ராஜாஜி அவர்களிடம் ஒருமுறை ஒரு ஆலோசனை கேட்கப்பட்டது. ‘’ஒரு விஷயத்தைச் செய்வதா வேண்டாமா என்று ஆழ்ந்த சஞ்சலம் ஏற்பட்டால் எவ்வாறு முடிவெடுப்பது?’’ என்பது கேள்வி. ராஜாஜி அதற்கு ஒரு பதில் சொன்னார். ‘’அந்த விஷயம் குறித்து கம்யூனிஸ்டுகளிடம் கேளுங்கள். அவர்கள் அதைச் செய்யக் கூடாது என்று சொன்னால் உடனே செய்யுங்கள். அவர்கள் அதைச் செய்ய வேண்டும் என்று சொன்னால் எந்நிலையிலும் செய்யாதீர்கள்.’’ கட்டுமானத் தொழிலில் தச்சர்கள், எலெக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கம்பி வேலையாளர்கள் என பல பிரிவுகள் இருந்தாலும் தொழில்முறை உறவில் இவர்கள் எவருடனும் பெரிதாக எந்த உரசலோ மோதலோ நிகழாது. கொத்து வேலை நிகழ்கிறது என்றால் அங்கே இறுக்கமான சூழ்நிலையே நிலவும். அதற்கு ஒரு காரணம் உண்டு.
கட்டுவேலை என்பது சிமெண்ட் கலவை கொண்டு செய்யப்படுவது. கலவை சிமெண்ட் மணல் தண்ணீர் மூன்றும் கலந்து உருவாக்கப்படுவது. கலவையைப் பயன்படுத்தி கட்டுவேலை செய்தால் அடுத்த ஒரு வாரம் அது முழுக்க தளும்ப தளும்ப தண்ணீரால் நனைக்கப்பட வேண்டும். சுவரின் வலிமை என்பது கலவையால் 15 சதவீதம் ; அதன் பின் ஒரு வாரம் நிகழும் கியூரிங்-ஆல் 85 சதவீதம். கொத்து வேலை செய்பவர்கள் சுவரை எழுப்பியதுடன் தம் வேலை முடிந்தது என்று இருப்பார்கள். அவர்களை கியூரிங் செய்ய வைக்க வேண்டும். கியூரிங் என்பது ஹோஸ் பைப்பால் சுவர் முழுதும் நனைவது போல தண்ணீர் பிடிப்பது தான். எனினும் அதைச் செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
கட்டுவேலை மற்றும் பூச்சுவேலை நடக்கும் போது பணியிடம் குடகுச் சாரல் போல நீர் மிகுந்து இருக்க வேண்டும் என்று நான் விரும்புவேன். பணியாளர்கள் அது சஹாரா பாலைவனம் போல் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். நான் கடுமையாக எதிர்வினையாற்றி முழுமையான கியூரிங்-ஐ உறுதி செய்வேன்.
பணியிடத்தின் காவலர் தான் காலை 7 மணிக்கெல்லாம் கியூரிங் செய்பவர். கொத்து வேலை செய்பவர்கள் பணியிடம் வந்து வேலை துவங்க 9 மணி ஆகும். எனவே காவலர்தான் கியூரிங் செய்வார். தொழிலாளர்கள் அவரிடம் பொறியாளர் எப்போது வந்து கேட்டாலும் தண்ணீர் பிடித்து விட்டதாகக் கூறுங்கள் ஆனால் தண்ணீர் பிடிக்காதீர்கள் என்று சொல்லி வைப்பார்கள். ஆனால் நான் பணியிடத்துக்கு காலை எழுந்ததுமே சென்று விடுவேன். என் முன்னிலையில் முழுமையாக தண்ணீர் பிடிக்க சொல்லி விடுவேன். பணியாளர்கள் வந்து பார்த்தால் ஒரே தண்ணீராக இருக்கும். அதிருப்தி அடைந்து விடுவார்கள். காவலரிடம் நான் இல்லாத போது கடுமையாக எதிர்வினையாற்றுவார்கள். மாலை பணி முடிந்து பணியாளர்கள் வீட்டுக்கு சென்று விட்டு சொந்த வேலை காரணமாக பணியிடம் பக்கம் வந்ததாகவும் அப்போது பணியிடத்தில் தளவாடங்கள் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கிறதா என உறுதி செய்ய உள்ளே வந்ததாகவும் காவலர் அப்போது அங்கே இல்லை என்றும் சொல்வார்கள். அவ்வாறு சொன்னால் அந்த காவலர் சரியாக கியூரிங் செய்கிறார் என்று அர்த்தம்.
மேற்கூரை பூச்சு வேலை நடக்கும் போது பத்து அடி உயரத்தில் இருக்கும் கூரைப் பரப்பு கியூரிங் செய்யப்பட வேண்டும். அதற்கு அதிகமாக த்ண்ணீர் ஆகும். அது தரையில் தேங்கி நிற்கும். அதனால் தரைப்பரப்பை லேசாக நனைத்து விட்டு கூரையை கியூரிங் செய்யாமல் இருப்பார்கள். பணியிடம் வந்ததும் நான் கேட்கும் முதல் கேள்வி கியூரிங் செய்தீர்களா என்பதே. செய்து விட்டோம் என்று தரையைப் பார்ப்பார்கள். கூரையின் அடிப்பரப்பில் செய்திருந்தால் அவர்கள் கண்கள் மேல் நோக்கும். என் கண் முன்னால் மீண்டும் ஒருமுறை கியூரிங் செய்யுங்கள் என்பேன்.
பணியிடத்தில் என்னென்ன நிகழும் யார் என்ன சொல்வார்கள் என்பது நன்றாகத் தெரியும் என்பதால் இயல்பாக கடந்து சென்று விடுவோம். பாரதியின் கண்ணன் பாட்டில் ‘’கண்ணன் என் சேவகன்’’ என்ற பாடல் உள்ளது. அதில் சில வரிகளை கீழே தந்துள்ளேன்.
--------- --------------- ---------------- -------------------- -------
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
'ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
பாரதியார் காலத்திலேயே இப்படித்தான் இருந்திருக்கிறது என எண்ணிக் கொண்டேன்.