Wednesday 11 August 2021

பிரபு நண்பர்களின் 12 பிரச்சனைகள் (நகைச்சுவைக் கட்டுரை)

நகைச்சுவைக் கட்டுரை:

1. பிரபு நண்பர்கள் என்பது பொதுவான வார்த்தை. பிரபு நண்பர்களுக்குள் ஒரு பொதுத்தன்மையை அவ்வளவு எளிதில் கண்டடைந்து விட முடியாது.  கல்லூரியில் சேர இருப்பவரும் பிரபுவின் நண்பர். ரிடையர் ஆகி 25 ஆண்டுகளாக பென்ஷன் வாங்கிக் கொண்டிருப்பவரும் பிரபுவின் நண்பர். இன்னும் சொல் படியாத மழலைகள் கூட பிரபுவுக்கு நண்பர்கள். 

1 (அ) இவ்வாறு பல வகைப்பாடுகளுக்குள் பிரபுவின் நண்பர்கள் இருந்தாலும் நண்பர்களின் எண்ணிக்கை கணிசமானதாக இல்லை. அதற்கான காரணத்தை பிரபுவும் அவரது நண்பர்களும் பல ஆண்டுகளாக ஆராய்கிறார்கள். இன்னின்ன காரணம் என்பது நண்பர்களுக்குத் தெரிகிறது. ஆனால் பிரபுவுக்கு இன்னும் பிடிபடவில்லை என்பதால் நண்பர்கள் அமைதி காக்கின்றனர். 

2. பிரபுவின் நண்பர்களாயிருப்பவர்கள் காலையில் நெடுநேரம் தூங்குபவர்களாக இருக்கக் கூடாது. ‘’ என்னப்பா இது, காலைல 8 மணி வரைக்கும் தூங்கிக் கிட்டு இருக்க. உனக்கு டிஃபன் செஞ்சு கொடுத்தப்பறம் வீட்டுல லேடிஸ்க்கு எவ்வளவு வேலை இருக்கும் தெரியுமா? பாத்திரம் தேய்க்கணும், துணி துவைக்கணும், வீடு துடைக்கணும். அடுத்த வேலை சாப்பாடு தயார் செய்யணும். கொஞ்சம் விஷயம் புரிஞ்சு நடந்துக்கப்பா. இந்த பழக்கத்தால எவ்வளவு கஷ்டம் பாரு.’’ பிரபுவின் கரிசனம் நியாயமானது என்பதை நண்பர்களும் புரிந்து கொள்கிறார்கள். இருப்பினும் அதனைத் தனிமையில் சொல்லாமல் சம்பந்தப்பட்ட  (அதாவது பாதிக்கப்பட்ட)  நபர்களின் முன்னிலையிலேயே ஏன் பிரபு சொல்லி விடுகிறார் என அவர்களுக்குப் புரிவதில்லை. 

3. பிரபுவுடைய ஃபோன் பெரும்பாலும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருக்கும். சமீபத்தில் பிரபு தன் நண்பர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினார். அதாவது, ‘’நீங்கள் அழைக்கும் போது என் அலைபேசி சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தால் எனக்கு ஒரு எஸ். எம். எஸ் அனுப்புங்கள். நான் ஆன் செய்யும் போது பார்த்து விட்டு அழைக்கிறேன்’’ என. அதன் பின், எப்போதாவது வரும் ஓரிரு அழைப்புகளும் நின்று விட்டன. 

இருந்தாலும் நண்பர்கள் அனைவரும் பிரபு அழைக்கும் போது ஃபோனை எடுக்க வேண்டும். அலைபேசியில் அவரே அழைத்தாலும் ‘’பிரபு பேசறன்’’ என ஆரம்பிப்பார். பிரபு இன்னும் டெலிஃபோன் மனநிலையிலிருந்து வெளிவரவில்லை என்பது அந்த துவக்கத்துக்கான காரணம். ஒரு நண்பன் கேட்டான் : ‘’அண்ணன்! உங்க ஃபோன்ல இருந்து நீங்க தான் அண்ணன் பேசுவீங்க. அப்புறம் ஏன் ஒவ்வொரு தடவையும் இந்த ‘பிரபு பேசறன்’’?’’ . பிரபு சில கணங்கள் அமைதிக்குப் பின் ‘’ என் ஃபோன்ல இருந்து இன்னொருத்தர் பேசவும் சாத்தியக்கூறு இருக்குல்ல’’ ‘’இருக்கு ஆனா அதுக்கான நிகழ்தகவு ரொம்ப குறைவு’’ இந்த உரையாடலைக் கேட்டவர்கள் இது கணிதம் தொடர்பானது என்றே எண்ணினார்கள். 

