Monday 19 October 2020

வான் ஒலி

ஊரை ஒட்டிய ஒரு சிறு கிராமம். 

அதில் ஒரு சின்னஞ்சிறு மைதானம். சிறுவர்கள் சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர். மைதானத்தின் நடுவில் ஓர் அரசமரம். அடியில் வினாயகர். ஒரு பெண் விளக்கேற்றி விட்டு சென்றார். 

தற்செயலாக அந்த பக்கம் சென்றவன், மைதானத்தில் நின்று சிறுவர்கள் ஆட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். கதிர் ஒளி ஓய்ந்து தீபத்தின் சுடர் ஒளி நிரம்பிக் கொண்டிருந்தது. 

அப்போது அந்த ஊரைச் சேர்ந்த எனது நண்பரும் மைதானத்துக்கு வந்து சேர்ந்தார். நீண்ட நாட்கள் கழித்து சந்திக்கிறோம். அவர் வெளிநாடு வாழ் இந்தியர்.இரண்டு மூன்று ஆண்டுகள் அங்கே இருப்பார். இங்கே வந்து ஓரிரு மாதங்கள் இருந்து விட்டு மீண்டும் அங்கு சென்று விடுவார். இன்னும் இரண்டு ஆண்டில் ஊரோடு வந்து சேர்ந்து விடலாம் எனத் திட்டமிட்டுள்ளார்.  பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். 

பேச்சு கம்பராமாயணம் நோக்கி திரும்பியது. 

நான் என் நினைவிலிருந்து சில கம்பராமாயணப் பாடல்களை சொல்லி அத்தருணங்களை கம்பன் அழகியலை நண்பரிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். 

நன்றாக இருட்டி விட்டது. ஒற்றை தீபம் மட்டும் மிக மெல்லிதாக சுடர்ந்து கொண்டிருந்தது. 

கம்பனில்  ஆழ்ந்ததும் நேரம் போனதே தெரியவில்லை. ஒன்றிலிருந்து ஒன்றாக சொல்லிக் கொண்டே சென்றேன். 

குகன் ராமனைச் சந்திக்கும் இடம், அனுமனுக்கும் ராமனுக்குமான உரையாடல், 
வீடணன் அடைக்கலம்,  என பேச்சு விரிவாகப் போய்க் கொண்டே இருந்தது. ஒரு இடத்தில் நிறுத்தினேன். 

அப்போது மரத்திற்கு அந்த பக்கம் இருந்து ஒரு குரல் கேட்டது. 

‘’சார்! நீங்க ரெண்டு பேரும் பேச ஆரம்பிச்சப்ப நான் வந்துட்டேன். ராமாயணத்தைப் பத்தி பேசுறீங்கலேன்னு நானும் நீங்க பேசுனது கேட்டன். ரொம்ப நல்லா அழகா சொன்னீங்க சார். மனசுக்கு ரொம்ப திருப்தியா இருந்துச்சு. சந்தோஷம் சார். ’’ 

அந்தி இருள் நிறைந்திருந்ததால் எனக்கு இப்போதும் அவர் முகம் தெரியாது. குரல் மட்டும் தான் தெரியும். அவருடைய பிரியமான சொற்களுக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டேன்.