Thursday 25 November 2021

நர்மதை நதி வலம்

 
நூல் : நர்மதை நதி வலம்     ஆசிரியர் : கே. கே. வெங்கட்ராமன்    தமிழாக்கம் :    C. வரதராஜன்    வெளியீடு : ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் , மயிலாப்பூர் , சென்னை-4 விலை : ரூ. 40/-

புராணத்தில் ஒரு கதை உள்ளது. புண்ணிய நதிகள் அனைத்தும் வான் உலகில் இருந்தன. அப்போது சிவபெருமான்  அந்நதிகளிடம் புவியில் வாழும் மனிதர்களை உய்விக்க அங்கு செல்ல எவருக்கு விருப்பம் உள்ளது என்று வினவுகிறார். நர்மதை தான் முதலில் பூமிக்குச் செல்வதாகக் கூறி பூமியை வந்தடைகிறாள். அன்றிலிருந்து நர்மதை சிவனுக்கு மிகவும் பிரியம் கொண்ட நதியாகிறாள். சிவனின் ஜடாமுடியில் வசிக்கும் கங்கையே ஆண்டுக்கு ஒருமுறை காராம் பசு உருவெடுத்து நர்மதையில் புனித நீராடிச் செல்கிறாள். 

நர்மதை நதிக்கரையில் மிக அதிக எண்ணிக்கையில் சிவாலயங்கள் உள்ளன. வட இந்தியாவில் ’’நர்மதா பரிக்ரமா’’ என்னும் நதி வலம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோரால் மேற்கொள்ளப்படுகிறது. நர்மதை நதி உற்பத்தி ஆகும் அமர்கண்டக்கில் தொடங்கி நதி நம் வலப்பக்கமாக வர மேற்கு நோக்கி நதி கடலில் சங்கமம் ஆகும் சங்கமஸ்தானம் வரை நடந்து செல்ல வேண்டும். அங்கே நர்மதையை படகின் மூலம் கடந்து நதிக்கு வடதிசைக்குச் சென்று நர்மதையின் உற்பத்திஸ்தானமான அமர்கண்டக் வரை நடந்து செல்ல வேண்டும். நர்மதை ஆற்றின் நீளம் 1200 கி.மீ. இந்த நதி வலம் 2400 கி.மீ நீளம் கொண்டது. 

இந்த பயணத்துக்கென்று தனிப்பட்ட விதிகள் உள்ளன. 

1. நர்மதை நதி வலம் செல்பவர்கள் கையில் காசோ பணமோ வைத்துக் கொள்ளக் கூடாது. 

2. நதி வலத்தின் போது பிச்சையெடுத்துத்தான் உணவருந்த வேண்டும். ஒருவரிடம் பிச்சை கேட்டு அவர் மறுத்தால் மேலும் இருவரிடம் மட்டும்தான் பிச்சை கேட்க வேண்டும். மூவரும் மறுத்து விட்டால் அன்றைய உணவைத் துறந்து விட வேண்டும். 

3. நதி வலத்தின் போது காலில் காலணி அணியக் கூடாது. வெறும் காலுடனே நடக்க வேண்டும். 

4. நினைவில் நர்மதை அன்னையை மட்டுமே இருத்தி பயணம் மேற்கொள்ள வேண்டும். 

மேலும் சில விதிகளும் உண்டு. 

இந்திய ராணுவத்தில் பணி புரிந்த கேப்டனாகப் பணி புரிந்த திரு. கே.கே. வெங்கட்ராமன் அவர்கள் இந்த 2500 கி.மீக்கும் அதிகமான நடைப்பயணத்தை தனியாக மேற்கொள்கிறார். துவங்கிய தினத்திலிருந்து நான்கு மாதம் பத்து நாட்களில் பயணத்தை நிறைவு செய்கிறார். அந்த பயணத்தில் அவர் அறிந்த உணர்ந்த கேட்ட அடைந்த அனுபவங்களை ‘’நர்மதை நதி வலம்’’ என நூலாக எழுதியுள்ளார். ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. 

திரு. வெங்கட்ராமன் அவர்கள் ஐயப்ப பக்தர். ஆண்டுதோறும் சபரிமலைக்குச் செல்பவர். ஐயப்ப ஸ்தோத்திரத்தைச் சொன்னவாறே நர்மதை நதி வலத்தையும் மேற்கொள்கிறார். அவரது பயணப்பையில் சபரிமலை சாஸ்தாவின் படம் இருக்கிறது. 

ஆரம்ப சில நாட்களில் பிச்சை கேட்பது அவருக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது. எனினும் நர்மதை நதிக்கரையில் வசிக்கும் மக்கள் நதி வலம் மேற்கொள்பவர்கள் மேல் காட்டும் அன்பையும் பிரியத்தையும் மரியாதையையும் காணும் போது அவர் மனம் காணும் அனைவரையும் தம் உறவாக எண்ண வைத்து விடுகிறது. 

