Thursday 31 December 2020

நித்ய நூதனம்

சில வாரங்களுக்கு முன் வந்திருந்த உறவுக்காரப் பையன் மீண்டும் ஊருக்கு வந்திருக்கிறான்.

இந்த உலகம் கேள்விகளால் கேட்கப்பட்டு அறியப்படும் ஒன்று என்ற நம்பிக்கையுடன் இருக்கிறான்.

வழக்கம் போல மாலை உலாவச் சென்றோம்.

’’பிரபு அண்ணா! நீங்க ஏதோ ஒரு கிராமத்துல ஏதோ சோஷியல் ஒர்க் பண்றதா அம்மா சொன்னாங்க. என்ன அது?’’

‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் குறித்து அவனிடம் சுருக்கமாகச் சொன்னேன்.

ஒரு ராஜதந்திரியைப் போல ‘’அப்படியா’’ என்று ஒற்றைச் சொல்லில் எதிர்வினையாற்றினான். .

சில நிமிடங்கள் எதுவும் பேசாமல் நடந்தோம். என் சொற்களை அவன் மனத்தில் கற்பனை செய்து பார்க்கிறான் என எண்ணினேன்.

‘’ஒங்க ஒர்க் ஓ.கே தான். ஆனா அது எந்த விதத்துல அவ்வளவு முக்கியம்னு நீங்க நினைக்கறீங்க?’’

‘’நான் ஒர்க்கோட தன்மையைப் பத்தி ஏதாவது சொன்னேனா?’’

‘’நீங்க சொல்லல. ஆனா அம்மா ஒரு கிராமம் முழுசுக்கும் நடந்த வேலைன்னு சொன்னாங்க. கிராமம் சின்னதுதானே. ஒரு கிராமத்துல ஆயிரம் பேர் பாப்புலேஷன் இருப்பாங்களா. நான் சிட்டி-ல இருக்கேன். அங்க ஒரு நகர்ல ஆயிரம் பேர் இருப்பாங்க. அதான் கேட்டேன்.’’

நான் பதில் சொன்னேன்.

’’தம்பி! ஹிஸ்டாரிக் சென்ஸோட இந்த விஷயத்தைப் பாக்கணும். இந்தியாவுல அடிப்படையான ஒரு அலகு கிராமம். ஐயாயிரம் வருஷத்துக்கு மேலே இந்தியாவுல ஒரு கிராமம்ங்றது ஒரு பொருளியல் அலகா ஒரு பண்பாட்டு அலகா இருந்துருக்கு. மகாபாரதத்துல, பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தூது போகும் போது கௌரவர்கள்கிட்ட ஐந்து கிராமங்கள் பாண்டவர்களுக்கு கொடுங்கன்னு ரெக்வஸ்ட் பண்றான். கௌரவர்கள் முடியாதுன்னு சொல்றாங்க. ஒரு கிராமம் மட்டுமாவது கொடுங்கன்னு கேக்கறான். அதையும் மறுக்கறாங்க. பாதி ராஜ்யம் கேட்டு தூது போனவன் ஒரு கிராமத்தை மட்டுமாவது கொடுங்கன்னு கேக்கறான்னா என்ன அர்த்தம்? அந்த ஒரு கிராமமே முழு அரசுக்கும் சமம்னு அர்த்தம் இல்லையா?

‘’ஒரு கிராமம்ங்றது நீங்க சொல்ற அளவுக்கு வேல்யூ உள்ளதா?’’

’’ஒரு கிராமத்துல என்னென்ன இருக்குன்னு நினைச்சுப் பாத்தா ஆச்சர்யம் தம்பி!’’

’’ஒரு சின்ன கிராமத்துல என்னென்ன இருக்கும்?’’

‘’எல்லா கிராமத்துலயும் நாலு பிள்ளையார் கோவிலாவது இருக்கும். ரெண்டு மாரியம்மன் கோவில் இருக்கும். காளியம்மன் கோவில் இருக்கும். மதுரை வீரன், முனியாண்டி, சங்கிலி, வீரன்னு சின்ன சின்ன சன்னிதி இருக்கும். சிவன் கோவில் இல்லன்னா பெருமாள் கோவில். சில ஊர்ல ரெண்டும்’’

‘’கோவில் இருக்கறது பெருசா?’’

‘’கோவில் ரொம்ப பெரிய விஷயம் தம்பி. நம்ம தமிழ்நாடு பல நூறு வருஷமா கோயிலை மையமா வச்சு தான் இயங்கியிருக்கு. ஒரு ஊர்ல இத்தனை கோயில் இருக்குன்னா என்ன அர்த்தம். மக்களுக்கு அவங்க விரும்பற சாமியைக் கும்பிட சுதந்திரம் இருந்ததா தானே அர்த்தம்’’

‘’அதுல என்ன ஸ்பெஷல்?’’

‘’எங்க வளர்ச்சி இருக்கோ அங்க தான் பன்முகத் தன்மை இருக்கும். ஒரு கிராமம் பன் முகமான தன்மை உடையது.’’

‘’ஒரு கிராமத்தை முழுமையாக கவர் செஞ்சது அதனால பெருசுன்னு சொல்ரீங்களா?’’

‘’ஒரு கிராமத்தோட பண்பாட்டு அடிப்படையை உருவாக்க எவ்வள்வு பேர் சிந்திச்சிருக்காங்க. வேதம் ஓதுறவங்க, தேவாரம் பாடறவங்க, பூசாரிகள், உழவர்கள், கொல்லர்கள், தொழிலாளர்கள், நெசவாளிகள் இவங்க அத்தனை பேரையும் ஒருங்கிணைச்ச அரசர்கள்…’’

‘’அண்ணா! நீங்க சொல்றதெல்லாம் ரொம்ப புதுசா இருக்கு’’

‘’எப்பவும் புதுசா இருக்கற விஷயம் நம்ம கல்சரா இருக்கு’’