Saturday 24 October 2020

ஆசான் சொல் - 4

வினைவலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)

இது ஒரு சுவாரசியமான திருக்குறள். 

ஓர் எண்ணம் செயலாக்கப்பட உள்ள நிலையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து வள்ளுவர் பேசுகிறார். 

முதல் விஷயம், அந்த செயல் எந்த அளவானது எத்தனை பெரியது என்பது மதிப்பிடப்பட வேண்டும். அந்த செயலை ஆற்ற உள்ளவர் தனது திறன்கள், திறனின்மைகள், எல்லைகள், ஆற்றல் ஆகியவற்றை கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும். 

இரண்டாவதாக, எவ்வகையான செயல் எனினும் அதற்கு எதிர்ப்பு ஏதும் இருக்கக் கூடும் என்ற முன்புரிதல் தேவை. எவ்வகையான எதிர்ப்புகள் வரக் கூடும் என்பதை செயல்புரிபவர் கணிக்க வேண்டும். அவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்தும் அவரிடம் ஒரு திட்டம் இருக்க வேண்டும். அவ்வாறு திட்டமிடாமல் இருந்தால் அச்செயல் நிகழும் போது தற்காலிகத் தடை ஏற்படும். அது நிரந்தரத் தடையாக மாறவும் வாய்ப்பு உண்டு. 

எவ்வாறு எதிர்ப்பு இருக்கிறதோ அவ்வாறே அதனை ஏற்கும் சக்திகள் அச்செயலில் இணைந்து கொள்ளவும் வாய்ப்பு உண்டு. அவர்களை அதில் எவ்வாறு இணைத்துக் கொள்வது என்ற செயல்திட்டமும் தேவை. இல்லையேல் செயலின் விளைவை ஒருங்கிணைக்க இயலாமல் போகும். 

ஓர் எண்ணம் செயலாக்கப்படும் போது,செயலின் தன்மை மற்றும் அளவு,  செயல் புரிபவரின் திறன் மற்றும் வலிமை, செயலுக்கு உருவாகக் கூடிய எதிர்ப்பு மற்றும் ஆதரவு ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.