Friday 30 October 2020

ஆசான் சொல் - 6

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். (485)

உலகியலில் காத்திருப்பது என்பது நெடிய செயல்பாடு. மிக உயர்ந்த ஒன்றை இலக்காகக் கொண்டவர்கள் சாமானிய மனநிலையை விட மேம்பட்ட மனநிலை கொண்டவர்களாக இருப்பார்கள். அவ்வாறு மேம்பட்ட மனநிலையைக் கொண்டிருப்பதாலேயே சுற்றி இருப்பவர்களால் ஆர்வத்துடன் கவனிக்கப்படுவார்கள் ; அவர்களால் சற்று விலக்கத்துடனும் வைக்கப்படுவார்கள். 

எந்த பெரிய செயலும் பெரிய விளைவை உருவாக்கும் என்பதால் அதற்குரிய அடர்த்தி அச்செயலின் எல்லா அம்சத்திலும் இருக்கும். அது வெளிப்படுவதற்கு ஏதுவான காலம் என்பது இன்றியமையாத ஒன்று. 

ஒரு பெரிய செயலை - ஒரு பெரிய புதிய செயலை - நிகழ்த்த திட்டமிட்டிருப்பவர்கள் உரிய காலம் வரும் வரை காத்திருக்க வேண்டும். அவ்வாறு காத்திருக்கும் காலத்தில் அவர்கள் மனம் முழுக்க அச்செயலே நிறைந்திருக்கும் எனினும் அதனை மேலும் மேலும் கூர்மையாக புறவயமாக நோக்கியவாறும் அளவிட்டவாறும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்ய செய்ய அச்செயல் மேலும் துலக்கம் பெறும்; துல்லியமடையும். 

அவ்வாறு காத்திருக்கும் காலகட்டத்தில், தம்மை உடலளவில் மனத்தளவில் வலிமைப்படுத்திக் கொள்ளும் செயல்பாடுகளில்  ஈடுபட வேண்டும். ஒரு புதிய செயலை நிகழ்த்த வேண்டும் என்னும் ஆர்வமும் துடிதுடிப்பும் பரவசமும் அலையென எழும் எனினும் தம்மை வலிமைப்படுத்தியவாறு தக்க காலத்துக்கு காத்திருக்க வேண்டும்.

பொதுவாக ராஜதந்திரிகள் அவ்வாறு காத்திருப்பார்கள். இன்னொரு கோணத்தில் ராஜதந்திரம் என்பதே அவ்வாறு காத்திருத்தலே. 

சாமானியர்களுக்கும் இந்த தன்மை முக்கியமான தேவையே. 

காத்திருக்கும் காலத்தில் செயலற்று இருப்பதாய் விமர்சனங்கள் வைக்கப்படலாம். காத்திருப்பவரின் செயல்திறன் ஐயத்துக்குள்ளாக்கப்படலாம். வசை பாடப்படலாம். எனினும் பெரும் செயல் ஆற்ற விரும்புபவர்கள் கலங்காமல் அமைதி காப்பார்கள்.