Monday, 29 November 2021

மழைநீர்

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

-திருக்குறள், வான் சிறப்பு

{பெருங்கடலும் நீர் இன்றி வற்றிப் போகும்; வான் மேகம் மழையைப் பொழியவில்லை எனில். }

என்னுடைய தொழில் சார்ந்து நான் எழுதிய பதிவுகள் வாசகர்கள் பலரால் மிக ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டன. பலர் தங்கள் மகிழ்ச்சியை மின்னஞ்சல் மூலமாகவும் அலைபேசி உரையாடலிலும் தெரிவித்தனர்.  என்னுடைய கல்லூரிப் படிப்பு முடிந்த பின்னர் கட்டிடத் துறையில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற தீரா விருப்பம் எனக்கு இருந்தது. 

அப்போது நான் பல விஷயங்களை யோசித்திருக்கிறேன். நான் கல்லூரி முடித்த அதே ஆண்டில் அக்டோபர் நவம்பர் ஆகிய மாதங்களின் ‘’தி இந்து’’ நாளிதழை சேகரித்து வைத்தேன். அதில் காலநிலை குறித்த பக்கத்தில் இந்தியாவின் முக்கிய மாநகரங்களிலும் நகரங்களிலும் அன்றன்றைய மழைப்பொழிவு எவ்வள்வு என்ற விபரம் அளிக்கப்பட்டிருக்கும். அதில் நாகப்பட்டினமும் உண்டு. அக்டோபர் ஒன்றாம் தேதி நாகப்பட்டினத்தில் மழை எவ்வளவு அடுத்த நாள் எவ்வளவு என ஒவ்வொரு நாளுக்கும் அட்டவணை போட்டுக் கொண்டேன். 1000 சதுர அடி கொண்ட வீட்டின் மாடியில் இத்தனை செ.மீ மழைக்கு எவ்வளவு மழைநீர் சேகரமாகும் என்று கணக்கிட்டேன். ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்று கணக்கீடு காண்பித்தது. மழைநீரை பூமியில் செலுத்தி நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்து ஒரு கவனம் அப்போது உருவாகி வந்தது. நான் மழைநீரை சேகரிக்கும் விதமாக பெரிய அளவிலான நீர்த்தேக்கத் தொட்டிகளை ஒவ்வொரு வீட்டிலும் அமைக்கும் வகையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணத்தின் நீட்சியாக வீடுகளின் தரைத்தளத்திலோ அல்லது மாடியிலோ 10 அடி நீளம் 10 அடி அகலம் 10 அடி உயரம் கொண்ட ஒரு அறையை நீர்த்தொட்டியாக மாற்றி ஆண்டு முழுதுக்கும் தேவைப்படும் தண்ணீரை அதில் சேர்த்து வைப்பதன் சாத்தியங்கள் குறித்து பரிசீலித்தேன்.

பின்னாட்களில், தமிழ்நாட்டின் வறட்சி மிக்க மாவட்டங்களில் சிலர் வீட்டில் தரைத்தளத்திலோ முதல் தளத்திலோ 10 அடிக்கு 10 அடி அளவுள்ள 10 அடி உய்ரம் கொண்ட  ஒரு அறையை ஜன்னல்கள் இல்லாமல் கட்டி பெரிய தண்ணீர் தொட்டியாகப் பயன்படுத்துவதை அறிய நேரிட்ட போது மகிழ்ச்சியாக இருந்தது. 100 சதுர அடி கொண்ட அறையில் 30,000 லிட்டர் தண்ணீரை சேகரித்து வைக்க முடியும். பருவ மழை மற்றும் கோடை மழை மூலம் வருடத்தில் மூன்றில் ஒரு பங்கு நாட்களுக்கான தண்ணீர் தேவையை நிலத்தடி நீர் இல்லாமலே அடைய முடியும்.  தேவையே கண்டுபிடிப்பின் தாய்  என்று சொல்வார்கள். 

சமீபத்தில், ஒரு காலிமனையில் கட்ட இருக்கும் கட்டிடம் ஒன்றில் தரைத்தளத்தில் பாரம்பர்யமான முறையில் ஒரு கிணறு வெட்டி அக்கட்டிடத்தில் மாடியில் சேகரமாகும் மொத்த மழைநீரையும் அந்த கிணற்றில் கொண்டு சேர்க்கும் விதத்தில் திட்டமிட்டு அதற்கு அந்த கட்டிட உரிமையாளரின் இசைவைப் பெற்றுள்ளேன்.