Wednesday, 18 November 2020

பூக்களை ஏந்தித் திரிபவன்

தீபாவளிக் கொண்டாட்டம் முடிந்து ஊருக்கு அன்றாடம் திரும்பிக் கொண்டிருக்கிறது. சொந்த ஊருக்கு வந்தவர்கள் பணியிடங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். வெளியூர் சென்றிருந்தவர்கள் ஊருக்கு வருகிறார்கள். 

செயல் புரியும் கிராமத்தில், ஒவ்வொரு வீதியிலும் உள்ள ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஒரு மலர் மரம் ஒன்றை வழங்க வேண்டும் என விரும்பினோம். எந்த மரக்கன்றை வழங்குவது என ஆலோசித்தோம். கிராமங்களில் வீட்டு வாசலில் நட்டால் ஆடு மாடு மேயாத செடியாக இருத்தலே உசிதம் என்பதால் அவ்வாறான செடி எது எனத் தேடினோம். 

’’அலரி’’ அவ்வகையான செடி என்பதால் அதனைத் தேர்ந்தெடுத்தோம். இப்போது எல்லா வீட்டு வாசலின் முன்னும் வைத்து விட்டால் இந்த மழைக்காலத்தில் நல்ல வளர்ச்சி பெறும். வீட்டு வாசலில் இருப்பதால் பெண்கள் வாசல் கூட்டி கோலமிடும் போது தண்ணீர் ஊற்றி விடுவார்கள். சிவன், முருகன், துர்க்கை பூசனைக்கு உகந்த மலர் என்பதால் பெண்கள் மேலும் அக்கறை காட்டுவார்கள். சில மாதங்களில் எல்லா வீட்டின் முன்னும் வைக்கப்பட்ட செடிகள் ஒரே சமயத்தில் பூக்கும் போது ஊரின் வீதிகள் அழகு பெறும் என எண்ணினோம். 

எனது நண்பர் ஒருவர் ஒரு வீதிக்குத் தேவையான மரக்கன்றுகளை வழங்க விரும்பினார். ஊரின் சிறிய வீதி ஒன்றில் 30 வீடுகளும் ஒரு விநாயகர் கோவிலும் இருந்தது. கோவிலுக்கும் சில கன்றுகளை வழங்க விரும்பினார். மொத்தம் 35 செடிகள். 

செடிகள் ஆடுதுறையில் நியாயமான சகாயமான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை ஆடுதுறையிலிருந்து மயிலாடுதுறைக்கு வர வேண்டும். 20 கி.மீ தூரம். பின்னர் இங்கிருந்து கிராமத்துக்குச் செல்ல வேண்டும். எளிய பணி போல் தோன்றும். எனினும் இது அதிக நேரமும் உழைப்பும் எடுக்கும் என எனக்குத் தெரியும். திட்டமிட்டால்  சற்று எளிதாக்கலாம். யோசித்துப் பார்த்தேன். செடிகளை எடுத்து வைக்க பிளாஸ்டிக் டிரே இருந்தால் வசதியாக இருக்கும் என்பதால் பாக்கெட் பால் வினியோகம் செய்யும் என் நண்பர் ஒருவருக்குக் காலையிலேயே ஃபோன் செய்து 2 பால் டிரேக்கள் தேவை என்று சொன்னேன். அவர் கடைக்குச் சென்று எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். என்னுடைய வண்டி டூ-வீலர் பட்டறையில் பழுது நீக்க கொடுத்திருப்பதால் எனது தந்தையின் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றேன். என்னுடைய திட்டம் டிரேக்களை எடுத்துச் சென்று நண்பரின் வீட்டில் வைத்து விட்டு அரை மணி நேரத்தில் வருவதாகச் சொல்லி விட்டு அப்பா வண்டியை வீட்டில் கொண்டு வைத்து விட்டு நண்பர்கள் யாரையாவது பால் டிரேக்கள் உள்ள வீட்டில் ‘’டிராப்’’ செய்ய சொல்லலாம் என்று நினைத்தேன். கிளம்பும் போதே அம்மா ‘’தம்பி! டிஃபன் சாப்பிட வந்துடுவீல்ல’’ என்றார்கள். ‘’வந்துடுவன் மா. அரை மணி நேரத்துல வந்துடுவன்’’ என்றேன். 

நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். காலை 8.30 என நேரம் சொல்லியிருந்தேன். ஐந்து நிமிடம் முன்னதாகவே அவர் வீட்டிற்குச் சென்று விட்டேன். அவர் ஒரு சிறிய வேலை இருக்கிறது; நீங்கள் நியூஸ் பேப்பர் படித்துக் கொண்டிருங்கள்; 15 நிமிடத்தில் வருகிறேன் என்று சொல்லி கிளம்பினார். நான் டிஃபன் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என வீட்டுக்குக் கிளம்பினேன். இதற்காகவா வீட்டுக்குப் போகப் போகிறீர்கள் ; இங்கேயே சாப்பிடுங்கள் என்று சொல்லி விட்டார். நான் வீட்டுக்கு ஃபோன் செய்து அம்மாவிடம் காலை டிஃபனுக்கு வர வாய்ப்பில்லை; 11 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவேன் என்றேன். நண்பர் சிறிது நேரத்தில் வந்து விட்டார். இருவரும் காலை உணவு அருந்தி விட்டு அவருடைய கைனடிக் ஹோண்டாவில் புறப்பட்டோம். அவர் வண்டியில் டிரேக்களை முன்னால் வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால் அதனை எடுத்துக் கொண்டோம். நான் என் வாகனத்தை நண்பரின் வீட்டில் நிறுத்தி பக்கவாட்டுப் பூட்டைப் பூட்டினேன். 

ஆடுதுறையில் அலரிச் செடிகளை வாங்கிக் கொண்டோம். வழக்கமாக சற்று சிறிதாக இருக்கும் செடிகள் இம்முறை உயரமாக வளர்ந்திருந்தன. நண்பரின் வண்டியில் பெரிதாக வளர்ந்திருக்கும் செடிகளை வைக்க இடம் தோதாக இல்லை; சின்னதாக இருந்தால் சற்று அட்ஜெஸ்ட் செய்து வைத்திருக்கலாம்.  விதவிதமாக முயற்சி செய்தோம். முடியவில்லை. 

’’சார்! லாரி, டாடா ஏஸ் ஏதாவது வரும் சார். கேட்டுப் பார்ப்போம்’’

‘’நிறுத்தி ஏத்திப்பாங்களா பிரபு? சந்தேகம் தான்’’

‘’முயற்சி செய்து பார்ப்போம் சார்”

‘’சான்ஸ் ரொம்ப கம்மி பிரபு’’ என்று நண்பர் சொல்லி முடித்தார். அப்போது தூரத்தில் ஒரு லாரி வந்தது. நான் முன்னே சென்று கை காட்டி நிறுத்தினேன். 

டிரைவர் வண்டியை நிறுத்தினார். 

நான் டிரைவரிடம் சென்று, ‘’அண்ணன்! வணக்கம் அண்ணன். ஒரு கிராமத்துக்கு ஃபிரண்ட்ஸ் சேர்ந்து மரக்கன்னு கொடுக்கறோம். ரெண்டு டிரே இருக்கு. டூ-வீலர்ல எடுத்துட்டு போய்டலாம்னு பாத்தோம். கன்னு கொஞ்சம் வளத்தியா இருக்கு அண்ணன். வண்டி மயிலாடுதுறை போகுதான்னண்? வண்டில ஏத்தி விடறோம். ஊர்ல வந்து எடுத்துக்கறோம்’’ என்றேன். அது 3 யூனிட் லாரி. எந்த சரக்கும் ஏற்றப்படாமல் வெற்று இடமாக இருந்தது. 

‘’ஆமாம் மயிலாடுதுறை ரயிலடிக்குப் போகுது’’ என்றவாறு தன் சீட்டில் இருந்து கதவைத் திறந்து லாரி மீது ஏறி பின் பக்கம் வந்து பின்பக்கக் கதவின் சங்கிலிகளைத் தளர்த்தி கதவைத் திறந்து விட்டார். நான் டிரேக்களை ஏற்றி விட்டேன். 

நண்பருக்கு ஒரே ஆச்சர்யம். 

லாரி கிளம்பிச் சென்றது. நாங்கள் டூ-வீலரில் பின் தொடர்ந்தோம். 

‘’பொதுவா லாரி நிறுத்த மாட்டாங்க’’ நண்பர் சொன்னார்.

‘’சார்! நான் இந்தியா முழுக்க டிராவல் செஞ்சவன். நம்ம நாட்ல எல்லாருமே அவங்களால முடிஞ்ச உதவியை எல்லாருக்கும் செய்வாங்க. எல்லாரும் தேவைப்படறவங்களுக்கு உதவி செய்யணும்னு நினைப்பாங்க. இது என்னோட அனுபவம்’’

‘’ஆச்சர்யமா இருக்கு. உங்க காரையோ இல்லன்னா என்னோட காரையோ எடுத்துட்டு வந்திருந்தா ஈஸியா இருந்திருக்கும்’’

’’சார்! சுண்டைக்காய் கால் பணம்; சுமைக்கூலி முக்கால் பணம் னு ஆகிடும்’’

மேம்பாலத்துக்கு அருகில் எங்களுக்குக்காகக் காத்துக் கொண்டிருந்தார் டிரைவர் அண்ணன். அவருக்கு நன்றி சொல்லி விட்டு டிரேக்களை பெற்றுக் கொண்டு நண்பரின் வீட்டுக்குச் சென்றோம். 