ஒரு நாளைக்கு சராசரியாக 20 கி.மீ நடந்து விட வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதால் காலை 5 மணிக்கு எழுந்ததுமே நடக்கத் தொடங்கி விடுகிறார். நதியின் கரையிலேயே நடக்க வேண்டும். காலை 11 மணிக்குள் 10 கி. மீ தூரம் நடந்து அங்கே உள்ள கிராமத்தில் நர்மதை நதியில் குளித்து விட்டு பிச்சை கேட்டு பிச்சை அளிப்பவர் அளிக்கும் உணவை ஏற்று சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மதியம் 1 மணி அளவில் மீண்டும் கிளம்பி மேலும் 10 கி.மீ தூரம் சென்று அங்கே உள்ள கிராமத்தில் இரவு தங்கி விடுகிறார். 

தனிப்பயணி என்பதால் கிராம மக்கள் இவரைச் சூழ்ந்து கொண்டு நதி வல அனுபவங்களைக் கேட்கின்றனர். இராமாயண மகாபாரதக் கதைகள் குறித்து பேசுகிறார்கள். அந்த கிராம மக்களுக்கு வேதாந்த விஷயங்களில் கூட ஈடுபாடு இருப்பதைப் பதிவு செய்கிறார். 

100 கி.மீ க்கு பயணத்தில் வனப்பாதை இருக்கிறது. அங்கே இருக்கும் வனவாசிகள் பரிக்ரமா செல்பவர்களிடம் இருக்கும் தங்களுக்குத் தேவையான பொருட்களை மிரட்டி வாங்கிக் கொள்வது உண்டு. அவர்கள் பெண்களுக்கு எந்த தொந்தரவும் செய்ய மாட்டார்கள். ஆனால் ஆண்களிடம் அவர்கள் வேட்டியைக் கூட பிடுங்கி விடுவார்கள். வனப்பாதை துவங்கும் இடத்தில் ஒரு அற நிறுவனம் பரிக்ரமாவாசிகளுக்கு சாக்குப் பையை அளிக்கிறது. வனவாசிகளுக்கு சாக்குப்பை தேவைப்படாது. வேட்டியை இழந்தவர்கள் இந்த சாக்குப்பையை கட்டிக் கொள்ள வேண்டும். நூலாசிரியர் இந்த வனப்பாதையை பரிக்கிரமா செல்லும் ஒரு குழுவுடனே கடக்கிறார். அந்த குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களிடம் வேட்டியைப் பறித்துக் கொள்ளும் வனவாசிகள் இவரை விட்டு விடுகிறார்கள். இவரிடமிருந்து தீப்பெட்டியையும் பிளேடையும் மட்டும் எடுத்துக் கொள்கின்றனர். 

ஒரு கிராமத்தில் பெரியவர் ஒருவரிடம் பிச்சை கேட்கிறார் நூலாசிரியர். அவர் ஒரு மளிகைக்கடைக்காரர். கடை வாசலில் ஒரு பெஞ்ச் இருக்கிறது. ஆனால் தரையைச் சுட்டிக் காட்டி அங்கே அமர் என ஆணையிடுகிறார். சினம் தவிர்க்க வேண்டும் என்ற நதி வல நெறியை மேற்கொள்வதால் அமைதி காக்கிறார் திரு. வெங்கட்ராமன். உணவு சமைத்துக் கொள்ளத் தேவையான மளிகைப் பொருட்களைக் கொண்டு வந்து தருகிறார் கடைக்காரர். தனக்கு சமைத்துக் கொள்ளத் தெரியாது என்று பணிவுடன் தெரிவிக்கிறார் நூலாசிரியர். உன் உணவை சமைத்துக் கொள்ளத் தெரியாமல் நீ என்ன பரிக்கிரமா செய்கிறாய் என ஆத்திரப்படுகிறார் கடைக்காரர். அவரிடம் நன்றி சொல்லி விட்டு நடக்கிறார் திரு. வெங்கட்ராமன். கொஞ்ச நேரத்தில் கடைக்காரரும் அவருடைய மனைவியும் பின்னால் வந்து தங்களை மன்னித்து தங்கள் வீட்டில் உணவருந்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அவ்வாறே செய்கிறார் நூலாசிரியர். மதிய உணவை அங்கே முடித்து புறப்பட ஆயத்தமானதும் அந்த ஊர் இளைஞர்கள் அன்று காலை நடந்ததைக் கேள்விப்பட்டு நீங்கள் எங்கள் ஊரைப் பற்றி எதிர்மறையான எண்ணத்துடன் போகக் கூடாது . எனவே இரவும் இங்கே தங்கியிருந்து எங்கள் உபசரிப்பை ஏற்று எங்களுக்கு ஆசியளித்துச் செல்ல வேண்டும் என்கின்றனர். அவர்கள் அன்பை மறுக்க வழியின்றி அங்கேயே தங்குகிறார். 

