Tuesday 23 November 2021

செலவு (சிறுகதை)

நான் முதல் தடவை ஊரை விட்டுக் கிளம்பிய போது, காசிநாதன் தாத்தாவிடம் தான் பணம் கேட்டேன். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரமாகத்தான் சென்றிருந்தேன்.  சில வினாடிகள் என் முகத்தை உற்றுப் பார்த்தார். என்னை அவர் அமர்ந்திருக்கும் கயிற்றுக் கட்டிலில் அமர வைத்து விட்டு  உள்ளே சென்று மூவாயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தார். இன்று வரை எங்கள் இரண்டு பேரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. ஏழைக் குடியானவர். என்றாலும் எப்போதும் பெருந்தன்மையும் பெரிய மனுஷத் தன்மையும் இல்லாமல் இருந்தது கிடையாது. ஔவை சங்கு சுட்டாலும் வெண்மை தரும் என்பதை சுட்டிக் காட்டுகிறாள். 

மகாத்மா காந்தி உப்பு காய்ச்ச தண்டிக்கு நடைப்பயணம் போன ஆண்டில் தான் பிறந்ததாகக் கூறுவார். சுதந்திரம் கிடைத்த போது அக்ரஹாரத்தில் இருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சுந்தரம் வாத்தியார் என்னும் சுந்தரய்யர் கொடி ஏற்றி வந்தே மாதரம் என்று சொன்னதையும் மாணவர்கள் திருப்பிச் சொன்னதையும் எப்போதும் நினைவு கூர்கிறார். இப்போதும் காலை எழுந்தவுடன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். இரவு உறக்கத்துக்கு முன் பன்னிரண்டு முறை வந்தே மாதரம் என்கிறார். சில விஷயங்கள் ஆகி வந்தவை. தினமணி மட்டும் தான் வாசிக்கிறார். அரசியல் பேசுவதில்லை ; அரசியலில் ஆர்வமும் காட்டுவது இல்லை. ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர்.’’ என்பார். வேறு ஏதும் பேச மாட்டார். அவருக்கென ஒரு தனித்துவம் இருந்தது. எல்லாரையும் போல் அவர் இல்லை. கொஞ்சம் வித்யாசமானவர். வித்யாசமானவர்கள் அடையும் தனிமையில் லயித்திருந்தார்.

காசிநாதன் தாத்தா ஒருமுறை வீட்டாருடன் ஏற்பட்ட சிறு முரண்பாடு காரணமாக வீட்டை விட்டுச் சென்றிருக்கிறார். சென்னைக்கு ரயிலேறிச் சென்று அங்கிருந்து விசாகப்பட்டினம் போய் சேர்ந்திருக்கிறார். பூரி ஜெகன்னாத ஆலயத்தில் ஒரு மாதம் இருந்து விட்டு, கல்கத்தா போய் மூன்று மாதம் சுற்றியிருக்கிறார். அதன் பின்னர் வீடு திரும்பியிருக்கிறார். ‘’பசின்னு சொன்னா இந்த நாட்டுல சோறு போட எத்தனையோ மகராசிங்க இருக்காங்க. மூட்டை தூக்கற - பத்து பாத்திரம் தேய்க்கற - மண்வெட்டியால வாசல சுத்தம் பண்ற வேலையை யாரோ ஒருத்தர் கொடுப்பாங்க. போய்ட்டே இருக்க வேண்டியது தான். ஒரே இடத்துல குட்டை மாதிரி தேங்கி இருந்தாத்தான் எல்லா சிக்கலும்’’. தை மாத நெல் அறுவடை முடிந்து மாசி கடைசியில் உளுந்து பயிர் பறித்தவுடன் ஒரு மாதம் தேசாந்திரம் கிளம்பி விடுவார். ஜெய்ப்பூர், அலகாபாத், அமிர்தசரஸ், ஹரித்வார், ரிஷிகேஷ். தில்லி அவருக்கு மிகவும் பிரியமான ஊர். ‘’எத்தனை விதமான ஜனங்கள்’’ என்பார். ‘’இந்திய ரயில்வே போல இத்தனை சகாயமான கட்டணத்துல போக்குவரத்து உலகத்துல எங்கயும் கிடையாது.’’ ஊர்க்காரர்கள் பயணத்துக்குப் பழக வேண்டும் என்று சொல்வார். அவரிடம் பல கதைகள் இருந்தன. ஹிந்துஸ்தானி சங்கீதம் குறித்து. வட இந்திய சந்தைகள் குறித்து. புராணங்களில் இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் இடங்கள் குறித்து. இந்திய நதிகள் குறித்து. சொல்லிக் கொண்டேயிருப்பார்.  வானொலிப் பெட்டியும் ஆகாசவாணியும் அவரது நிரந்தரத் துணை. 

