ஊரில் ஒரு கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. ஒரு இல்லம். 1000 சதுர அடி கொண்டது. அதன் கிழக்குப் பக்கத்தில் ஒரு காலிமனை உண்டு. வீட்டுக்கும் காலிமனைக்கும் இடையே ஒரு காம்பவுண்டு சுவர் எழுப்ப வேண்டும். வீட்டில் பூச்சு வேலை நடந்து கொண்டிருந்தது. எல்லா பணியாளர்களும் அந்த பணியில் அதிக எண்ணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். கட்டுமானத்தைப் பார்வையிட எனது தந்தை பணியிடத்துக்கு வந்தார். பணிகளைப் பார்வையிட்டார்.
புறப்படும் போது என்னை அழைத்தார். ‘’பிரபு! பூச்சு வேலை நடக்கற படி நடக்கட்டும். ஈஸ்டர்ன் சைடு காம்பவுண்ட் வால் கிரேடு பீம் கான்கிரீட்டுக்கு ஏற்பாடு செய்’’ . குறிப்பைக் கொடுத்து விட்டு சென்று விட்டார்.
நான் தொழிலாளர்களிடம் சொன்னேன். ‘’சார் ! பூச்சு வேலை முடியட்டும். பாத்துக்கலாம். ‘’ என்றனர்.
இரண்டு நாளாக கட்டிடத்தினுள் பூச்சு வேலையை மட்டுமே செய்து கொண்டிருந்தனர்.
மூன்றாவது நாள் நான் மீண்டும் நினைவுபடுத்தினேன். அதே பதில்.
இன்னும் இரண்டு நாட்கள் ஆனது. முன்னேற்றம் எதுவும் இல்லை. அன்று மாலை ஊதியம் பட்டுவாடா செய்யும் போது ‘’ நாளைக்கு கம்பி ஃபிட்டரை வரச் சொல்லி ஃபோன்ல சொல்லிட்டன். அவங்க அரை நாள்ல கம்பி கட்டி சைடு அடச்சிடுவாங்க. நாளைக்கு மதியம் மூணு மணிக்கு காம்பவுண்டு சுவர் கிரேடு பீம் கான்கிரீட் போட்டுடலாம்’’ என்றேன். எல்லா ஏற்பாடும் எல்லா திட்டமிடலும் செய்து விஷயத்தைச் சொன்னது தொழிலாளர்களுக்கு வியப்பு அளித்தது. ‘’ அப்பா என்கிட்ட தான் சொல்லிட்டு போயிருக்காங்க. செய்யலைன்னா அத என்னோட மிஸ்டேக்கா நினைப்பாங்க. அவங்ககிட்ட காரணம் சொல்லிட்டு இருக்க முடியாது. ‘’
மறுநாள் காலை கம்பி ஃபிட்டர் வந்து வேலை செய்தார். மாலை 3 மணிக்கு கான்கிரீட் போடத் துவங்கி 6 மணிக்கு நிறைவு செய்தோம்.
மறுநாள் காலை கட்டிடத்தினுள் நடக்கும் பூச்சு வேலை நடந்தது.
காலை 11 மணி இருக்கும். வானம் இருட்டத் துவங்கியது. மூன்று மணி நேரம் கனமழை பெய்தது. பக்கத்தில் உள்ள காலிமனையில் ஒரு அடி ஆழத்துக்கு தண்ணீர் தேங்கி நின்றது.
எல்லாரும் ஆச்சர்யமாகப் பார்த்தோம். முதல் நாள் கான்கிரீட் போட்டிருக்காவிட்டால் அந்த பணியை காலிமனையின் தண்ணீர் முழுமையாக வடிந்த பின் தான் செய்திருக்க முடியும். அது முற்றிலும் வடிய இரண்டு மாதங்கள் ஆகியிருக்கும். இப்போது கிரேடு பீம் எழுப்பி விட்டதால் அதன் மீது காம்பவுண்டு சுவரை மூன்று நாளில் எழுப்பி பூசி விட்டோம்.
தந்தைக்கு அவரது உள்ளுணர்வு வழிகாட்டியிருக்கிறது என்று பேசிக் கொண்டோம்.