Wednesday 22 December 2021

கொடையாளி

இன்று காலை ஒரு நண்பர் ஃபோன் செய்தார். நான் பக்கத்தில் உள்ள கிராமம் ஒன்றினுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அங்கே எனக்கு சமீபத்தில் ஒருவர் பரிச்சயமானார். அவர் தேனீர்க்கடை ஒன்றில் பணி புரிபவர். அவருடைய மகளுக்கு 24 வயது. நர்சிங் பயின்றவர். சில வாரங்களுக்கு முன்னால், தீவிரமான உடல்நலக் கோளாறுகள் அந்த யுவதிக்கு ஏற்பட்டன. மருத்துவப் பரிசோதனையில் இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்திருப்பது தெரிய வந்தது. வாரத்துக்கு மூன்று நாட்கள் ‘’டயாலிசிஸ்’’ செய்து வருகிறார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலும் மனம் தளராமல் குடும்பத்தினர் சிகிச்சை அளிக்கின்றனர். சிகிச்சையின் போது உடனிருக்கின்றனர். சிகிச்சை திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது. அந்த பெண்ணின் தந்தையும் தாயும் மருத்துவமனையில் மகளுடன் இருக்கின்றனர். ’’டயாலிசிஸ்’’ முடிந்து கிராமத்துக்குத் திரும்புவார்கள். பின்னர் அடுத்த இரு நாளில் மீண்டும் பயணம். மீண்டும் சிகிச்சை.  சிகிச்சைக்கு உடனிருப்பதால் அவருடைய தேனீர்க்கடை பணிக்கு செல்ல முடியாத நிலை. நான் வாரம் ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ அங்கு சென்று அவர்களின் நலம் விசாரித்து விட்டு வருவேன். இந்த விபரத்தை ஃபோன் செய்த நண்பரிடம் சொன்னேன். அந்த குடும்பத்தினரைக் காண சென்று கொண்டிருப்பதாகச் சொன்னேன். 

ஐந்து நிமிடம் கழித்து முன்னர் ஃபோன் செய்த நண்பரிடமிருந்து மீண்டும் ஃபோன்கால். 

‘’பிரபு ! உங்க அக்கவுண்ட்டுக்கு ஒரு அமௌண்ட் அனுப்பி இருக்கன். அந்த ஃபேமிலிக்கு கொடுத்துடுங்க’’

‘’நான் உங்க கிட்ட ஹெல்ப் வேணும்னு கேக்கலையே’’

‘’நீங்க கேக்கலை. உண்மைதான். ஆனா அந்த விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ஏதாவது செய்யணும்னு தோணுச்சு. அதனால தான் பணம் அனுப்பியிருக்கன்.’’

‘’என்னை நீங்க எல்லாரும் கடனாளியா ஆக்கறீங்க’’. 

‘’அப்படியெல்லாம் இல்ல பிரபு. நீங்க சமூகத்துல இருக்கற பலதரப்பட்ட ஜனங்களோட நேரடியா தொடர்புல இருக்கீங்க. அவங்களுக்கு உங்களால முடிஞ்சத செய்ய முயற்சி செய்யறீங்க. உங்களுக்கு சப்போர்ட் செய்றது மூலமா உங்க பணியில சின்ன அளவில பங்கெடுத்துக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்குது. ‘’

‘’ராம்கிருஷ்ணஹரி’’ என்று சொன்னேன். 

‘’பிரபு அப்புறம் ஒரு சின்ன ரெக்வெஸ்ட்’’

‘’சொல்லுங்க’’

‘’இந்த விஷயத்துல நான் ஹெல்ப் செஞ்சதா நீங்க யார்ட்டயும் என் பேரை ரிவீல் செய்யக் கூடாது. பிளீஸ்’’

‘’பேரை மென்ஷன் பண்ணாமவாவது இத பத்தி நான் சொல்லலாமா?’’

‘’என்னைக் கேட்டா நான் வேண்டாம்னு தான் சொல்வன். அப்புறம் உங்க இஷ்டம்.’’

அலைபேசி உரையாடல் முடிந்தது. 

நான் ஏ.டி.எம் சென்று நண்பர் அனுப்பிய தொகை ரூ. 10,000 ஐ எடுத்துக் கொண்டு கிராமத்திற்குச் சென்று அந்த குடும்பத்தாரிடம் கொடுத்தேன். 

பின்குறிப்பு :

அந்த குடும்பத்தாரைச் சந்திக்கும் முன் , அந்த கிராமத்தில் உள்ள எனது நண்பரை பார்க்கச் சென்றேன். அவரிடம் விஷயத்தை சொன்னேன். அவர்களிடம் நிதி அளிக்கையில் உடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டேன். நண்பர் சம்மதித்தார். வீட்டில் அவருடைய அறைக்குச் சென்று ரூ. 2000 எடுத்து வந்து என் கையில் கொடுத்தார். இதனையும் வழங்கி விடுவோம் என்றார். இந்த தொகையைத் தான் அளித்ததாக சொல்ல வேண்டாம் ; உங்கள் நண்பர் அளித்ததாகவே கூறி வழங்கி விடுவோம் என்றார். அவர் சொன்னவாறே ரூ. 12,000 ஐ அந்த குடும்பத்தாரிடம் அளித்தோம்.