மறையூரில் ஊரை விட்டு ஓடிப் போன இரண்டாம் ஆள் நான். பெங்களூர், பெல்காம், பூனா, பம்பாய், அகமதாபாத், உதய்ப்பூர், அபு மலை, அமிர்தசரஸ், தில்லி, டேராடூன் என பல ஊர்களில் ஓரிரு வாரங்கள் இருந்து விட்டு வீடு திரும்பினேன். காசிநாதன் தாத்தாவிடம் வாங்கிச் சென்றது மூவாயிரம் ரூபாய். திரும்பி வரும் போது என் கையில் மூவாயிரத்து முன்னூறு இருந்தது. மண்வெட்டி பிடித்து வேலை செய்த கைகள். எந்த வேலையையும் செய்து விடும். உணவகங்களில் பலவிதமான தூய்மைப்படுத்தும் வேலைகள் இருக்கின்றன. பாத்திரங்கள், சமையல்கட்டு, குடோன், டயனிங் டேபிள்கள். இந்த பணிக்கென்றே இருப்பவர்கள் செய்து செய்து சலித்துப் போயிருப்பார்கள். தற்காலிகமாக இதனைச் செய்பவர்களால் துப்புறவாகச் செய்ய முடியும். அங்கேயே உணவு கிடைத்து விடும். சில்லறையும் தேறும். ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டு ஊர் சுற்றலாம். அதனால் தான் எடுத்துச் சென்ற பணத்தை விடக் கூடுதலாக கையில் கொண்டு வந்தேன். பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்ட போது தாத்தாவுக்கு சந்தோஷம். என்னென்ன வேலைகள் செய்திருக்கக் கூடும் என்பது அவருக்குத் தெரியும். 

‘’ஜெய்ராம் தம்பி ! நீங்க உடல் உழைப்புக்கு சலிக்கறவர் இல்லை. காவேரி டெல்டா-ல, விவசாயக் குடும்பங்கள்ல மனஸ்தாபம் எப்போதும் இருக்கும். நீங்க தான் பெருந்தன்மையா போகணும். அப்பாவும் அம்மாவும் ரொம்ப கவலைப்பட்டாங்க தம்பி. உங்க அக்காவும் தங்கச்சியும் பரிதவிச்சுப் போய்ட்டாங்க. ‘’

‘’அண்ணன் காரங்க செத்து ஒழிஞ்சிருப்பன்னு சந்தோஷமா இருந்திருப்பாங்களே’’

காசிநாதன் தாத்தா பதில் சொல்லவில்லை. சங்கடமான விஷயங்கள் பேசப்படும் போது மௌனமாயிருப்பது அவர் வழக்கம். 

வீட்டில் சொத்தைப் பிரித்துக் கொண்டோம். எனக்கு ஐந்து ஏக்கர் நிலம் கிடைத்தது. அண்ணன்கள் இருவருக்கும் தலா ஏழு ஏக்கர். அப்பா வீட்டையும் தன் பங்குக்கு ஐந்து ஏக்கரையும் வைத்துக் கொண்டார். அவருக்குப் பிறகு அம்மாவுக்குப் போய் சேரும் என்று உயில் எழுதி வைத்தார். ஒரே வீட்டில் இருப்பதா வேண்டாமா என்பது அவரவர் விருப்பம் என்று கூறி விட்டார். அண்ணன்கள் இருவரும் பக்கத்துத் தெருவில் வாடகைக்குக் குடியேறினர். நான் வீட்டில் இருந்தேன். காசிநாதன் தாத்தா அப்பாவிடம் பண்ணை ஆளாக வேலை பார்த்தார். என்னுடைய நிலத்தில் நான் எலுமிச்சைத் தோட்டம் போட்டேன். 

