Tuesday 10 August 2021

ஆற்றின் கரையில்


காவிரியின் கிளை ஆறு ஒன்றின் கரையில் மோட்டார்சைக்கிளில் பயணிக்கும் சூழல் வாய்த்தது. ஆற்றின் கரையை ஒட்டியே  கிட்டத்தட்ட நாற்பது கிலோ மீட்டருக்கு மேல் பயணம். சில கிராமங்களில், ஆற்றங்கரையில் நின்றிருக்கும் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான ஆலமரங்களும் அரசமரங்களும் தம் கருணை நிழல் கொற்றத்துடன் வீற்றிருந்தன. இந்த மரங்களை நட்டவர்கள் யார்? அந்த கிராமத்தில் யாரேனும் ஒரு சிலர் அறிந்திருக்கலாம் அல்லது அடுத்தடுத்த தலைமுறைகள் உருவாகி யாருக்கும் நினைவில்லாமல் கூட போயிருக்கக் கூடும். தான் நினைக்கப்பட வேண்டும் என்பதற்காக யாரும் மரம் நட்டிருக்க மாட்டார்கள். மரம் நடுபவனுக்கு அனுபவத்தில் ஒரு விஷயம் தெரிந்திருக்கும். நடுபவனை ஒரு நிமித்தமாகக் கொண்டு மரம் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறது. பறவைகளின் பிராணிகளின் வழியாகவும் பெருவிருட்சங்கள் மண்ணைத் தொட்டு வேர்பிடித்து வளர்கின்றன. கல்லினுள் தேரைக்கும் தர்மம் உணவூட்டும் என்பார்கள். 

ஒரு மரம் எத்தனையோ உயிர்களுக்கு காப்பாக இருக்கிறது. எறும்புகள், பூச்சிகள், பறவைகள், பிராணிகள் என பல ஜீவன்கள் ஒரு பெருமரத்தின் நிழலைச் சூழ்ந்து வாழ்கின்றன. மரம் நடுதல் ஒரு நற்செயல். உயிர்க்கோளத்தில் மனித இனம் சின்னஞ்சிறியது. மரங்களை நடுபவர்கள் மனிதப் பிரக்ஞைக்கும் அப்பால் இருக்கும் உயிர்ப்பிரக்ஞையின் நினைவின் அடுக்குகளில் சஞ்சரிக்கிறார்கள். 

ஒரு மரத்தை ஒரு தாவரத்தை ஒரு விலங்கை ஒரு பறவையை தெய்வரூபமாகக் காண்பது என்பது மானுடன் கொள்ளும் மகத்தான உணர்வு. அந்த உணர்வை உலகப் பண்பாட்டுக்கு அளித்தது நம் நாடு. 

‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர்பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்றான் பாரதி. பிறப்பிலிருந்து இறப்பு வரை உடலின் உள்ளத்தின் வலியால் துயருரும் மானுடர்க்கு துயரம் நீங்கிய விடுதலையின் மார்க்கத்தைக் காட்டினார் பகவான் புத்தர். அவர் ஞானம் பெற்றது அரசமரத்தின் அடியில். 


நம் மரபு தென் திசை முதல்வன் சனகாதி முனிவர்களுக்கு பிரணவப் பொருள் உரைத்தது ஆலமரத்தின் அடியில் என்கிறது.


ஆலும் அரசும் நிறைந்திருப்பது கிராமத்துக்கு பெரும் நன்மைகளைக் கொண்டு வரும் என்ற நினைவு மனதில் எழுந்தபடியே இருந்தது. 

அந்த கிளை ஆறு பயணிக்கும் ஒவ்வொரு கிராமத்திலும் ஆற்றின் கரையில் 108 ஆல்- அரசு கன்றுகளை நட வேண்டும் என்ற விருப்பம் உண்டானது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நாம் அறியாத பெயர் கூட தெரியாத யாரோ ஒருவர் நட்டு பராமரித்த விருட்சத்தின் நிழலில் நாம் இளைப்பாறும் போது இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் இளைப்பாறப் போகும் ஒருவருக்கான பொறுப்பு நமக்கு இருக்கிறது. 

இது மழைக்காலத்தின் துவக்கம். வட கிழக்குப் பருவமழை அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கும். அந்த காலத்தை ஒட்டி மரங்கள் நடப்படுமாயின் அவை வேர் பிடித்து விடும். அக்டோபரிலிருந்து டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் நல்ல வளர்ச்சி பெறும். 

நண்பர்களிடம் பேச வேண்டும்.