4. ஒரு நண்பன் போட்டித் தேர்வுக்கு தயார் செய்ய பிரபுவின் வீட்டுக்கு வந்தார். அவரது தயாரிப்பில் ஒருநாள் தலையிடாமல் இருந்தார் பிரபு. இரண்டாம் நாள் காலையில் ‘’உன் கொஸ்டின் பேங்க்கையும் ஒர்க்கிங் ஷீட்டையும் கொண்டு வா’’ என ஆணையிட்டார். இருபத்து நாலே கால் பெருக்கல் 19 என கேள்வி. நண்பர் அவரறிந்த முறைப்படி 24ஐயும் 19ஐயும் பெருக்கி பின்னர் கால் பாகத்தையும் 19ஐயும் பெருக்கிக் கூட்டிக் கொண்டிருந்தார். ‘’என்னப்பா பண்ற. இப்படி கணக்கு போட்டா எப்படி பாஸ் ஆகிறது?  இருபத்து நாலே காலோட இருபதைப் பெருக்கு. 485. அதுல இருந்து 24 1/4 கழி. 460.75ன்னு ஆன்ஸர் ஆப்ஷன் சி யா இருக்கு பாரு. அத டிக் பண்ணு.’’ அன்று மதியமே நான்கு நாட்கள் தங்கி பரீட்சைக்கு தயார் செய்யலாம் என எண்ணிய நண்பர் பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் பிடித்தார். 

5. பிரபுவுக்கு கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் பழக்கம் கிடையாது. கடைகள் என்பவை பொருட்கள் இருக்கும் இடம் என்றே புரிந்து கொண்டிருக்கிறார் ; அங்கே விற்பனையும் நடக்கும் என்ற புரிதல் அவருக்கு இன்னும் ஏற்படவில்லை. கடைகளுக்கோ வணிக அங்காடிகளுக்கோ பிரபுவை உடன் அழைத்துச் சென்றால் சேமியா பாக்கெட், ஷேவிங் லோஷன், சொட்டு நீலம் ஆகியவற்றைக் கூட பெருவியப்பாக நோக்குவார். ஒவ்வொரு முறை அழைத்துச் செல்லும் போதும் ஒரே கதையைச் சொல்வார். சாக்ரடீஸ் கதை. சாக்ரடீஸ் தினமும் வணிக அங்காடிக்கு செல்வாராம். ஆனால் எதுவும் வாங்க மாட்டார். அங்காடிக்காரர் எதுவும் வாங்காமல் தினமும் என்ன பார்க்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார். எத்தனை பொருட்கள் இல்லாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடிகிறது  என்பதை இங்கே வரும் போது உணர்கிறேன் என்பாராம். 

5 (அ). அங்காடிகளில் ஆர்வம் இல்லாத பிரபுவுக்கு கட்டுமானம் அவரது தொழில் என்பதால் ஹார்டுவேர் கடைகளில் பேரார்வம் உண்டு. நண்பர்களை வெளியூருக்கு ஆர்வத்துடன் அழைத்துச் செல்வார். டி. எம். டி கம்பி லோடு செய்ய, டைல்ஸ் பெட்டிகளை வாங்க, பிளம்பிங் சாமான் வாங்க, எலெக்ட்ரிக் வயர் வாங்க, பெயிண்ட் வாங்க என அங்கே கூட்டிச் சென்று விடுவார். அவர்களை அங்கே உட்கார வைத்து விட்டு பிரபு டாடா ஏஸோ மினி லாரியோ பிடிக்கச் சென்று விடுவார். வண்டி வந்ததும் அவை லோடு ஆகும். லோடு ஆன வண்டியிலேயே நண்பர்களை டிரைவருக்குப் பக்கத்தில் அமர வைத்து சைட்டில் சென்று காத்திருங்கள்; நான் வந்ததும் அன்லோடு செய்து விடலாம் என்பார். 