ஐயர்மார்கள் பண்ணை நிலங்களையும் அக்ரஹாரத்தில் இருக்கும் வீடுகளையும் வேகமாக விற்றுக் கொண்டிருந்தார்கள். நிலத்தையும் வீட்டையும் விற்கக் கூடாது என்ற உறுதியுடன் இருந்த இரண்டு ஐயர்மார்களின் நாலு வேலி நிலத்தை பண்ணையம் பார்க்கக் கூடிய சூழல் எனக்கு உருவானது. என் எலுமிச்சைத் தோட்டத்துடன் இந்த வேலையையும் பார்த்தேன். விவசாயம் என்பது வானம், பூமி, தண்ணீர். விவசாயியின் மனமும் அப்படி இருக்க வேண்டும். இருந்தால் கொடுப்பினை. 

காலையில் எழுந்தவுடன் இந்தியாவின் ஏழு புண்ணிய நதிகளின் பெயரைச் சொல்வேன். ஏழு புண்ணிய நகரங்களின் பெயரைச் சொல்வேன். பெரும் நீர்ப்பரப்பில் ஒரு துளி ஆனதாகவும் பெரும் நிலப்பரப்பில் ஒரு துளி மண் ஆகிவிட்டதாகவும் தோன்றும். அந்த உணர்வுடனே ஒரு நாள் நகரும். புண்ணியம் என்பது என்ன? உயிர்களுக்கு உதவுவது தானே! இந்திய நதிகள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தன் கரையில் வாழும் கோடானுகோடி ஜீவன்களுக்கு வாழ்க்கையை அளித்திருக்கின்றன.  வருஷத்துக்கு ஒரு மாதம் ரயிலில் பத்தாயிரம் கிலோ மீட்டர் சுற்றி விடுகிறேன். பெரும்பாலும் நான் மட்டும். அபூர்வமாக உடன் சிலருடன். 

சகோதரிகளுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து கொடுத்தோம். எனக்கும் திருமணம் ஆனது. இரண்டு பெண் குழந்தைகள். 

காசிநாதன் தாத்தா ஆயிரம் பிறைகளைப் பார்த்து ஏழு ஆண்டு ஆகி விட்டது. உழைத்து உரமேறிய உடல். இன்னும் அப்பா வயலில் வேலை செய்கிறார். அவருக்கு எழுபது வயது இருக்கும் என்று தான் பார்ப்பவர்கள் நினைக்கிறார்கள். 

ஒரு நாள் வீட்டுக்கு வந்திருந்தார். உட்கார வைத்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தேன். 

சில நிமிடங்கள் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். அவர் மகன்களைப் பற்றி பேசப் போகிறார் என்று யூகித்தேன். 

‘’ஜெயராம் தம்பி ! நாப்பது வயசுக்கு மேல தான் நான் கல்யாணம் செஞ்சுகிட்டன். அஞ்சு வருஷம் கழிச்சு தான் பையன்க பொறந்தாங்க’’

சொல்லிவிட்டு மௌனமானார். 

ஒரு சிறு இடைவெளிக்குப் பின்னர் பேசத் தொடங்கினார். 

‘’ரெண்டு பேரும் குடிக்கு அடிமையா இருக்காங்க. அவங்க மட்டும் இல்ல. இன்னைக்கு ஊர்ல இருக்கற ஆம்பளைங்கள்ள நூத்துக்கு தொன்னூத்து அஞ்சு பேரு குடிக்கறவங்க. கையில ஒத்தக்காசு சேமிப்பு யார்ட்டயும் இல்லை. எனக்கு ஒரு உதவி செய்ங்க தம்பி’’

’’சொல்லுங்க தாத்தா’’

’’இதுல ஐயாயிரம் ரூபா இருக்கு’’ ஒரு கவரை என்னிடம் தந்தார். 

‘’நான் இறந்து போய்ட்டா என் மகன்கள்ட்ட செலவுக்கு ஒத்த ரூபா இருக்காது. அப்ப அவங்க யார்ட்டயாவது போய் என்னோட சடங்குகள செய்ய கடன் கேட்டு நிக்கக் கூடாது. அப்ப நான் கொடுத்தன்னு சொல்லி இந்த பணத்தை அவங்க கிட்ட கொடுக்கணும். எனக்காக இதைச் செய்யணும். ‘’  

என் மனைவி அவருக்கு மோர் கொண்டு வந்து கொடுத்தாள். 

கிளம்பும் போது என்னிடம் ‘’ராஜாஜி ரொம்ப பெரிய மனுஷர் ‘’ என்றார்.