அப்படி இப்படி நேரம் 11.30 ஆகி விட்டது. இனி வீட்டுக்குச் சென்று விட்டு மதிய உணவு அருந்தி விட்டு மீண்டும் இங்கு வந்து பின்னர் இங்கிருந்து கிராமத்துக்குச் செல்வது என்பது எங்கோ தொலைதூரத்தில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. நண்பர் வீட்டிலிருந்தே கிராமத்துக்குச் செல்வது என முடிவு செய்தேன். 

எனது வாகனத்தில் சீட்டின் மேல் சில மரப்பட்டைகளை வைத்து அவற்றின் மேல் டிரே அமரும் வகையில் கயிறால் மிகத் திறமையாக நண்பர் கட்டினார். நான் கிட்டத்தட்ட பெட்ரோல் டேங்கின் மீது தான் அமர முடியும் என்ற நிலை. சாதாரணமாக அங்கு செல்ல முக்கால் மணி நேரம் ஆகும்; இப்போது ஒரு மணி நேரம் ஆகலாம் என்று எண்ணினேன். 

‘’சுபஸ்ய ; சீக்ரம்’’ என்ற வாக்கியம் உள்ளது. சுபமான விஷயங்களை உடன் செய்ய வேண்டும். தள்ளி வைக்கக் கூடாது. அதன் படி மக்களுக்குச் சென்று சேர வேண்டியதை எவ்வளவு விரைவாகத் தர முடியுமோ அவ்வளவு விரைவாக தந்து விட வேண்டும் என எண்ணினேன். புறப்பட்டேன். 

வழி நெடுக, சிறுவர்களும் சிறுமிகளும் பூச்செடிக் கன்றுகளைக் கண்டதும் என்னிடம் ஆர்வமாக சந்தோஷமாகக் கையசைத்தார்கள். எத்தனையோ பேர் பூச்செடிகளை டூ-வீலரில் வைத்து விற்கிறார்கள். அவர்களுக்கு எந்த குழந்தையும் சிறுவனும் சிறுமியும் மகிழ்ந்து கையசைப்பதில்லை; ஏன் என்னைப் பார்த்து மகிழ்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. எனக்கும் ஒரே சந்தோஷமாகி விட்டது. எந்த மனித முகமும் மகிழ்ச்சி கொள்ளும் போது மிக அழகாக இருக்கிறது. என் பணியில் நான் மகிழ்ச்சி கொண்ட பல முகங்களைப் பார்க்கிறேன். என் வாழ்வின் பேறு அது. 

என் அருகில் டூ-வீலரில் வந்த ஒருவர் , ‘’சார்! இவ்வளவு கன்னையும் உங்க வீட்டுத் தோட்டத்தில் வைக்கப் போறீங்களா?’’ என்றார். ‘’ஒரு கிராமத்தில் நடப் போறோம்’’ என பதில் சொன்னேன். 

பைய பைய வண்டியை ஓட்டியவாறு கிராமத்துக்குச் சென்று சேர்ந்தேன்.

அங்குள்ள நண்பர் ஒருவரின் உதவியுடன் எல்லா மரக்கன்றுகளையும் நாங்கள் உத்தேசித்திருந்த சிறிய தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் வழங்கினோம். இன்றே வீட்டின் முன்னால் வைத்து விடுமாறு கேட்டுக் கொண்டோம். 

அந்த வீதியில் உள்ள வினாயகர் கோவிலில் சில செடிகளை என்னை நடுமாறு சொன்னார்கள். 

‘’தம்பி! இந்த டிரே ரெண்டையும் ரிமூவ் பண்ணாத்தான் என்னால வண்டியிலயிருந்து கீழ இறங்க முடியும்.’’ 

எம்ப்டி ட்ரேக்கள் கயிறு அறுக்கப்பட்டு வண்டியிலிருந்து எடுக்கப்பட்டன. நண்பர் வீட்டில் புறப்பட்டதிலிருந்து ஒன்றரை மணி நேரமாக வண்டியில் பெட்ரோல் டேங்கில் அமர்ந்திருந்த நான் கீழே இறங்கி ஆசுவாசமானேன். 

மரக்கன்றுகளை ஆலயத்தில் நட்டு பிள்ளையாரை வணங்கினேன். 

வீடு திரும்பிய போது மணி நாலு முப்பது.