திங்களன்று ஆதித்யா ஃபோன் செய்தான்.
‘’அண்ணன் ! நான் வியாழக்கிழமை காலைல மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்-ல டிக்கெட் புக் பண்ணியிருக்கன். காலைல 6.45க்கு மயிலாடுதுறை ஜங்ஷன் - ல இருப்பன்’’
‘’ஓ ! அப்படியா! காலைல நான் ஆம்னியை எடுத்துட்டு வந்துடறன். கார்ல உன்னை திருவாரூர் டிராப் செய்றன்’’
‘’திங்கள்கிழமை மயிலாடுதுறை - மைசூர் ஈவ்னிங் வண்டில ரிட்டர்ன் அண்ணா!’’
‘’ஓ.கே ‘’
கடந்த சில முறையாக மைசூரிலிருந்து நேராக இங்கு வந்து விடுகிறான். நான் தான் பிக் - அப் பும் டிராப் பும்.
என்னுடைய மோட்டார்சைக்கிளுடன் என் மனம் அதிக நெருக்கம் கொண்டு விட்டது. அந்த அளவுக்கு எனக்கு என் காருடன் நெருக்கம் கிடையாது. 250 - 300 மரக்கன்றுகள் எடுத்துச் செல்ல வேண்டும் என்றால் மட்டுமே ஆம்னியை எடுக்கிறேன்.
என்னுடைய ஹீரோ ஹோண்டா இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வாங்கியது. சரியாகச் சொன்னால் 21 ஆண்டுகள். உற்ற தோழனைப் போல உறுதுணையாய் இருந்திருக்கிறது. என் எல்லா மகிழ்ச்சிகளிலும். என் எல்லா துயரங்களிலும். நான் பொதுவாகவே சீரான வேகத்தில் செல்வதையே விரும்புவேன். எனவே எனது வாகனத்தின் என்ஜின் அந்த வேகத்துக்கே பழகி விட்டது. என் வண்டியை விரட்டி ஓட்ட முடியாது.
நேற்று ஒரு ‘’ஆக்டிங் டிரைவர்’’ ருக்கு ஃபோன் செய்தேன்.
‘’அண்ணன் ! வணக்கம் அண்ணன். பிரபு பேசறன். நாளைக்கு காலைல மைசூர் வண்டில என் ஃபிரண்டு ஒருத்தர் வர்ரார். அவரை நம்ம ஆம்னில பிக் - அப் பண்ணனும். நீங்க வரலாமா?’’
‘’நாளைக்கு ஒரு முகூர்த்தம் இருக்கு சார்’’
‘’அப்படியா! சரி நான் மேனேஜ் செஞ்சுக்கிறன்’’
அப்போதே எனக்குத் தெரிந்து விட்டது. பிக் - அப் டூ-வீலரில் தான் என்று.
இன்று காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு முன் கண் விழித்தேன். கண் விழித்து ஐந்து நிமிடத்தில் அலாரம் அடித்தது. குளித்துத் தயாராக முற்பட்டேன். தயாராகிக் கொண்டிருக்கிறேன் என ஒரு குறுஞ்செய்தியை அனுப்பினேன். ஜங்ஷனுக்குக் கிளம்பிய போது ஆதித்யாவிடமிருந்து ஃபோன்.
‘’அண்ணன்! குத்தாலம் தாண்டிட்டன்’’
வழக்கமாக வண்டி வர ஆறே முக்கால் ஏழு ஆகும். இன்று 6.20க்கே வந்து விடும் போல. மாமூல் வேகத்தை சற்று கூட்டி வாகனத்தை இயக்கினேன். மெயின் ரோட்டிலிருந்து ஜங்ஷன் செல்லும் சாலைக்கு வலது பக்கம் திரும்ப வேண்டும். அந்த சாலை 1 கி.மீ நீளம் உடையது. அதில் ஏதேனும் ஆட்டோ எதிர்ப்படுகிறதா என்று கவனித்தேன். எதுவும் இல்லை. எதிர்ப்பட்டால் ரயில் வந்து விட்டது என்று பொருள். ஜங்ஷனை நெருங்க 100 மீட்டர் இருந்த போது முதல் ஆட்டோவைக் கண்டேன். வண்டி வந்து இரண்டு நிமிடம் ஆகியிருக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டேன்.
ஜங்ஷன் வாசலிலிருந்து ‘’வாசலில் நிற்கிறேன்’’ என்ற குறுஞ்செய்தியை அனுப்பினேன். சில நிமிடங்களில் அவனது அழைப்பு. தகவலைச் சொன்னேன். இருவரும் பார்த்துக் கொண்டோம்.
என்னைப் பார்த்து புன்னகைத்தான்.
