Friday 19 March 2021

எஸ். ராமகிருஷ்ணன்

இரண்டு நாட்களுக்கு முன்னால், கடலூர் சீனுவிடமிருந்து ஃபோன்கால். 

‘’பிரபு! கொஞ்ச நேரம் முன்னால எஸ். ராமகிருஷ்ணன் ஃபோன் செஞ்சார். உங்க நம்பர் கேட்டார்’’

‘’நான் பேசிடறன் சீனு’’

எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஃபோன் செய்தேன். 

‘’பிரபு! கும்பகோணத்துல ஒரு ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைக்கறேன். ஒரு புத்தக வெளியீடு இருக்கு. ரெண்டு நாள் அங்கதான் இருக்கன். இந்த தடவை திருக்கடவூர் கோயிலுக்கு போகலாம்னு இருக்கன். உங்க ஊர் வழியா தானே போகணும்?’’

‘’ஆமாம் சார்! நீங்க வீட்டுக்கு அவசியம் வரணும்.’’

‘’டைம் இருந்தா நிச்சயம் வரேன் பிரபு”

‘’நீங்க எப்ப கும்பகோணம் வரீங்க? நான் வந்து ஜாயின் பண்ணிக்கறன்’’

‘’நாளைக்கு காலைல தான் சென்னையிலயிருந்து புறப்படறேன். கும்பகோணம் வந்துட்டு ஃபோன் செய்றன்’’

இரண்டு நாட்களாக அவருடைய வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். குறுஞ்செய்திகள் மூலமாகவும் அலைபேசி அழைப்புகள் மூலமாகவும் தகவல் பரிமாறிக் கொண்டோம். இன்று காலை திருக்கடையூரில் சாமி தரிசனம் செய்து விட்டு வீட்டுக்கு வருவதாக முடிவானது.  

அம்மா போனவாரம் எஸ். ராமகிருஷ்ணனின் ‘’கதாவிலாசம்’’ வாசித்துக் கொண்டிருப்பதை கவனித்திருந்தேன். 

அம்மாவிடம் கேட்டேன். 

‘’அம்மா! நீங்க எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்ல ‘’கதா விலாசம்’’ மட்டும் தான் வாசிச்சிருக்கீங்களா?’’

‘’ கதா விலாசம் போன வாரம் வாசிச்சன். அதுக்கு முன்னாடியே சஞ்சாரம், இடக்கை நாவல்கள் படிச்சிருக்கன்’’

அம்மா எஸ். ராமகிருஷ்ணனின் தீவிர வாசகராயிருந்தது மகிழ்ச்சி தந்தது. 

‘’அம்மா! மோர் ரெடி பண்ணி வச்சுக்கங்க. ஜூஸ் தயார் பண்ண பழங்கள் இருக்குல்ல. ஏதும் வேணும்னா சொல்லுங்க. நான் கடைத்தெரு போய் வாங்கிட்டு வர்ரேன்’’

‘’எல்லாம் இங்கயே இருக்கு.’’

திரு. எஸ். ராமகிருஷ்ணன் எழுத்துக்களை இருபது ஆண்டுகளாக வாசித்து வருகிறேன். ‘’அட்சரம்’’ என்ற சிற்றிதழை அவர் நடத்திய போது அதன் முதல் இதழிலிருந்து வாசித்திருக்கிறேன். அதில் ‘’உலகில் காலூன்றாத எனது வீடு’’ என்ற கட்டுரை இன்னும் நினைவில் உள்ளது. ’’ஷீரசாத் கதை சொல்வதை நிறுத்தி விட்டாள்’’ என்று அவர் எழுதிய குறிப்பு மறக்க முடியாதது. அவரது பயண நூல்கள் தமிழ்ச் சூழலில் இந்திய நிலத்தின் முடிவற்ற வண்ணங்களின் சொற்சித்திரத்தைத் தீட்டுபவை. 

நான் அவரை பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் கும்பகோணத்தில் தான் முதல் முறையாக சந்தித்தேன். பின்னர் அவர் இந்த பிராந்தியத்துக்கு வரும் போது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு நிகழ்ச்சி முடிந்ததும் அவர் இரவு ரயிலேறிச் செல்லும் வரை உடனிருந்திருக்கிறேன். 

இன்று வீட்டுக்கு வருவதாகச் சொன்னதும் சற்று படபடப்பாக இருந்தேன். ஆர்வத்தாலும் விருப்பத்தாலும் ஏற்படும் படபடப்பு. 

இன்று காலை 11 மணி அளவில் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி. சந்திரபிரபா அவர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள். 

இலக்கியம், பயணம், ஆலயங்கள், பண்பாடு என பல விஷயங்களைக் குறித்து எஸ். ராமகிருஷ்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தது மகிழ்ச்சி அளித்தது. 

வீட்டுக்கு ஜெயமோகன், யுவன் சந்திரசேகர், அழகிய சிங்கர், ஞானக்கூத்தன், சுநீல் கிருஷ்ணன் ஆகிய எழுத்தாளர்கள் வருகை புரிந்திருக்கிறார்கள். இன்று எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள்.