நண்பர்கள் அசௌகர்யமாக உணர்ந்தாலோ அதை வெளிப்படுத்தினாலோ ‘’ இந்த மெட்டீரியல் போய் சேந்தா தான் இன்னும் ஒரு மாசத்துக்கு தினசரி 15 லேபருக்கு வேலை இருக்கும். அவங்க ஒவ்வொருத்தருக்கும் எத்தனை விதமான செலவு இருக்கும் என யோசிச்சுப் பாருங்க. அத்தனை பொறுப்பான வேலையை உங்களுக்கு கொடுத்திருக்கன்’’ என்பார். பல தொழிலாளர்களின் வாழ்க்கை தங்கள் கையில் இருப்பதாய்  ந்ண்பர்களுக்குத் தோன்றும். பிறகு அவர்கள் யோசிப்பார்கள். ‘’சூப்பர் மார்க்கெட்டில் கடையில் பொருள் வாங்கினாலும் பல தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன் அடைவார்கள். ஏன் பிரபுக்கு அது தெரியவில்லை?’’ யோசிக்கத்தான் முடியும். பிரபுவிடம் கேட்க முடியாது. 

(5) (ஆ) இணைய வர்த்தகம் குறித்து பிரபுவுக்கு சமீபத்தில் தெரிய வந்திருக்கிறது. நண்பர் ஒருவர் வோல்டாஸ் கம்பெனியில் ஒரு குளிர்சாதனப் பெட்டியை வாங்கினார். பிரபு எந்நாளும் இல்லாத திருநாளாக என்ன விலை என்று கேட்டார். நண்பர் விலையைச் சொன்னார். நண்பரிடமிருந்து ஸ்மார்ட் ஃபோனை வாங்கி வோல்டாஸ் இணையதளத்துக்குச் சென்று அந்த மாடலின் விலையைச் சொன்னார். நண்பர் நாலாயிரம் ரூபாய் அதிகம் கொடுத்திருக்கிறார். நண்பருக்கு நாலாயிரம் அதிகம் கொடுத்திருக்கிறோமே என்பதை விட நுகர்வு குறித்து பிரபு சுட்டிக் காட்டி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை வந்து விட்டதே என்பது தான் கூடுதல் வருத்தம். 

(6) கட்டுமானம் பிரபுவுடைய தொழில் என்பதால் அவரால் பகல் முழுதும் எந்த சிரமமும் இல்லாமல் ஒரே இடத்தில் நிற்க முடியும். கட்டுமானம் நடைபெறும் இடத்தில் அவர் அமர மாட்டார். நண்பர்கள் கட்டுமானப் பணி நடக்கும் இடத்துக்கு வந்தால் அவர்களும் நிற்க வேண்டும். ஒருமணி நேரத்தில் அவர்களுக்கு தலை சுற்றி மயக்கம் வரும். ‘’நீங்க உங்க ஸ்டாமினாவை இன்னும் இம்ப்ரூவ் செய்யணும்’’ என்று சொல்லி அதற்கான டிப்ஸ்ஸை சொல்வார். 

பிரபுவுக்கு ஒரு பழக்கம் உண்டு. வீட்டை விட்டு வெளியே சென்று விட்டால் மீண்டும் வீடு திரும்பித்தான் உணவு அருந்துவார்; தேனீர் குடிப்பார். எனவே அவருடன் சென்றால் தேனீர்க்கடைகளில் தேனீரோ காஃபியோ கிடைக்காது. ‘’நம்ம தமிழ் சொஸைட்டிக்கு டீயும் காஃபியும் வந்து அறுபது வருஷம் இருக்குமா. ஊரே டீக்கடையில நிக்குது. எந்த வேலைன்னாலும் ஆரம்பிச்சா கண்டினியுட்டி மிஸ் ஆகாம செய்யணும். நம்ம ஆளுங்க எத்தனை டீ பிரேக் எடுத்துக்கறாங்க.’’ என்று அங்கலாய்ப்பார். உடன் செல்லும் நண்பர் டீ வாங்கிக் கொடுக்காததுடன் இப்படி லக்சர் வேறு அடிக்கிறானே என எண்ணுவார். 