‘’தம்பி ! முன்னாடி உன் பிஹேவியர் ஒரு யங்ஸ்ட்டரைப் போல் இருக்கும். இப்போ உன் பாடி லாங்வேஜ் ஒரு பேங்க் ஆஃபீசரைப் போலவே ஆயிடுச்சு. இன்னும் ஒரு வருஷம் போனா செண்ட் பர்செண்ட் ஆஃபிசராவே ஆயிடுவே.’’
‘’அதெல்லாம் இல்ல அண்ணன். நேத்து சாயந்திரம் பாங்கில இருந்து நேரா மைசூர் ஸ்டேஷன் போய் வண்டி ஏறிட்டன். பேங்க்-ல நேத்து போட்டிருந்த ஃபார்மல் டிரஸ் ஸோட பாக்கறதால உங்களுக்கு அப்படித் தோணுது’’ . என் கூற்றில் உண்மையிருப்பது அவனுக்குத் தெரியும். இருந்தாலும் அந்த நேரத்துக்கு பொருத்தமாகச் சொல்லி சமாளித்தான்.
என் வாகனத்தின் பின்புறம் அமர்ந்து கொண்டான்.
‘’உன்னோட டிராவல் பேக் ஐ என்கிட்ட கொடு. நான் பெட்ரோல் டேங்க் மேல வச்சுக்கறன்’’
‘’இல்லை பரவாயில்லை அண்ணன்! வெயிட் கொறச்சதான். என்கிட்டயே இருக்கட்டும்’’
கொஞ்ச தூரம் போனோம். மீண்டும் கேட்டேன்.
‘’ பேக் பில்லியன் ஹேண்டில்ல சீட் ஆகி யிருக்கு அண்ணன். டோண்ட் ஒர்ரி’’
இன்னும் கொஞ்ச தூரம் போனோம்.
‘’தம்பி! எனக்கு ஒரு டவுட். உன்னோட டிராவல் பேக் ஷோல்டர் டைப். அது எப்படி பில்லியன் ஹேண்டில்ல சீட் ஆகும். உன் முதுகுல இருந்து இன்கன்வீனியண்ட்டா இருக்காதா?’’
‘’அண்ணன் ! பேக் ஐ லூஸ் பண்ண முடியும். பேருக்கு தான் முதுகுல இருக்கு. மத்தபடி வெயிட் வண்டிக்குத்தான்.’’
‘’ஓ ! அப்படியா! இப்ப புரிஞ்சது. ‘’
‘’உங்க மனசு ஃபங்ஷன் ஆகற விதம் ஆச்சர்யமானது அண்ணன்’’
அப்பாவியாக ‘’தெரியாததைக் கேட்டுத்தானே தம்பி தெரிஞ்சுக்கணும் ‘’ என்றேன்.
ஊருக்கு வெளியே வந்து விட்டோம். ஒரு பகுதியைத் தாண்டினோம்.
‘’தம்பி ஒரு கிராமங்கறது மூணு அல்லது நாலு ஹேம்லெட் சேர்ந்தது. ரெவின்யூ கணக்குல குக்கிராமம்னு சொல்வாங்க. இந்த ஹேம்லெட் நாம வேக்சினேஷனுக்காக ஒர்க் பன்ன வில்லேஜ்ஜை சேர்ந்தது. என்ன ஆச்சுன்னா ரயில்வே லைன் மெயின் கிராமத்துக்கும் இந்த ஹேம்லெட்டுக்கும் இடையே இருக்கறதால கார் டூ-வீலர் ஆறு கிலோ மீட்டர் சுத்திகிட்டு தான் வர முடியும். இந்த ஹேம்லட்ல 18+ பாப்புலேஷன் 112 பேர். அந்த 112 பேரும் வாக்சினேட் செஞ்சுகிட்டாங்க. ‘’
ஆதித்யா மனத்தில் கிராமம் குறித்து ஓடிக் கொண்டிருந்தது.
