Thursday 18 March 2021

நூல் அறிமுகம் : ஸ்ரீராமகிருஷ்ண சரிதம்


நூல் : ஸ்ரீராமகிருஷ்ண சரிதம் இயற்றியவர் : சுவாமி சித்பவானந்தர் பக்கம் : 102 விலை : ரூ.22 வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் , அ.கு. எ 639 115

நாம் பிறக்கும் போதே, பால், மொழி, சமூக, பிராந்திய அடையாளங்கள் நம்மை வந்தடைந்து விடுகின்றன. பின்னர் வளரும் தோறும், நாம் இந்த அடையாளங்களுக்கும் வேற்றுமைகளுக்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம் ; பயிற்றுவிக்கப்படுகிறோம். சாமானியம் என்பது இந்த எல்லைகளே. உலகின் கோடானு கோடி மக்களின் அறிவு இந்த எல்லைக்குள் நின்றே வாழ்வை அணுகுகிறது. வாழ்வின் சுக துக்கங்களை உணர்கிறது. கோடி கோடியில் சிலரே இந்த எல்லைகள் அறியாமையிலிருந்து உருவாகுபவை என்ற உண்மையை உணர்கின்றனர். மானுட சமூகத்துக்கு உண்மை எது என்பதை உணர்த்துகின்றனர். அவர்களே ஆச்சார்யர்கள். ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அத்தகையவர். 

நம் இந்திய மண்ணுக்கு சிறப்பு என ஏதும் இருக்குமானால் அது ஸ்ரீகிருஷ்ணரையும் பகவான் புத்தரையும் ஆதி சங்கரரையும் ராமானுஜரையும் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரையும் உலகுக்கு அளித்ததே ஆகும். 

பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் எல்லா ஆன்மீக மார்க்கங்களையும் தன் வாழ்வில் அனுபவரீதியாக சாதனை செய்கிறார். ஆன்மீகத்தின் சாதனையில் வெவ்வேறு படிநிலைகளில் இருக்கும் சாதகர்களுக்கு வழிகாட்டுகிறார். 

அவரது அருள் வெள்ளம் இன்றும் பிரவாகமெடுத்து ஆத்ம தாகம் கொண்ட சாதகர்களின் தாகத்தைப் போக்கி வருகிறது.