(7) துணிக்கடைக்கு அழைத்துச் சென்றால் பிரபுவுக்கு ஐந்து நிமிடம் தான் கணக்கு. ஒரு நல்ல வசதியான இடத்தில் அமர்ந்து கடையை வேடிக்கை பார்ப்பார். ஏதேனும் தேர்ந்தெடுங்கள் என்று சொன்னால் வெண்ணிறத்தைத் தேர்ந்தெடுப்பார். நண்பர்கள் ’’உங்க கலர் சென்ஸை நீங்க வளத்துக்கணும் பிரபு ‘’ என்பார்கள். ‘’நீங்கள்லாம் அதிகபட்சம் 10 செட் டிரஸ் ஒரே தடவைல எடுத்திருப்பீங்களா. கடலூர் ஃபிளட் அப்ப நான் 1500 செட் டிரஸ் எடுத்தன். ஒரு கிராமத்துல இருந்த 500 குடும்பங்களுக்கு. 500 செட் ஜெண்ட்ஸூக்கு. 500 செட் லேடீஸுக்கு. 500 செட் குழந்தைகளுக்கு. அந்த கிராமமே சந்தோஷமாச்சு. மாவட்டம் முழுக்க இருக்கற ரெவின்யூ பியூபிள் நம்ம ஒர்க் பத்தி தான் பேசினாங்க’’பிரபு இப்படி பதில் சொல்லும் போது நண்பர்கள் என்ன செய்ய முடியும்?

(8) பிரபுவிடம் மூன்று கேட்டகிரி உண்டு. ‘’அறிமுகம் பரிச்சயம் நட்பு’’. நட்பு கேட்டகிரியில் இருப்பவர்கள் நாம் முந்தைய இரண்டில் இருந்தால் இன்னும் கொஞ்சம் லகுவாக இருக்கலாமோ என எண்ணுவார்கள். 

(9) பிரபுவிடம் எப்போதும் ஏதாவது பொது காரியம் குறித்து ஒரு திட்டம் இருக்கும். எவ்வளவு ‘’எகானமியாக’’ வடிவமைக்க முடியுமோ அவ்வளவு எகானமியாக அது இருக்கும். எந்த அளவுக்கு எகானமியாக இருக்கிறதோ அந்த அளவுக்கு கடுமையான உழைப்பைக் கோரும். பிரபு எகானமியாகத் திட்டமிடுகிறார் என சந்தோஷப்படுவதா அல்லது நம்மிடம் கடுமையான உழைப்பைக் கோரப் போகிறார் என வருத்தப்படுவதா என்று நண்பர்களுக்குத் தெரியாது. 

(10) பிரபுவுக்கு சில விஷயங்கள் சொன்னால்தான் புரியும். சொல்லாமலும் சில விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று சொன்னால் ஏன் அதை முதலிலேயே சொல்லவில்லை என்று கேட்பார். 

(11) சமீபத்தில் வெளியான ‘’இசை மொழி’’ கட்டுரையை வாசித்த நண்பர்கள் நம்மைப் பற்றியும் ஏதாவது எழுதி விடுவாரோ என கலக்கமுற்றனர். என்னுடைய எந்த கட்டுரையிலும் நண்பர்களின் பெயரை வெளியிட்டதில்லை அல்லவா என பிரபு அவர்களை சமாதானப்படுத்தினார். 

(12) பிரபு தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று சொல்கிறார். நண்பர்கள் அனைவரிடமும் பல விஷயங்களை கவனத்துக்குக் கொண்டு வருவார். விவாதிப்பார். அவர்கள் கருத்துக்களைக் குறித்துக் கொள்வார். இருப்பினும் நண்பர்களுக்கு ஜனநாயகவாதி என சொல்லிக் கொள்ளும் எல்லாரையும் போல பிரபு தான் நினைப்பதையும் விரும்புவதையும் மட்டும் செய்கிறாரோ என்ற ஐயம் உண்டு.