தமிழ்நாட்டில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. தமிழ்நாட்டில் இன்றும் முக்கியமான தொழில் விவசாயம். விவசாயத்துக்கு அடிப்படையான நீர் மேலாண்மை கட்டுமானங்கள், கால்நடைகள் வளர்ப்பு, விவசாயிகளுக்கு அதிக வருமானம் கிடைத்தல் ஆகிய விஷயங்களைக் குறித்து பெரிய அளவில் பேச்சே எழாது. நீர் மேலாண்மை கட்டுமானங்களுக்கு அரசாங்கமோ அல்லது வங்கிகளோ அல்லது தனியாரோ கூட கடன் அளிக்க முடியும். ஆனால் அது குறித்து எந்த செயல்திட்டமும் முன்வைக்கப்படாது. கும்மிடிப்பூண்டியிலிருந்து குளச்சல் வரை பல்வேறு விதமான விவசாய நில அமைப்புகள் உள்ளன. அவற்றை விவசாயிகளுக்குப் பொருளியல் பலன்கள் அளிக்கும் விதத்தில் எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து தமிழ்நாட்டின் எந்த அரசுக்கும் கடந்த 54 ஆண்டுகளாக எந்த அக்கறையும் இல்லை. இவ்வாறு திட்டமிடப்பட்டால் பொருளியல் நிலை முன்னேறும் என்ற புரிதலும் விவசாயிகளிடம் இல்லை.
தமிழ்நாட்டின் மக்கள் நலனில் திராவிடக் கட்சிகளுக்கு அக்கறை இருக்குமானால் அவர்கள் இங்கே தனிப்பட்ட ஒவ்வொரு விவசாயிக்கும் பொருளியல் வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய விஷயங்கள் குறித்து யோசிப்பார்கள். அவ்வாறான ஒரு தனிப்பட்ட கவனத்தை நிச்சயம் செலுத்த முடியும். அதற்கான அமைப்பும் படிநிலைகளும் அரசாங்கத்திடம் உள்ளன. எனினும் அவ்வாறான ஒரு பார்வையே இங்கே எழாது.
தமிழ்நாட்டு மக்களின் - ஒவ்வொரு விவசாயியின் பொருளியல் நிலை இப்போது இருப்பதைப் போலவே இருந்தால் மட்டுமே திராவிடக் கட்சிகளால் அரசியல் செய்ய முடியும். நெல்லை அரசாங்கம் விலைக்கு வாங்குகிறது. கோடிக்கணக்கான விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதால் அதற்கு நல்ல விலை கொடுக்க முடியாது. நூலிழை லாபத்தில் விவசாயம் நடக்கும். விவசாயி எப்போதும் அரசாங்கத்தை எதிர்பார்த்து பெற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருப்பான்.
இங்கே விவசாயிகள் விவசாயத்தை லாபகரமாக செய்ய வேண்டும் என்றால் கல்வி, சட்டம் - ஒழுங்கு, நீர் மேலாண்மை, கூட்டுறவு, நிதி ஆகிய துறைகளில் அடிப்படையான மாற்றங்கள் நிகழ வேண்டும். அவ்வாறு நிகழும் போது மட்டுமே விவசாயிகள் , விவசாயத் தொழிலாளர்கள் அனைவரும் பயன் பெறுவார்கள். இப்போது செயலாகும் முறை விவசாயிக்கும் உகந்ததாக இல்லை. விவசாயத் தொழிலாளருக்கும் உகந்ததாக இல்லை.
நம் நாடு சுதந்திரம் அடைந்த போது இயந்திரமயமாக்கலை மட்டுமே முழுமையாக நம்பிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் கொள்கை வகுத்தனர். இந்தியாவில் பாரம்பர்யமான லட்சக்கணக்கான செயல்முறைகள் உள்ளன. அவை பிராந்திய ரீதியில் - மாவட்ட அளவில் - கிராமங்கள் அளவில் என பயன் தரத் தக்கவையும் கூட.
சோழர்கள் காலத்தில் நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு பெரும் முக்கியத்துவம் அளித்தனர். இன்று இருக்கும் இயந்திரங்களைக் கொண்டு ஒவ்வொரு கிராமத்திலும் புதிதாக நான்கு குளங்களை வெட்ட முடியும். தமிழ்நாட்டில் ஒரு மாதத்தில் 50,000 குளங்கள் உருவாக்கிட முடியும். அதில் எத்தனை லிட்டர் தண்ணீரை சேர்க்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும்.
அவ்வளவு நிதி அரசாங்கத்திடம் கிடையாது என்பது பதில். தனியார் நிதி உதவி செய்து அந்த கிராம ஊராட்சியிடமிருந்து வருடத்துக்கு இவ்வளவு தொகை என குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வசூலித்துக் கொள்ள அனுமதிக்கலாம். செய்ய வேண்டும் என நினைத்தால் எண்ணற்ற வழிகள் உண்டு.