Thursday, 19 August 2021

நம் அளவுகோல்கள்

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி பலரைச் சந்திக்கவும் பலருடன் உரையாடவும் வாய்ப்புகள் அமைந்தன. பொதுவாக நான் சந்திக்கும் நபர்களிடம் ஏதேனும் உரையாடுவது உண்டு. லௌகிகமான சிறிய விஷயங்களிலிருந்து லௌகிகமான பெரிய விஷயங்கள் வரை.  எந்த ஒரு விஷயம் குறித்தும் யார் என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள் என அறிந்து கொள்ள விரும்புவேன். அவர்கள் அபிப்ராயம் செல்லும் திசையிலேயே மேலதிக விபரங்களை எத்தனை தூரத்துக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்று பார்ப்பேன். எனினும் தமிழ்நாட்டில் ஒரு விஷயம் குறித்து தரவுகளை அறிந்திருப்பவர்கள் மிகவும் குறைவு. பலருடைய நிலைப்பாட்டை,  அவர்கள் பழக்கத்தின் அடிப்படையிலோ அல்லது தற்செயலாகவோ,  இருக்கும் குழுவின் உரையாடல்களே தீர்மானித்து விடும். 

நம் சமூக அமைப்பைக் குறித்து நாம் நம் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்டே புரிந்து கொள்கிறோம். அது பகுதி புரிதலையே உருவாக்கும். நம் சமூக அமைப்பை முழுமையாகப் புரிந்து கொள்ள நமக்கு கடந்த காலத்தின் நிலை குறித்த கற்பனை அவசியம்.  

1. 20ம் நூற்றாண்டின் முக்கால் பங்கு வரை - அதாவது 1975 வரை - பொதுப் போக்குவரத்து இன்றிருப்பதைப் போல் இருந்தது இல்லை. 

இது ஒரு உண்மை. இதிலிருந்து பொருளியல் சமூகவியல் சார்ந்து பல விஷயங்களை யூகிக்க முடியும். நம் அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ள முடியும். 

1. (அ). தமிழ்நாட்டில் சிறு நகரங்கள் பொருளியல் கேந்திரங்களாக உருவானதற்கு பொதுப் போக்குவரத்து குறைவாக இருந்தது ஒரு காரணம். ஒரு சிறு நகரம் தன்னைச் சுற்றி இருக்கும் 10 கி.மீ சுற்றளவில் உள்ள கிராமங்களின் மையமாக உருவானதை இதனைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும். அன்று சர்வ சாதாரணமாக 6 லிருந்து 10 கி.மீ வரை நடந்து ஒரு நகரத்துக்கு வந்து பொருட்களை வாங்கிக் கொண்டு மக்களால் திரும்பி ஊருக்கு நடந்து செல்ல முடியும். 

1. (ஆ). சைக்கிள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் 10 கி.மீ தூரம் சைக்கிளில் பயணிப்பது மக்களுக்கு நடந்து செல்வதை விட எளிதாக இருந்தது. ஒரு நகரத்துக்கு 2 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமம் பலவிதமான பொருட்களை கொள்முதல் செய்ய அடிக்கடி அருகில் இருக்கும் நகருக்கு வரத் துவங்கும். நகரின் கடைவீதி மெல்ல விரிவாகத் துவங்கும். 

1.(இ). பொதுப் போக்குவரத்து கிராமங்களையும் அருகில் இருக்கும் சிறு நகரங்களையும் இணைத்தது. கிராமத்திலிருந்து சிறு நகரங்களுக்கு நடந்து செல்பவர்கள் எண்ணிக்கை குறையத் துவங்கியது. பேருந்தில் சென்றனர். அல்லது சைக்கிளில் சென்றனர். 

1.(ஈ). இரு சக்கர வாகனங்கள் சந்தைக்கு அதிக அளவில் வந்த போது 10 கிமீ வரை பயணம் செய்ய வசதியான மொபெட்களே சந்தையில் பல்லாண்டுகள் கோலோச்சின. இன்றும் கணிசமான பங்கை வகிக்கின்றன. 

1.(உ). இன்றும் தமிழ்ச் சமூகத்துக்கு 10 கி.மீ தொலைவில் இருக்கும் வணிகச் சந்தைக்குச் சென்று பொருள் வாங்கும் பழக்கமும் ஒரு சிறு நகரை மையப்படுத்திய கிராமங்கள் என்னும் பொருளியல் அமைப்புமே சாத்தியமாகி உள்ளது. 

கொள்ளிடம் - சீர்காழி - வைத்தீஸ்வரன் கோவில் - மயிலாடுதுறை - குத்தாலம் ஆகிய கடைத்தெருக்கள் சராசரியாக 10 கி.மீ தொலைவில் உள்ளவை. 

மயிலாடுதுறை - செம்பனார் கோவில் - திருக்கடவூர் - பொறையார் ஆகிய கடைத்தெருக்களும் சராசரியாக 10 கி.மீ தொலைவில் உள்ளவை. 

பழைய தஞ்சை மாவட்டத்தின் ஒரு  பகுதி என்பதால் இவ்வளவு நெருக்கம். மழைப்பொழிவு குறைவாக உள்ள மாவட்டங்கள் எனில் இந்த சராசரி தூரம் 25லிருந்து 30 கி.மீ வரை இருக்கும்.  

இந்த மானசீகமான எல்லை தமிழகப் பொருளியலை தீர்மானிக்கும் அம்சங்களில் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது ; இருக்கிறது.