Tuesday 21 December 2021

நம்பிக்கை

நேற்று ஒரு வாசகரைச் சந்திக்க நேர்ந்தது. பழைய வடார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையின் எண்பதாம் அகவை நிறைவை ஒட்டி திருக்கடவூரில் சிறப்பு வழிபாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவருடைய குடும்பத்திலிருந்து நெருங்கிய உறவினர்கள் 15க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை அனுப்பி வைத்து விட்டு சந்திக்க வருவதாகச் சொன்னார். அவருக்கு திருச்சி செல்ல வேண்டி இருந்தது. எனக்கும் திருச்சியில் ஒரு வேலை இருந்தது. இருவரும் ஒன்றாகப் பயணமானோம். 

நண்பர் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக பணி நிமித்தம் அமெரிக்காவில் இருக்கிறார். அவருடைய மனைவியும் அங்கே பணி புரிகிறார். குழந்தைகள் அங்கேயே படிக்கிறார்கள். நான் அவரை இரண்டாண்டுகளுக்கு முன்னால் சந்தித்திருக்கிறேன். அதன் பின் ஓரிரு மின்னஞ்சல்கள் அனுப்பினார். ஓரிரு முறை அலைபேசியில் பேசினார். 

இலக்கியத்தில் ஆர்வம் உள்ள வாசகர்களை நான் எழுதுமாறு சொல்வேன். அவரிடமும் முதல் சந்திப்பில் சொன்னேன். அவருக்கு மரபிலக்கியத்தில் ஆர்வம் இருந்தது. மரபிலக்கியத்தில் ஆர்வம் உடைய ஒருவராகவே என் நினைவில் அவர் பதிவாகி இருந்தார். 

இந்த முறை ஒன்றாகப் பயணித்த போது , அவருடைய தன்னார்வ செயல்பாடுகள் பலவற்றை அறிய நேர்ந்தது. வாஷிங்டன் நகரில் பல தமிழ்க் குழந்தைகளுக்கு தமிழ்மொழியைக் கற்றுத் தரும் பணியை பல்லாண்டுகளாக மேற்கொள்வதாகச் சொன்னார். தனது அலுவல் நேரம் போக இதற்கென தினமும் நேரம் ஒதுக்குவதாகவும் சொன்னார். வார இறுதி நாட்களை முழுமையாக இப்பணிக்காகக் கொடுப்பதாகவும் சொன்னார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இத்தனை நாள் அறியாமல் இருந்திருக்கிறேனே என எண்ணிக் கொண்டேன். ஆசிரியப் பணி செய்யும் போதே தன் மனம் முழு நிறைவை அடைவதாகச் சொன்னார். 

பல ஆண்டுகளாக யோகாசனங்கள் செய்து வருவதாகக் கூறினார். நீங்கள் ஏன் அமெரிக்காவில் உங்கள் பகுதியில் ஒரு யோகாசன வகுப்பு துவங்கக் கூடாது என்று கேட்டேன். துவங்குமாறு சொன்னேன். இந்தியர்கள், அமெரிக்கர்கள், ஐரோப்பியர்கள் என பலவகைப்பட்டவர்கள் வகுப்பில் இணைய வாய்ப்பு உள்ளது என்பதால் யோகாவை பலருக்கு கொண்டு சேர்க்கும் பணியை மேற்கொள்ள முடியும் என்று சொன்னேன். அவருக்கு அந்த யோசனை பிடித்திருந்தது. அதனைச் சாத்தியமாக்குவது குறித்து பரிசீலிப்பதாகக் கூறினார். 

உரையாடியவாறே திருச்சி வந்து சேர்ந்தோம். பிரியும் நேரம் வந்தது. மீண்டும் சந்திக்க ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஆகலாம் என்பதால் என் மனம் வருந்தியது. ‘’உங்களுக்கு வேண்டுமானால் அடுத்த சந்திப்புக்கு இரண்டு வருடம் ஆகலாம் ; நான் தினமும் உங்கள் எழுத்துக்கள் மூலம் - உங்கள் வலைப்பூ மூலம் - உங்களைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். சந்தித்துக் கொண்டு இருப்பேன்’’ என்று சொன்னார். 

தமிழ்ச்சூழல் மிகவும் எதிர்மறையானது. பல்வேறு விதங்களில். பல்வேறு விதங்களிலும். நண்பரைப் போன்ற வாசகர்களே தமிழ் எழுத்தாளனுக்கு நம்பிக்கை அளிக்கிறார்கள்.