ஓர் ஏழைக் குடியானவரிடம் ஆசிரியர் பிச்சை கேட்கிறார். அவருக்கு உணவளிக்க வேண்டும் என்பது விருப்பம். ஆனால் வீட்டில் வறிய நிலை. ஒரு இடத்தில் காத்திருக்குமாறு சொல்லி விட்டு தனது வீட்டுக்குச் சென்று மனைவியிடம் விஷயத்தைக் கூறுகிறார். குடியானவரின் மனைவி ஆசிரியரை வீட்டுக்கு அழைத்து வருமாறு சொல்கிறார். உணவு தயாரிக்க மளிகை இருக்கிறதா எனக் கேட்கிறார் குடியானவர் . நாளை ஒரு நாள் உணவுக்கு நம்மிடம் மளிகை இருக்கிறது. நாம் நாளை உணவருந்த இன்று ஒரு பரிக்ரமாவாசியைப் பட்டினி போடக் கூடாது என்று சொல்லி உடன் அழைத்து வருமாறு சொல்லி உணவு தயார் செய்து அளிக்கிறார் குடியானவரின் மனைவி. அந்த ஏழைக் குடியானவரின் வீட்டில் உணவருந்தியதை நெகிழ்வுடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். 

தனியாகப் பயணிக்கும் நூலாசிரியரை நர்மதை நதிக்கரை மக்கள் ‘’பாபாஜி பாபாஜி’’ என்றே அழைக்கின்றனர். 

இராணுவத்தில் பணி புரிந்தவர் என்பதால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் ஏராளமான வழிகளை உருவாக்கிக் கொள்கிறார். மாலையுடன் பயணம் முடிந்து தனது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடிதம் எழுதுகிறார் திரு. வெங்கட்ராமன். பரிக்ரமா அனுபவங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார். அந்த கிராமவாசிகளின் உறவினர்களோ நண்பர்களோ 100 அல்லது 120 கி.மீ தொலைவில் இருந்தால் அவர்கள் முகவரியை அளித்து அதனைத் தனது தொடர்பு முகவரியாக அளிக்கிறார். நூலாசிரியரின் கடிதம் கண்டவுடன் அவர் கொடுத்திருக்கும் முகவரிக்கு அவரது உறவினர்கள் கடிதம் எழுதுகின்றனர். பரிக்கிரமாவாசிகள் நதிக்கரையில் தங்கியிருப்பார்கள் என்பதால் இவர் போய் சேரும் கிராமவாசிகள் இவரிடம் கடிதத்தை கொண்டு வந்து அளிக்கிறார்கள். இராணுவத்தின் துல்லியத் திட்டமிடல் இவருக்கு உதவி செய்கிறது. 

தெற்குப் பகுதி நதி வலத்தின் போது ஒரு பெண்மணி தனக்கு தோல் நோய் ஒன்று இருப்பதாகவும் அதற்கு வடகரையில் இருக்கும் அனசூயா அன்னையின் ஆலயத்திலிருந்து மண்ணை எடுத்து வர வேண்டும் என்று கேட்கிறார். வட பகுதி நதி வலத்தின் போது அந்த ஊருக்கு வந்ததும் அனசூயா ஆலய மண்ணை எடுத்து வைத்துக் கொண்டு அந்த வீட்டாருக்கு கடிதம் போடுகிறார். தான் இன்ன தேதியில் உங்கள் ஊருக்கு மறுகரையில் இருக்கும் இன்ன ஊரில் இருப்பேன். உங்கள் உறவினர்கள் எவரையும் நதியைக் கடந்து வரச் சொல்லி பெற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். அவ்வாறே அவர்களும் செய்கின்றனர். 

பல்வேறு மனிதர்களுடனான உணர்ச்சிகரமான இனிய நினைவுகளை நூலெங்கும் பதிவு செய்கிறார். கங்கையில் மூழ்கி எழுந்தால் பாவங்கள் கரையும்; நர்மதையைக் கண்டாலே பாவங்கள் இல்லாமலாகும் என்பது நர்மதா நதி தீரத்தில் வசிப்பவர்களின் நம்பிக்கை என பதிவு செய்கிறார். 

வாசிக்கும் அனைவரையும் தாமும் இது போல ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும் என எண்ண வைக்கும் ஒரு நூல் இந்நூல். 

நர்மதா பரிக்ரமா மேற்கொள்பவர்களை மஹாபலி, பரசுராமர், அனுமன், வீடணன், கிருபர், அஸ்வத்தாமன், வியாசர் ஆகிய ஏழு சிரஞ்சீவிகள் காப்பார்கள் என்பது நம்பிக்கை.