புனைவுகள் அளவுக்கு நான் அ-புனைவுகளை விரும்பி வாசிப்பதுண்டு. வாழ்க்கை வரலாறுகள் மீது பேரார்வம் எப்போதும் இருக்கிறது. சாமானியம் உருவாக்கும் மனநிலையின் எல்லையிலிருந்து மீறி எழும் ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளை ஆர்வத்துடன் வாசிப்பேன். அடுத்த கணம் என்ன நிகழப் போகிறது என்ற கேள்வியின் புதிர்த்தன்மை வாழ்க்கை வரலாறுகள் மீது தீரா விருப்பம் கொள்ளச் செய்கிறது.
‘’தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ நாளிதழின் அதிபராயிருந்த திரு. ராம்நாத் கோயாங்கா அவர்களின் கடிதங்கள் திரு. டி.ஜே.எஸ். ஜார்ஜ் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியான ‘’கோயாங்கா கடிதங்கள்’’ என்ற நூலை சமீபத்தில் வாசித்தேன். ஒரு தொழிலதிபராக ஓர் அரசியல் செயல்பாட்டாளராக ஓர் அறக்கொடையாளராக அவர் பலருக்கு எழுதிய கடிதங்களும் பலர் அவருக்கு எழுதிய கடிதங்களும் இந்த தொகுப்பில் உள்ளன. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளின் கடிதப் போக்குவரத்து. ஜவஹர்லால் நேரு, லால்பகதூர் சாஸ்திரி, ஜே.பி, அச்சுத் பட்வர்த்தன் தொடங்கி இந்தியாவின் பல முக்கிய ஆளுமைகள் அவருக்கு எழுதியிருக்கும் கடிதங்களும் விவாதித்திருக்கும் விஷயங்களும் இன்று வாசிக்கையில் வியப்பளிக்கின்றன.
1950 தொடங்கி 1980 வரையான காலகட்டம் என்பது இந்தியா மெல்ல மெல்ல தன்னை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டம். உலகின் பல ஜனநாயக நாடுகளுக்கு சோவியத் யூனியனும் அமெரிக்காவும் அச்சுறுத்தலாயிருந்த அந்த பனிப்போர் காலகட்டத்தை வெற்றிகரமாகக் கடந்து வர பத்திரிக்கைகள் அரசாங்கத்துக்கு உறுதுணையாயிருந்திருக்கின்றன. அவற்றின் பங்களிப்பு எவ்விதமாய் இருந்திருக்கும் என யூகித்துக் கொள்ளும் வாசக இடைவெளியை இந்த கடிதங்கள் கொண்டுள்ளன.
இக்கடிதங்கள் மூலமாக திரு. கோயாங்கா அவர்களின் ஆளுமைச் சித்திரம் ஒரு கோட்டோவியமாக உருவாகி வருகிறது. நாட்டின் உயர் பொறுப்பில் இருக்கும் அனைவரிடமும் அவருக்கு நட்பும் செல்வாக்கும் இருக்கிறது. எனினும் தான் நம்பும் விஷயங்களுக்காக அவர் எவரிடமும் முரண்படத் தயங்குவதே இல்லை. மனதில் பட்டதை நேரடியாகப் பேசுபவர் என்பதால் அவருடைய எதிரிகளும் அவர் மேல் பெரும் மதிப்பு வைத்திருக்கின்றனர்.
மதிப்பீடுகளை நம்பும் - மதிப்பீடுகளை முன்வைக்கும் - மதிப்பீடுகளுக்காக செயலாற்றும் ஒரு முன்னோடியின் வாழ்க்கை என்பது வரலாற்றில் ஒரு பாடமாகவே பதிவாகிறது.