‘’அண்ணன்! மாண்டியாவோட லேண்ட் ஸ்கேப்பும் நம்ம லேண்ட் ஸ்கேப்பும் கிட்டத்தட்ட ஒண்ணு’’
‘’பரவாயில்லை தம்பி. கர்நாடகா போனதுல உன்னோட பார்வை கொஞ்சம் விரிவாகியிருக்கு. உன் மனசுல ரெண்டு விஷயம் ஓடுது. ஒன்னோட இன்னொன்ன ஒப்பிட்டு புரிஞ்சுக்க முயற்சி பண்ற. அது பல விஷயத்துல ஹெல்ப் பண்ணும்’’
‘’உங்களுக்கு கிராமம்ங்கற பேசிக் யூனிட் பிடிபட்டிடுச்சு. என்னால அத இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியல’’
‘’ஞாயித்துக்கிழமை ஒருநாள் உனக்கு வாரம் ஒருநாள் லீவு இருக்குல்ல. அந்த லீவுல உன் பிராஞ்ச்சுக்கு பக்கத்துல இருக்கற கிராமத்துக்குப் போ; அங்க உள்ள மக்கள்ட்ட பேசு. நீ அவங்களுக்கு ஏதும் உதவி செய்யணும்னு கூட அவசியம் இல்லை. வெறுமனே அவங்கல பத்தி கேளு. அவங்க எதை விரும்புறாங்க. எதை முக்கியம்னு நினைக்கறாங்க. எதை முன்னேற்றம்னு எடுத்துக்கறாங்க. அதப் பத்தியெல்லாம் பேசு. ‘’தன்னோட வீடு தேடி வந்த ஒருவனை முக்கியமா நினைக்கற’’ பண்பு இந்திய கிராமங்கள்ல இருக்கு. இன்னைக்கு நேத்து இல்ல 5000 வருஷத்துக்கு மேல இருக்கு. மக்களை மீட் பண்ணு. அது உனக்கு பல விஷயங்களை புரிய வைக்கும். ‘’
அவன் நான் சொன்ன விஷயத்தை மனதுக்குள் பரிசீலித்தான்.
நான் தொடர்ந்து பேசினேன்.
‘’சமீபத்துல திருவாரூர் பக்கத்துல ஒரு கிராமத்துக்குப் போயிருந்தன். மயிலாடுதுறைக்காரர் ஒருத்தர் அங்க வீடு வாங்கிட்டு போய் செட்டில் ஆகியிருக்காரு. அந்த கிராமத்தைப் பத்தி பேசிக்கிட்டு இருந்தோம். காவிரியோட கடைமடை. ஒரு போகம் மட்டும் தான் பயிர் பண்றாங்க. அதுவும் நெல் நடவு கிடையாது. மழைக்காலத்த ஒட்டி விதைச்சு விட்டுடுறாங்க. அப்ப பேயற மழைல நெல் முளைச்சு வருது. வருஷத்துல 30 அல்லது 40 நாள் தான் விவசாய வேலை. மத்த நாள் வேலை இல்லைன்னு சொன்னாரு. எனக்கு ஒரு ஐடியா தோணுச்சு. இந்த பகுதிகள்ல ஏக்கர் கணக்குல வேம்பு நடலாம். மழைக்காலத்தை ஒட்டி நட்டா மழைல வளர்ந்துடும். ஒரு கோடையை தாண்டிடிச்சுன்னா அடுத்த மழைல நல்லா டெவலப் ஆயிடும். நான் இந்த ஊர் விவசாயிகளை சந்திச்சு பேசறன்னு சொன்னேன். என்னோட நண்பர் அந்த டீ-டியெயில்ஸ் கொடுங்க. இந்த கிராமத்துல நான் ஒர்க் பண்ணி பாக்கறன்னு சொன்னாரு’’
‘’வேம்புல என்னண்ணா லாபம்?’’
‘’வேப்பங்கொட்டை. அதுல இருந்து வேப்ப எண்ணெய் எடுக்கலாம்ங்கறதால அதுக்கு நல்ல டிமாண்ட் எப்பவும் உண்டு. நெல்லுல மூணு போகத்துல கிடைக்கற லாபத்தை விட நல்ல லாபம்’’
‘’உங்களுக்குத் தெரியறது விவசாயமே தொழிலா இருக்கற விவசாயிகளுக்குத் தெரியாதா அண்ணா?’’
‘’சோஷியல் பிஹேவியர் - சோஷியல் மைண்ட் செட் ன்னு இருக்கு. நாம பழக்கமா செய்யற விஷயத்தை மட்டும் தான் திரும்ப திரும்ப செய்வோம். புதுசா ஒண்ணு செய்ய ஒரு வெளித் தூண்டுதல் தேவை. அவங்களுக்கு நல்லா தெரிஞ்ச ஒரு விஷயத்தை நாம எடுத்து சொன்னா போதும். கேப்பாங்க’’
‘’நீங்க சொல்றத அவங்க எக்ஸிகியூட் பண்ணாம போனா உங்களுக்கு வருத்தமாப் போகாதா?’’
‘’மக்களை நேசிக்கறவன் அவங்களுக்கு இன்னும் எளிமையா எப்படி விஷயத்தைக் கொண்டு போய் சேக்கறதுன்னு யோசிப்பானே தவிர சோர்வடைய மாட்டான் தம்பி’’
ஆதித்யா எதுவும் பேசாமல் இருந்தான்.
‘’நம்மால முடிஞ்சத நாம செய்வோம். முயற்சி பண்ணுவோம். ‘’ என்றேன் நான்.