனாய் இருந்தேன்
அதனிடமும் ஸ்கூல் பேக்
என்னிடமும் ஸ்கூல் பேக்
நான்
அவ்வப்போது
என்னுடைய பேக்-கை
அதனிடம் தந்து விட்டேன்
உனக்கு சேர்த்து வைத்துக் கொள்ள
கஷ்டமாய் இருக்கிறதா
என்று அடிக்கடி கேட்டேன்
அது
அவசரமாக
இல்லை இல்லை 
என்று
மறுத்தது
வாட்டர் பாட்டிலில்
தண்ணீர் குடிக்கும் போதெல்லாம்
நீயும் குடி
என்று
ஊட்டி விட்டேன்
ஸ்கூல் முடிந்து
வீட்டுக்குப் போகையில்
ஆற்றின் வழியாகப் போவோம்
அங்கே
நிறைய நீர் நீ குடிக்கலாம்
என்றேன்
சரி சரி என்றது
ஸ்கூல் பெல் அடித்ததும்
யானையும் நானும்
சேர்ந்து நடந்தோம்
நான் நடக்கும் வேகத்தில்
என்னுடன் 
நடந்தது 
குட்டி யானை
என் பேக்-கையும் தூக்கிக் கொண்டு
ஒருவர் செருப்பு தைப்பதைப் பார்த்தோம்
ஒருவர் பூட்டு குடை ரிப்பேர் செய்வதைப் பார்த்தோம்
விற்கப்படும் நாவற்பழங்களைப் பார்த்தோம்
நெல்லிக்காய் குவியல்களைக் கண்டோம்
ஒரு பொட்டலத்தில்
நாவற்பழம் வாங்கி
அதற்கொன்று
எனக்கொன்று
என சாப்பிட்டுக் கொண்டே சென்றோம்
கனவில்
அதனிடம்
நீ எப்போவாவது என்னை விட்டுப் போய்டுவியா
என்று கேட்க நினைத்து
நீ எப்போதும் என் கூட இருப்பியா 
என்று கேட்டேன்
இருப்பேன் இருப்பேன்
என்றது
குட்டி யானை